சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் விழாக் கோலத்தில் இருக்கிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய 46ஆவது சென்னை புத்தகக் காட்சி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த புத்தகக் காட்சி எப்படி இருந்தது? அதிகம் விற்பனையான புத்தகங்கள் என்ன? வாவ் தமிழா யூ டியூப் சேனலுக்காக சில ஸ்டால் உரிமையாளர்களுடன் பேசினோம். அவர்கள் பதில்கள் இங்கே…
லோகேஷ் கனகராஜின் நான்கு திரைக்கதைகள்
செல்வமணி, பேசா மொழி பதிப்பகம்
சென்னை புத்தகக் காட்சியில் சினிமாவுக்கு என்றே இருக்கும் ஒரே அரங்கு பேசாமொழி ஸ்டால்தான். லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய நான்கு திரைக்கதைகளை நூலாக நாங்கள் வெளியிட்டுள்ளோம். இந்த புத்தகக் காட்சியின் டாப் செல்லராக இந்த நான்கு புத்தகங்கள்தான் இருக்கும். அந்தளவு இளைஞர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு உள்ளது. மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைக்கதை நூலும் வேகமாக விற்பனையானது. ஸ்டோரி டிஸ்கசன், ஸ்டோரி போர்ட் உட்பட அந்த படத்தை பற்றிய முழுமையான ஒரு புத்தகம் இது. இதுபோல் ‘96’ திரைக்கதையையும் வெளியிட்டுள்ளோம். ‘96’ இயக்குநர் பிரேம்குமார், மிஷ்கின், இயக்குநர் வசந்த் போன்ற பல சினிமா ஆளுமைகளும் ஸ்டாலுக்கு வந்து பாராட்டினார்கள். அது எங்களுக்கு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்தது.
இளைஞர்களை கவர்ந்த பெரியார், அம்பேத்கர் நூல்கள்
தம்பி, நன்செய் பதிப்பகம்
பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை பாலின சமத்துவத்துக்கான ஒரு கருத்து பிரசாரமாக 2018இல் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்டோம். மூன்று மாதங்களில் ஒரு லட்சம் பிரதிகள் மாணவர்கள் மத்தியில் மட்டுமே விற்பனையானது. அதைத் தொடர்ந்து நிறைய பெரியாரியம், அம்பேத்கரியம் சார்ந்த நூல்களை மலிவு விலைப் பதிப்புகளாக வெளியிட்டோம். மனு சாஸ்திரத்தில் பெண்கள், சூத்திரர்கள் பற்றிய பகுதிகளை மட்டும் எடுத்து சிறு நூலாக வெளியிட்டோம். அதன் விற்பனையும் ஒரு லட்சம் பிரதிகளை நெருங்குகிறது. அரசியல் கருத்து சார்ந்த நூல்களை மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளையும் இதுபோல் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று கடந்த வருடம் புதுமைப் பித்தன் சிறுகதைகள் முழுத் தொகுப்பையும் 100 ரூபாய்க்கு கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை 27 ஆயிரம் பிரதிகள் விற்றுள்ளது. அதுபோல் இந்த வருடம் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய படைப்பான மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை 150 ரூபாய்க்கு கொடுக்கிறோம். உலகளவில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தங்களுக்காக மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க 5-10 என மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள். அடுத்த வருடம் லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
பா ரஞ்சித், மிஷ்கின் சப்போர்ட் – திருநர்கள் உற்சாகம்
கிரேஷ் பானு, Queer Publishing House
தமிழ்நாட்டில் மட்டும் 20 திருநர் எழுத்தாளர்கள் இருக்காங்க. ஆனால், அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சென்னை புத்தகக் காட்சியில் ஒரு ஸ்டால் எடுக்க 45 வருடங்கள் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் நமக்கான ஒரு தளத்தை, இடத்தை நாமதான் உருவாக்கிக்கொள்ளனும் என்று இந்த பதிப்பகத்தை தொடங்கியுள்ளோம். தமிழில் எழுதும் திருநர் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களது நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்க செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இதை செய்கிறோம். இந்த புத்தக காட்சியில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட வாசகர்கள் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இயக்குநர்கள் பா. ரஞ்சித், மிஷ்கின், டிஜிபி சைலேந்திர பாபு உட்பட பலர் எங்கள் ஸ்டாலுக்கு வந்து ‘தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள்’ என்று உற்சாகப்படுத்தினார்கள். அடுத்த வருடம் புத்தகக் காட்சியில் இன்னும் நிறைய புத்தகங்களுடன் வரவேண்டும் என்ற ஊக்கத்தை அது எங்களுக்கு கொடுத்துள்ளது.
தொடரும்