மாமன்னன் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும், சமுதாயத்தில் இன்னும் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக சாடும் படம்தான் மாமன்னன்.
காசிபுரம் தனி தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருப்பவர் வடிவேலு (மாமன்னன்). அவரது மகன் உதயநிதி. 10 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தாலும், உயர் ஜாதியை சேர்ந்த கட்சிப் பிரமுகர் பகத் பாசில் முன் உட்காரக்கூட முடியாத சூழலில்தான் வடிவேலு இருக்கிறார் என்று தெரிந்ததும் கொதித்து எழுகிறார் உதயநிதி. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
காமெடி வேடத்திலேயே பார்த்துப் பழகிய வடிவேலுவுக்கு இதில் சீரியஸான பாத்திரம். அதைச் சரியாக செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் தன் முதுகில் சுமக்கும் வடிவேலு, தன் முந்தைய படங்களின் சாயல் கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் போலவே உதயநிதியும் அடக்கமாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் அடக்கி வாசிக்கும்போது, ஆர்ப்பாட்டமான நடிப்பால் இதயத்தைக் கவர்கிறார் வில்லன் பகத் பாசில்.
சமுதாய பிரச்சினையை டாக்குமெண்ட்ரித்தனம் இல்லாமல் சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நிச்சயம் வீக் எண்டுக்கான ட்ரீட்டாக இப்படம் இருக்கும்.
சிட்டி ஆஃப் டிரீம்ஸ் (City Of Dreams – இந்தி வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
அரசியலும், க்ரைமும் கலந்த இந்தி வெப் சீரிஸான சிட்டி ஆஃப் டிரீம்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் யாராலும் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கிறார் அமயா கெய்க்வாட். ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர் கோமா நிலைக்கு செல்கிறார். இதைத்தொடர்ந்து கெய்க்வாட்டின் அரசியல் வாரிசாக யார் இருப்பது என்பதில் அவரது மகனுக்கும், மகள் பூர்ணிமாவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கெய்க்வாட் சுயநினைவைப் பெற்றாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். வாரிசு யுத்த்த்தில் அவர் மகனை ஆதரிக்கிறார். ஆனால் இதை ஏற்காத ம பூர்ணிமா, தனது சகோதரனைக் கொன்று முதல்வராக பதவியேற்கிறார்.
சில காலத்துக்கு பிறகு பக்கவாதத்தில் இருந்து மீளும் கெய்க்வாட், மகனுக்காக மகளை பழிவாங்க முயல்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் இந்த சீரிஸின் கதை. 3 சீசன்கள், ஒவ்வொன்றிலும் தலா 10 அத்தியாயங்கள் என்று மிக நீண்ட்தாக இருந்தாலும் விறுவிறுப்புடன் செல்கிறது.
ஒரே குறை ஒரு வார இறுதிக்குள் இதைப் பார்க்க முடியாது என்பதுதான் குறைந்தபட்சம் 20 மணி நேரம் ஓடும் இந்த சீரிஸை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிக்கலாம்.
பவால் (Bawaal – இந்தி) – அமேசான் ப்ரைம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர் நடித்திருக்கும் பவால் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
பள்ளி ஆசிரியரான வருண் தவான், அழகான படித்த பெண்ணான ஜான்வி கபூரை திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்கு பிறகுதான் ஜான்வி கபூருக்கு வலிப்பு நோய் இருப்பது வருண் தவனுக்கு தெரியவருகிறது. இதனால் அவர்கள் உறவில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில் தனது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அவனை அடித்து விடுகிறார் வருண் தவன். அந்த மாணவன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது வேலையையும், அந்தஸ்தையும் பாதுகாத்துக்கொள்ள ஒரு திட்டம் போடுகிறார். மாணவர்களின் பாடப்பிரிவில் இடம்பெற்றிருக்கும் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நேரடியாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பதின் மூலமாக இழந்த தன் பிம்பத்தை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள திட்டமிடுகிறார். தனது மனைவியையும் இந்தப் பயணத்தில் அழைத்துச் செல்கிறார்.
இந்தப் பயணத்தில் இவர்கள் இருவருக்குமான உறவு எப்படி மேம்படுகிறது என்பதே கதை.
பிரகாசன் பறக்கட்டே Prakashan Parakkatte – மலையாளம்) – ஜீ 5
ஷாஹத் நிலம்பூர் இயக்கத்தில் மேத்யூ தாமஸ் நாயகனாக நடித்துள்ள பிரகாசன் பறக்கட்டே திரைப்படத்தை ஜீ 5 ஓடிடியில் பார்க்கலாம்.
அப்பா கஷ்டப்பட்டு மகனைப் படிக்கவைக்க, அவனோ எந்த கவலையும் இல்லாமல் தான்தோன்றியாக ஊர் சுற்றுகிறான். வீட்டில் அவனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் தோற்கிறான். ஆனால் அப்படியும் அவனுக்கு அப்பா உறுதுணையாக இருக்கிறார். ஒரு கட்ட்த்தில் தனது விளையாட்டுத் தனத்தால் அப்பாவின் நிலம் பறிபோக, விளையாட்டுத்தனத்தை விட்டு குடும்பத்தை காப்பாற்ற வேறு ஊரில் மகன் வேலைக்கு போவதில் படம் முடிகிறது.