தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், தேசிய தலைவர்கள் பலரும் மாநிலத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தால் தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி:
அதிமுகவுடன் சேராமல் பாஜக தலைமையில் புதிய கூட்டணி களத்தில் நிற்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 6 முறை தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்காக வந்துள்ளார். இதுவரை இல்லாத வழக்கமாக கோவை, வேலூர், சென்னை ஆகிய நகரங்களில் ரோட் ஷோ நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்ததாக ஏப்ரல் 15-ம் தேதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நெல்லைக்கு வர திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் நெல்லை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரம் அக்கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி:
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து 2 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, இன்றுதான் முதல் முறையாக பிரச்சாரத்துக்கு வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் பிரச்சாரத்தை வைத்தே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையால் அவர் தமிழகத்தில் அதிகம் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று மாலை ராகுல் காந்தி நெல்லை வருகிறார். அவர் இந்தியா கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென் மாவட்டங்களைச் சேர்ந்த 8 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு கோவையில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் ராகுல்காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்கிறார்கள். அப்போது ‘இந்தியா’ கூட்டணி சார்பில் கோவையில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாருக்கும், பொள்ளாச்ச்சியில் போட்டியிடும் ஈஸ்வரமூத்திக்கும் அவர்கள் வாக்கு கேட்க உள்ளனர். கோவையில் அண்ணாமலை தரப்பினரின் பிரச்சாரம் ஏற்கெனெவே சூடு பிடித்துள்ள நிலையில், இன்றைய கூட்டம் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு உற்சாக டானிக்காக மாறும் என்று கருதப்படுகிறது.
அமித் ஷா:
அதிமுக கூட்டணியை அண்ணாமலை முறித்த்தால், அவர் மீது ஆரம்பத்தில் வருத்தத்தில் இருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதனாலேயே ஆரம்ப காலகட்ட்த்தில் இங்கு பிரச்சாரம் செய்வதை தவிர்த்தார். உடல்நிலையை அதற்கு காரணமாக கூறினார். இந்த சூழலில் தமிழக பாஜக தலைமை தொடர்ந்து வலியுறுத்தியதால் அமித்ஷா இன்று மதுரைக்கு வருகிறார். மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு பிறகு அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார்.
மல்லிகார்ஜுன கார்கே:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15-ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
நிர்மலா சீதாராமன்:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிரச்சாரத்துக்காக ஒசூர் வருகிறார். இன்று மாலையில் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து சிதம்பரம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
தேசிய தலைவர்களின் இந்த சூறாவளி பிரச்சாரத்தால் தமிழகத்தில் தேர்தல் ஜுரம் அதிகரித்துள்ளது.,