கண்ணை நம்பாதே (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த மாதம் வெளியான படம் கண்ணை நம்பாதே. இப்படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒரு இரவில் முன்பின் தெரியாத பெண்ணுக்கு உதவுகிறார் உதயநிதி. ஆனால் அடுத்த நாள் அவரது காரில் அந்தப் பெண் பிணமாகக் கிடக்கிறாள். இதனால் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து உதயநிதி எப்படி தப்புகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வீக் எண்டில் பரபரப்பான சஸ்பென்ஸ் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
பூவன் ( Poovan – மலையாளம்) – ஜீ5
அற்ப விஷயங்களை வைத்து பிரமாதமான படங்களை எடுப்பது மலையாள சினிமாவின் சிறப்பம்சம். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பூவன். இதில் சேவலை மையப்படுத்தி கதை நகர்கிறது. வினீத் வாசுதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், வினீத் வாசுதேவன் என அதிகம் முகம்தெரியாத நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஹரி என்ற இளைஞன் விளையாட்டாக வேட்டையாடும்போது பறந்துகொண்டிருக்கும் ஒரு கழுகைச் சுடுகிறான். அப்போது அந்த கழுகு, தன் நகங்களில் பற்றியிருக்கும் ஒரு கோழிக் குஞ்சை கீழே போட்டு விடுகிறது. அந்த கோழிக் குஞ்சு பக்கத்து வீட்டில் விழுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்த கோழிக் குஞ்சு கிடைத்ததால் அதை கடவுளின் அனுக்கிரகமாக அந்த வீட்டில் உள்ளவர்கள் கொண்டாடுகிறார்கள்.
அந்த கோழிக்குஞ்சு மிகப்பெரிய சேவலாக பக்கத்து வீட்டில் வளர்கிறது. ஒரு கட்டத்தில் அதன் கூடு ஹரியின் படுக்கை அறை அருகே அமைக்கப்படுகிறது. இரவில் நேரம் காலம் பார்க்காமல் கூவும் அந்த சேவலால் ஹரியின் துக்கம் கெடுகிறது. துக்கமின்மை மற்றும் அதைச் சார்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஹரி, பக்கத்து வீட்டில் இருந்து சேவலைத் துரத்த முயற்சிக்கிறார். அவரால் சேவலைத் துரத்த முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
நாயகனுக்கும், சேவலுக்கும் இடையிலான போட்டியின் நடுவில் கொஞ்சம் காதல், கொஞ்சம் குடுமப் பிரச்சினைகள், கொஞ்சம் நட்பு என்ரு பின்னிப் பிணைந்திருக்கிறார்கள்.
முக்தி பவன் (Mukti Bhawan – இந்தி) – ஹாட்ஸ்டார்
புண்ணிய நகரமான காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களில் ஒரு சிலரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாசிஷ் புடியானி. உசேன், லலித் பெஹ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஹாட்ஸ்டாரில் காணலாம்.
தன் இறுதிக் காலம் நெருங்கிவிட்டதாக நினைக்கும் தயா என்ற முதியவர் வாரணாசிக்கு செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் 50 வயதான அவரது மகன் ராஜீவுக்கு அவரை தனியாக அனுப்ப பிடிக்கவில்லை. சாகும்வரை அவருடன் இருக்க நினைத்து வேலைக்கு லீவ் போட்டுவிட்டு செல்கிறார். வாரணாசியில் பிரார்த்தனைகள், அரட்டைகள் என அப்பா நிம்மதியாக இருக்க, வீட்டு நினைவுகள், ஆபீஸில் இருந்து வரும் நிர்ப்பந்தங்களால் ஹரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அப்பாவை மரணமும் நெருங்குவதாக இல்லை.
இந்த சூழலில் மகனை ஊருக்கு திரும்பிச் செல்லுமாறு கூறுகிறார் தயா. மகன் திரும்பிச் சென்றானா?.. தயா வாரணாசியில் இறந்தாரா என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது படம்.
மசாலா படங்களுக்கு நேர்மாறாக எந்த சலனமும் இல்லாமல் கதை நகர்கிறது. அவார்ட் படங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.
கப்ஸா ( Kabzaa – கன்னடம்) – அமேசான் ப்ரைம்
கேஜிஎப் படத்துக்கு பிறகு கன்னட படங்களின் மீது இந்திய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படம்தான் கப்ஸா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இப்படம் இப்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.
அண்ணனின் படுகொலைக்கு பழிவாங்கப்போய், தாதாவாக உருவெடுக்கும் ஒரு நாயகனின் கதைதான் கப்ஜா. 1945 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.