No menu items!

’வெற்றிகரமான’ சினிமா எடுப்பது எப்படி?

’வெற்றிகரமான’ சினிமா எடுப்பது எப்படி?

திரைப்படத்தை வெற்றிகரமாக எடுப்பதற்கும், வெற்றிகரமான திரைப்படம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசத்தையும், யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல், புதிய படைப்பாளிகள் மட்டுமல்லாமல் முன்னணி இயக்குநர்களும் படமெடுக்கும் போதுதான் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் தோல்வியடைவதோ, வசூலை குவிக்க முடியாமல் தடுமாறுவதோ அல்லது படம் வெளியாவதில் சிக்கல்களை எதிர்க்கொள்வதோ நடக்கின்றன.

குறைந்த பட்ஜெட்டில், அறிமுக இயக்குநர்கள், புதிய நட்சத்திரங்கள், முதல்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் என களமிறங்கும் பெரும்பாலானோர்களின் முதல் படம் முழுமையடைவது இல்லை அல்லது தணிக்கை ஆகியும் வெளியாவது இல்லை. அதேநேரம் முன்னணி நட்சத்திரங்கள், பிரபல இயக்குநர் என்ற கூட்டணியில் உருவாகும் படங்களும் வெளியாவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இதில் நிதி பிரச்சினைகள்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும். தயாரிப்பாளர் நட்சத்திரத்தை நம்பி இறக்கும் பட்ஜெட்டுக்கேற்ற வர்த்தகம் நடைபெறாமல் போனாலும் வெளியாவதில் தாமதம் ஏற்படும்.

அப்படியானால் வெற்றிகரமான படம் என்றால் என்ன?

க்ளிஷே அதிகமில்லாத கதை. அதற்கேற்ற தெளிவான திரைக்கதை. த்ரில்லர், ஹாரர், மெலோ ட்ராமா, ரொமான்டிக் காமெடி, ஸ்பை மூவி என எந்த வகை படமாக இருந்தாலும் சரி, படம் முழுவதிலும் அதன் வீச்சு முழுமையாக இருக்கும் வகையில் சொல்லும் தைரியம், சலிப்படையாத வகையில் படம் பார்க்க வைக்கும் ரன்னிங் டைம். இயக்குநரின் மனதிற்குள் இருப்பதை திட்டமிட்டு, விரைவாக எடுக்கும் சாமர்த்தியம் என 5 அம்சங்களுக்குள் அடக்கிவிட முடியும்.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

தயாரிப்பாளர் படமெடுக்க வேண்டுமென தீர்மானிக்கும் போதே, ஒரு படத்தின் கதை, முழுமையான திரைக்கதை மற்றும் வசனம், கதாபாத்திரங்களுக்குப் பொருந்துகிற நட்சத்திரங்கள் விவரம், தொழில்நுட்ப வல்லுநர்கள் விவரம், மொத்த ஷூட்டிங் நாட்கள், படமெடுக்க அவசியமான இடங்கள், ப்ரீ மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் நாட்கள் என ஒரு படம் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ‘பவுண்டட் ஸ்கிரிப்ட்’ (Bounded Script) இருக்கிறதா என்பதை அறிந்துகொண்ட பின்னரே அடுத்தக்கட்டத்திற்கு போக வேண்டியது மிக மிக அவசியம். ’படத்தோட ஒன் லைன் மட்டும் இருக்கு. டிஸ்கஷனுக்கு உட்கார்ந்தா, திரைக்கதை, வசனத்தை உடனே முடிச்சிடலாம். அப்புறம் ஆர்டிஸ்ட்டை பேசிடலாம்’ என ஒரு இயக்குநர் சொல்வாரானால், அங்கேயே தயாரிப்பாளருக்கான தலைவலியும் வீண் செலவும் ஆரம்பம்.

அடுத்ததாக இயக்குநர் தனக்கென இரண்டு உதவி இயக்குநர்களை மட்டும், ஆரம்பத்திலிருந்து படம் முடிந்து வெளியாகும்வரை தன்னுடனேயே வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமான முடிவாகும். ஆரம்பம் முதல் இருப்பதால், கதை மற்றும் திரைக்கதை, காட்சியமைப்பு, காட்சிகளின் தொடர்ச்சி என அனைத்திலும் ஒரு புரிதல் இருக்கும். முக்கியமாக, இப்படத்திற்கு முடிவு செய்து வைத்திருக்கும் காட்சிகளோ அல்லது நகாசு அம்சங்களோ அல்லது கதையோ திருடுப் போய் வேறுப்படங்களிலிலோ அல்லது சின்னத்திரை நாடகங்களிலிலோ இடம்பெறுவதை இதன் மூலம் தடுக்க முடியும்.

