No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

ரங்க மார்த்தாண்டா (Ranga Marthanda – தெலுங்கு) – அமேசான் ப்ரைம்

சில வருடங்களுக்கு முன் விசு எடுத்த ‘வரவு நல்ல உறவு’ படத்தின் கதையில் ஒரு நாடகக் கலைஞரின் வாழ்க்கையையும் இணைத்து ‘ரங்க மார்த்தாண்டா’ படத்தை எடுத்திருக்கிறார்கள். கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இப்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது.

ஆந்திராவின் புகழ்பெற்ற நாடக நடிகரான ராகவ ராவ் (பிரகாஷ் ராஜ்), தான் புகழின்  உச்சியில் இருக்கும்போதே குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க   ஓய்வை அறிவிக்கிறார். மனைவியின் (ரம்யா கிருஷ்ணன்) அறிவுரைகளை கேட்காமல்  சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் பிரித்துக் கொடுக்கிறார்.  ஆனால் காலம் செல்லச் செல்ல, அவர்கள்  பிரகாஷ் ராஜையும், ரம்யா கிர்ஷ்ணனையும் உதாசீனப்படுத்துகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.

ஆக்ரோஷமான நாடக நடிகராகவும், அமைதியான அப்பாவாகவும் மாறுபட்ட நடிப்பைத் தந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ரம்யா கிருஷ்ணனும் அவருக்கு ஈடுகொடுக்கிறார். பல தெலுங்கு படங்களில் காமெடியனாக நடித்த பிரம்மானந்தம், இப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை அழவைக்கிறார்.  இந்த மூவரின் நடிப்பையும் தாண்டி ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம்  இளையராஜாவின் இசை.  அதிலும் சோகமான சூழல்களில் அவரது குரலில் வரும் பாடல்கள் கண்களை ஈரமாக்குகின்றன.


புர்கா (Burqa -தமிழ்)  – ஆஹா

ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான உரையாடல்கள்தான் ‘புர்கா’.

நஜ்மா, நிக்காஹ் ஆன சில நாட்களிலேயே கணவரை இழந்த இளம்பெண். இஸ்லாமைப் பின்பற்றும் நஜ்மா, தனது கணவரை இழந்ததால், ’இத்தா’வை பின்பற்றும் சூழலில் இருக்கிறாள்.

ஒரு நாள் அவளது மாமனார், மாமியார் வெளியூருக்குச் சென்ற நிலையில், சென்னையில் ஊரடங்கு போடப்படுகிறது. இதனால் அவள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள்.

அப்போது, வயிற்றில் கத்தி குத்துப்பட்டு ஒரு வாலிபன் அவளது வீட்டின் முன் விழுந்து மயக்கமாகிறான். மறுபக்கம், போலீஸ் தேடல் வேட்டையை நட த்திக் கொண்டிருக்கிறது. உயிருக்குப் போராடும் அவனை, மனிதாபிமான அடிப்படையில் தனது வீட்டிற்குள் இழுத்து வந்து சிகிச்சை அளிக்கிறாள் நஜ்மா.

மயக்கம் தெளிந்த அந்த வாலிபன், பகலில் வெளியே செல்ல முடியாத சூழல். இதனால் நஜ்மா அவனை இரவில் வெளியே செல்லுங்கள் என்கிறாள். இரவு வரை அவனும் அவளும் அந்த வீட்டில் தனியாக இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே தொடங்கும் உரையாடல், பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. இந்த கேள்விகள் விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்பட்ட பிறகும், பல நூறாண்டுகளுக்கு முன்பாக பின்பற்றிய விஷயங்களை பின்பற்றதான் வேண்டுமா. பெண்கள் தங்களுக்கான உணர்வுகளை, எதிர்பார்புகளை, ஆசைகளை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டுமா என்று கேட்கிறான்.

வெறும் 80 நிமிடங்கள்தான் படம். ஆனால் இன்று சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. படம் முழுவதும் பார்த்தால், இந்த சர்ச்சைகளில் உங்களது நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஆஹா ஒடிடி தளத்தில் இதைப் பார்க்கலாம்.


பிரணய விலாசம் (Pranaya Vilasam – மலையாளம்) – ஜீ5

வீட்டில் சதா முறைத்துக்கொண்டிருக்கும் அப்பா – மகன். அவர்களை இணைக்கும் ஒரே புள்ளி அம்மா.  வீட்டில் தங்கள் தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்ளும் அம்மாவை இருவரும் சட்டை செய்வதில்லை. காதலியுடன் மகனும், தன் இளமைக்கால காதலியுடன் அப்பாவும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அம்மா இறந்து விடுகிறார். இறந்துபோன அம்மாவின் டைரியை வைத்து அவருக்கு காதலன் இருந்தது இருவருக்கும் தெரியவருகிறது. அந்த காதலனைத் தேடி அப்பாவும் மகனும் செல்லும் பயணம்தான் படத்தின் மையக் கரு.

அதிக ஆரவாரம் இல்லாத, அதிக சோகக் காட்சிகள் இல்லாத மென்மையான சிரிப்புடனேயே ஒரு முழுப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இப்படத்தை கட்டாயம் பார்க்கலாம். அர்ஜுன் அசோகன், மியா ஜார்ஜ், ஹகிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.


தலைக்கூத்தல் (Thalaikoothal – தமிழ்) – நெட்பிளிக்ஸ்

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கலையரசன், வசுந்தரா உள்ளிட்ட பலர் நடித்த தலைக்கூத்தல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

உடல்நலமில்லாமல் கோமா நிலையில் இருக்கும் தன் தந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார் மகன் சமுத்திரக்கனி.  மனைவியும் உறவினர்களும் அப்பாவை கருணைக் கொலை செய்யுமாறு சொல்லியும், அதைக் கேட்காமல் தன் தந்தை மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் அவரை பார்த்துக்கொள்கிறார். வறுமையும், உறவினர்களின்    வற்புறுத்தலும் அதிகமாக கடைசியில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

செண்டிமெண்ட் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம்.          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...