ஜவான் ( Jawan – இந்தி) – நெட்பிளிக்ஸ்
கோலிவுட்டில் 4 ஹிட் படங்களைக் கொடுத்த அட்லியின் முதல் இந்திப் படம் ஜவான். ஷாரூக்கான், சஞ்சய் தத், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி என பல முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட இப்படம் தியேட்டரில் பெரும் வெற்றி பெற்றது. வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்த நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஆயுத விற்பனையில் நடந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் ராணுவ வீர்ரான ஷாரூக்கான். இதனால் நஷ்டத்துக்கு உள்ளாகும் ஆயுத வியாபாரியான விஜய் சேதுபதி, சதி செய்து ஷாரூக்கானுக்கு தேசத் துரோகி என முத்திரை குத்துகிறார். அவரை துப்பாக்கியால் சுட்டு பறக்கும் விமானத்தில் இருந்து கீழே தள்ளுகிறார். மலைக்கிராம மக்களால் காப்பாற்றப்படும் ஷாரூக்கான், தான் யார் என்பதை மறந்து வாழ்கிறார். சில ஆண்டுகள் கழித்து உள்ளூரில் ஜெயிலராக இருக்கும் ஷாரூக்கானின் மகன் (இதுவும் ஷாரூக்தான்) தன் அப்பாவை சதிவலையில் சிக்கவைத்த விஜய் சேதுபதியை பழிவாங்க சில பெண் கைதிகளுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அவரால் விஜய் சேதுபதியை பழிவாங்க முடிந்ததா? அப்பா ஷாரூக்குக்கு பழைய நினைவுகள் வந்ததா என்பதுதான் படத்தின் கதை.
சில காட்சிகள் பழைய தமிழ்ப்படங்கள் சிலவற்றை நினைவுபடுத்தினாலும், படத்தை கடைசிவரை விறுவிறுப்பாக கொண்டுபோயிருக்கிறார் அட்லி. வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, நாயகன் ஷாரூக்குக்கு இணையாக ரசிகர்களை கவர்கிறார்.
கொரோனா தவான் (Corona Dhavan – மலையாளம்) – அமேசான் ப்ரைம்
கொரோனா, வெள்ளம், நிஃபா வைரஸ் தாக்குதல், மலைச்சரிவு, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என தங்கள் வாழ்க்கையை பாதித்த விஷயங்களை படமாக எடுப்பதில் மலையாள திரைக்கலைஞர்கள் வல்லவர்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியான படம் கொரோனா தவான். இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் லாக்டவுனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் குடி நோயாளிகளும் அடக்கம். தினசரி குடிக்கும் பலரும் கொரோனா காலகட்டத்தில் மது கிடைக்காமல் திண்டாடினர். அப்படி மதுவுக்காக திண்டாடிய ஒரு கேரள கிராமத்தின் கதையை இப்படம் நகைச்சுவையுடன் சொல்கிறது. ஒரு பாட்டில் மதுவை போலீஸாருக்கு தெரியாமல் கடத்துவது முதல், மது கிடைக்காததால் தேவலயத்துக்கு சென்று பாதிரியாரிடம் ஒயின் கேட்பது வரை பல காட்சிகள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக நாயகன் 30 மதுபாட்டில்களை கடத்திச் செல்லும் காட்சி, விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கூழாங்கல் (தமிழ்) – சோனி லைவ்
காக்கா முட்டை, குற்றம் கடிதல் பாணியில் தமிழில் வெளியாகியிருக்கும் புதிய தமிழ் படம் ‘கூழாங்கல்’. விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவியை வீட்டுக்கு அழைத்துவர மகனுடன் புரப்பட்டு செல்கிறார் குடிகார கணவரான கறுத்தடையான். இந்த பயணத்தின் நடுவில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. மிக எளிதான கதையை சுவாரஸ்யமான, யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் ஆக்ஷன், காதல் டைப் படங்களை பார்த்து பழகிய நமக்கு இப்படத்தை பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.
மேன்ஷன் 24 ( Mansion 24 தெலுங்கு வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
ஓம்கர் இயக்கியிருக்கும் ‘மேன்ஷன் 24’ வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கொரியப் படைப்பான ‘Ghost Mansion’ என்ற படத்தை நம் ஊருக்கு ஏற்றார்போல் மாற்றி இந்த வெப் சீரிஸை எடுத்துள்ளனர். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சிக்காக ஒரு மேன்ஷனுக்கு செல்லும் சத்யராஜ், அங்கு காணாமல் போகிறார். அவர் முக்கியமான சில பொக்கிஷங்களை திருடிவிட்டு சென்றதாகவும், அவர் ஒரு தேச துரோகி என்றும் செய்தி பரவுகிறது. இந்த சூழலில் சத்யராஜை நிரபராதி என்று நிரூபிக்க, அவரை தேடும் பணியில் ஈடுபடுகிறார் வரலட்சுமி சரத்குமார்.