படத்தின் கதைக்கு சுவாரஸ்யம் அளிக்கும் திரைக்கதையையும், அதற்கு வலுச்சேர்க்கும் வசனங்களையும் மேலும் சுவாரஸ்யப்படுத்திய பிறகு, அப்படத்தின் இயக்குநர் அதை எவ்வளவு மணிநேரம் ஓடக்கூடிய படமாக இருக்கும் என்பதை துல்லியமாக தீர்மானிக்கவேண்டும். இதற்கு ஒவ்வொரு காட்சியும் இவ்வளவு நொடிகள் அல்லது நிமிடம்தான் இருக்கவேண்டுமென்பதை தீர்மானிக்கக்கூடிய திறன் கட்டாயம் தேவை. அப்படி திட்டமிடும் போது, காட்சிகளின் நேரத்தை இணைத்துப் பார்க்கும்போது படம் இரண்டு அல்லது இரண்டேகால் மணி நேரத்திற்கு மேல் வருமென தோன்றினால், அங்கேயே வர்ச்சுவல் எடிட் செய்யவேண்டியது அவசியம். இத்தகைய சூழ்நிலையில் அப்படத்தின் இயக்குநர் ஈகோ எதுவும் பார்க்காமல், படத்தின் எடிட்டரை அழைத்து கதையை ஒவ்வொரு காட்சிகளாக விவரித்து சொல்லலாம். அதிலேயே எது தேவை, எது திராவை என எடிட்டருக்கு தெரிந்துவிடும். இதனால் பல நாட்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஷூட் பண்ணிய காட்சிகளை கடைசி நேரத்தில் தூக்கியெறிந்து, தயாரிப்பாளரின் வயிற்றெரிச்சலைக் கொட்டி கொள்ளாமல் தவிர்க்கலாம்.

கதை, திரைக்கதை அம்சங்கள் முடிந்ததும், லொகேஷன்களை தீர்மானிக்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநரை இயக்குநர் தன்னோடு அழைத்துச் செல்வது மிக அவசியம். புதியவர்களில் பலர் இதை தன்னுடைய திறமையைக் குறைத்துக் காட்டுவதாக நினைத்துகொண்டு, அவர்களாகவே லொகேஷன்களை முடிவு செய்கிறார்கள். எந்தக் காட்சியை எப்படி எடுப்பது, எந்த லொகேஷனில் செட் தேவை, எதற்கு ப்ராபர்ட்டி தேவை என்பதை அப்பொழுதே முடிவு செய்துவிட்டால் இங்கேயும் பணம் மிச்சம்.

இந்த வேலைகள் நடக்கும் போதே, பாடலாசிரியரிடம் முழுக்கதையையும், பாடல் இடம்பெறும் பகுதியின் விவரங்களையும் கூறி பாடலைக் கேட்டுவாங்கலாம். ட்யூனுக்கு வரிகள் உட்காராத சூழ்நிலையில், பாடல் வரிகளுக்கு இசையமைக்கச் சொல்வது நேரத்தையும், செலவையும் சேமிக்கும். இசையமைப்பதற்கு ’பட்டயா’ போனால் தூள் ‘கிளப்பும்’ என்பதெல்லாம் ஒரு பில்டப் செலவு மட்டுமே. மனதை இன்றும் வசியம் செய்யும் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, போன்றவர்களின் இசை, வடபழனி, சாலிக்கிராமம் பகுதிகளில் இருக்கும் ஸ்டூடியோக்களில் கம்போஸ் செய்யப்பட்டவையே. பட்டயா போவது, இவர்கள் பட்டையைக் ’கிளப்புவதற்கே’. ஆடியோவுக்கென பெரிய மார்க்கெட் இல்லாத போது இந்த வீண் செலவுகளைத் தவிர்த்தே ஆகவேண்டும்.

புதியவர்கள் நடிக்கும்பட்சத்தில், அவர்களிடம் படத்தின் பவுண்டட் ஸ்கிரிப்டை கொடுத்து முழுவதையும் படிக்கச் சொல்லி, அவர்களுடன் கலந்துரையாடி விவரிக்க வேண்டியது இயக்குநரின் கடமை. முழுவதையும் புரிந்த பிறகு, நட்சத்திரங்களை வைத்து ஐந்து நாட்கள் ஓத்திகைப் பார்ப்பது, படத்தை திட்டமிட்ட நாட்களில் விரைவாக முடிப்பதற்கு பெரிதும் உதவும்.

ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால், காலை ஏழு மணிக்கே முதல் ஷாட்டை எடுக்கும்வகையில் ஒரு விரைவாக செயல்படுவது பல்வேறு வகைகளில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நல்லது. ஒன்பது மணிக்குதான் ஷூட்டிங்கை ஆரம்பிப்பேன் என்றால், அங்கேயே கண்ணுக்குத் தெரியாத செலவுகள் ஆரம்பித்துவிடும், அதேபோல் சில காஸ்ட்லியான லொகேஷன்களில் ஷூட்டிங்கை வைக்கும் போது, மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரையிலான ப்ரேக் இல்லாமல் தொடர்ந்து எடுப்பது புத்திசாலிதனமாகும். உதாரணத்திற்கு அங்கேயிருக்கும் யூனிட் ஆட்களை 2 பிரிவாக பிரித்து ஒரு டீம் ஷூட்டிங்கில் இருக்கும் போது, இரண்டாவது டீம் மதிய உணவை முடித்துவிடலாம். இரண்டாம் டீம் ஷூட்டிங்கிற்கு வந்தவுடன் முதல் டீம் மதிய சாப்பாட்டிற்கு செல்லலாம். ப்ரேக் இல்லாமல், இப்படி எடுப்பதால் ஆகும் செலவு சில ஆயிரங்கள் மட்டுமே. ஆனால் மறுநாள் எடுக்கலாம் என நினைத்தால், அந்த லொகேஷனுக்கான முழுச் செலவையும் கொடுத்தாக வேண்டும்.

படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு, அவர்களது காட்சிகள் எப்போது இருக்கிறதோ அப்போது மட்டும் வரச் சொன்னால் போதுமானது. மதியம் எடுக்கவேண்டிய காட்சிக்கு அவர்களை காலையிலேயே வரச்செய்து வெறுமனே உட்காரச் சொல்வது உளவியல்ரீதியாக அவர்களுக்குள் வெறுப்பையும், முகச்சோர்வையும் அளிக்கும். இது திரையிலும் தெரியும். ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும். ’சொன்ன நேரத்தில் எடுப்பார், தேவையில்லாம வெயிட் பண்ண வைக்கமாட்டார். நம்ம மத்த வேலையைப் பார்க்கலாம்’ என நட்சத்திரங்கள் சொன்னால், ஷூட்டிங் பரபரப்பாக வளரும்.

வெளியூர்களில் ஷூட்டிங்கை திட்டமிடும் போது, முன்னணி நட்சத்திரங்களின் கால்ஷீட்டை ஷெட்யூலின் நடுப்பகுதியில் இருக்கும்படி பார்த்துகொள்வது புத்திசாலிதனம். காரணம் முன்னணி நட்சத்திரம் வருவது, ஏதாவது காரணத்தினால் தள்ளிப்போனால், மற்ற நட்சத்திரங்களை வைத்து இதர காட்சிகளை எடுத்தபடியே ஷூட்டிங்கை தொடரமுடியும். ஒரு நாள் தள்ளிப்போனாலும் ஷூட்டிங் பேக்அப் ஆகாது.

உதாரணத்திற்கு, கமல்ஹாஸன் தனது திரையுலகப் பயணத்தில் எவ்வளவோ உயரத்தைப் பார்த்துவிட்ட பிறகும் கூட, ’விக்ரம்’ மாதிரி பெரும் ஹிட் படம் கொடுத்தாலும் கூட, கமலுக்கு கைக்கொடுத்திருப்பது மேற்கூறிய அம்சங்களுடன் எடுக்கப்பட்ட ‘தூங்காவனம்’ எனும் ஒரு அடக்கமான திரைப்படம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இப்பட விழா ஒன்றில் கமல் குறிப்பிட்டு பேசியது பவுண்டட் ஸ்கிரிப்ட் மற்றும் நட்சத்திரங்களுக்கான ஒத்திகை சமாச்சாரங்களைதான்.

படம் எடுக்க திட்டமிடும் போதே, படத்தின் பட்ஜெட்டில் அதன் ப்ரமோஷனுக்கான செலவையும் மனதில் வைத்து கொள்வது முக்கியம். நம்முடைய படம் நன்றாக இருக்கிறது என்பது நமக்கு மட்டுமே தெரியும். ஆனால் சினிமா வர்த்தகத்தில் முக்கியமானவர்களாக இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், டிஜிட்டல் உரிமை வாங்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு உரிமை வாங்குபவர்களுக்கு நம்முடைய படம் பற்றிய தகவல்கள் போய் சேரவேண்டும். அடுத்து வியாபாரம் முடிந்தாலும், திரையரங்குகளுக்கு மக்கள் வரவேண்டும். இதற்கெல்லாம் புதுமையான முறையில் திட்டமிட்ட ப்ரமோஷன் அவசியம். இதற்கான செலவையும் ஆரம்பத்திலேயே பட்ஜெட்டில் இணைப்பது புத்திசாலித்தனம்.

இப்படி தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, திட்டமிட்ட நாட்களில் ஷூட்டிங்கை விரைவாக முடிப்பது என்பது, தயாரிப்பாளரை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும். கதைத்தேர்வு, அதற்கேற்ற திரைக்கதை, எடுக்கப்பட்ட விதம், பட்ஜெட் என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டபடியே அருமையாக வரும்பட்சத்தில், அது வெற்றிகரமான படமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...