அயோத்தி (தமிழ்) – ஜீ5
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ், போஸ் வெங்கட், பிரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அயோத்தி.
வடநாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் புனித யாத்திரைக்காக ராமேஸ்வரத்துக்கு வருகிறது. அவர்கள் டாக்ஸியில் செல்லும்போது ஏற்படும் ஒரு சாலை விபத்தில் அந்த குடும்பத்தின் தலைவி இறந்துவிடுகிறார். டாக்ஸி ஓட்டுநரின்நண்பர்களான இருவர் மொழி தெரியாமல் தவிக்கும் அந்தக் குடும்பத்துக்கு உதவ வருகிறார்கள். மனிதாபிமானத்துடன் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
மனித உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அரசு விதிமுறைகளுக்கும் அவற்றைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சாமானிய மனிதர்களின் திண்டாட்டத்தையும் இப்படம் எடுத்துக்காட்டுகிறது.
Romancham (ரோமாஞ்சம் – மலையாளம்) – டிஸ்னி ஹாட் ஸ்டார்
மலையாள திரையிலகில் லேட்டஸ்டாக தியேட்டர்களில் ஹிட் அடித்த ரோமாஞ்சம் இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சவுபின் சாஹிர், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பேச்சுலர்கள் வசிக்கிறார்கள். பொழுதுபோக்குக்காக ஆன்மாவை அழைக்கும் ஓஜோ போர்ட் விளையாட்டை அவர்கள் ஆடுகிறார்கள். இந்த விளையாட்டு அவர்களுக்கு பிடித்துப் போக அடிக்கடி ஆன்மாவை அழைத்து விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஓஜோ போர்டு விளையாடும்போது வரும் ஆன்மா, அதன்பிறகு அந்த வீட்டை விட்டுப் போக மறுக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பிளாக் ஹியூமர் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
பேச்சுலர்களாக நடிப்பவர்களில் சவுபின் மட்டும்தான் பழகிய முகம். மற்றவர்களெல்லாம் புதுமுகங்கள். ஆனால் ஏற்கெனவே பல படங்களில் நடித்த அனுபவசாலிகளைப் போல் நடித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பயந்து, நிறைய சிரிக்க நினைப்பவர்கள் வீக் எண்டில் இப்படத்தைப் பார்க்கலாம்.
Balagam (பாலகம் – தெலுங்கு) – அமேசான் ப்ரைம்
அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படம் பாலகம். வேணு யெல்டாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியதர்ஷி, காவ்யா கல்யாண்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷனையும் நாயகர்களையும் நம்பி எடுக்கப்படும் தெலுங்கு படங்களுக்கு மத்தியில் கதையை மட்டும் நம்பி, மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
தெலங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களைச் செய்து தோற்றுப் போன இளைஞனான சாய்லுவுக்கு அதனால் பல லட்ச ரூபாய் கடன் ஏற்படுகிறது. அந்த கடனை அடைக்க 15 லட்ச ரூபாய் வரதட்சிணைக்காக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். வரதட்சிணைப் பணத்துக்காக கடன்காரர்கள் காத்திருக்க, நிச்சயதார்த்தத்துக்கு 2 நாட்களுக்கு முன் சாய்லுவின் தாத்தா இறந்து போகிறார். இதனால் நிச்சயதார்த்தம் நின்றதா? கடனை அடைக்க சாய்னு என்ன செய்தான் என்பதுதான் படத்தின் கதை. ஆந்திர மாநிலத்தின் வாழ்வியலை அழகாக எடுத்துச் சொல்கிறது இப்படம்.
ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ ( Accidental Farmer & Co -தமிழ் வெப்சீரிஸ்) – சோனி லைவ்
சுகன் ஜெய் இயக்கத்தில் வைபவ், ரம்யா பாண்டியன், வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஆக்சிடெண்டல் பார்மர்.
வேலையில்லா பட்டதாரியான வைபவுக்கு அவரது தாத்தா நிலத்தை உயிலெழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறார். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் வைபவ், ஒரு கட்டத்தில் அவருக்கே தெரியாமல் கஞ்சா செடியை நட்டு வளர்க்கிறார். இதைச் சுற்றி நகரும் கலாட்டாவான சம்பவங்களின் தொகுப்புதான் இந்த தொடர்.
கதையைப் பற்றியும், லாஜிக் பற்ரியும் கவலைப்படாமல் கொஞ்ச நேரம் சிரிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் சீரிஸ் இது.