கிரிக்கெட் உலகில் இப்போது டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடும் வீரர்களைவிட அதிகம் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் வாசிம் அக்ரம். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட அக்ரமின் பெயர் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் அவர் சொன்ன ஒரு உண்மை.
கோகெயின் எனப்படும் போதைப் பழக்கத்துக்கு தான் அடிமையாகிக் கிடந்ததை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் வாசிம் அக்ரம். ‘SULTAN: A MEMOIR’ என்ற பெயரில் தான் எழுதியுள்ள சுயசரிதையில் இப்படி சொல்லி இருக்கிறார் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இம்ரான்கான் இருந்த சமயத்தில் தனது வேகப்பந்து வீச்சால் உலகை மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். ஸ்விங் வகை பந்துவீச்சில் கெட்டிக்காரரான வாசிம் அக்ரம், அவ்வப்போது பவுன்ஸர்களையும் வீசி எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்வார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஸ்ரீகாந்த் ஒருமுறை அக்ரமின் பந்துவீச்சில் காயம் அடைந்ததும், அதைத்தொடர்ந்து அவரது பந்தில் ஸ்ரீகாந்த் அடிக்கடி ஆட்டம் இழந்ததும் வரலாறு.
ஸ்ரீகாந்த் மட்டுமின்றி சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கிய பலருக்கு தன் காலத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஸ்ரீகாந்த். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்களையும் வீழ்த்திய அக்ரம், ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை ‘SULTAN: A MEMOIR’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் சில பகுதிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி மீண்டதைப் பற்றி இவர் இப்புத்தகத்தில் எழுதியிருக்கும் பகுதி…
18 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் நான் ஓய்வு பெற்றேன். கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்ற எனக்கு பல வாய்ப்புகள் வந்தன. இந்த பணிகளுக்காக நான் உலகின் பல பகுதிகளுக்கும் சுற்றத் தொடங்கினேன். தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் மவுசே தனி. ரசிகர்கள் அவர்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்களும் வரவேற்புகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
வர்ணனை மற்றும் பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளுக்கும் செல்லத் தொடங்கிய நான், அப்படியே விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினேன். ஒருசில இரவுகளில் 10 விருந்து நிகழ்ச்சிகள்கூட இருக்கும். நான் உற்சாகமாக கலந்துகொண்டேன். மற்றவர்களும் என்னை ஆர்வமாக வரவேற்றார்கள். புகழ் என்ற என் வலிமையே எனக்கு தீமையாக மாறத் தொடங்கிய காலம் அது.
இந்த காலகட்டத்தில் எனக்கு கோகெயின் போதைப்பொருள் அறிமுகமானது. இங்கிலாந்தில் நடந்த ஒரு இரவு விருந்தில் ஒருவரால் எனக்கு அது அறிமுகமானது. ஆரம்பத்தில் அது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் நாளடையில் அது இல்லாமல் என்னால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அது என்னை நிலை மறக்கச் செய்தது.
நான் இதில் மூழ்க மூழக, என் மனைவி ஹூமா தனிமையானாள். ‘நாம் கராச்சிக்கே திரும்ப போய்விடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்தாள். அப்படி சென்றால் தன் பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இருக்கலாமே என்பது அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நான் மறுத்தேன். பார்ட்டிகளில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளிலேயே அதிகம் இருந்தேன். ஏதாவது வேலை இருந்தால் மட்டும் கராச்சிக்கு செல்வேன்.
இந்த நேரத்தில், எனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை ஹுமா அறிந்தார். ஒருநாள் எனது வாலெட்டுக்குள் கொகெயின் பாக்கெட் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
“உனக்கு உதவி தேவைப்படுகிறதா?” என்று என்னிடம் கேட்டார்.
நான் ஆம் என்றேன். அந்த நேரத்தில் நான் எனது கட்டுப்பாட்டில் இருந்து விலகி வருவதை தெரிந்துகொண்டதால், அதிலிருந்து மீள யாருடைய உதவியாவது தேவை என்பதை அப்போது நான் உணர்ந்திருந்தேன். ]
அன்றைய காலகட்டத்தின் நான் எடுத்துக்கொள்ளும் போதைப்பொருளின் அளவுகள் ஒரு லைனில் இருந்து 4 லைனாகவும், ஒரு கிராமில் இருந்து 2 கிராமாகவும் அதிகரித்திருந்தது. என்னால் உறங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை, கடுமையாக தலை வலித்தது. நீரிழிவு நோய்கூட கட்டுப்பாடு இல்லாமல் போனது.
இதைத்தொடர்ந்து ஹுமா என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். என்னை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். நானும் அதற்காக கடுமையாக போராடினேன். 2009-ம் ஆண்டில் ஹூமாவின் மரணம் என்னை கடுமையாக பாதித்தது. அவரது விருப்பத்தை நிறைவேற்ற கடுமையாக போராடி போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டேன். அதன்பிறகு போதைப் பொருளின் பக்கம் நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இந்த பழக்கத்தில் இருந்து நான் மீள்வதற்கு ஹூமாவின் தன்னலமற்ற சேவையே காரணம்.