No menu items!

எச்சரிக்கை: இந்தியர்கள் ஆயுள் குறைகிறது!

எச்சரிக்கை: இந்தியர்கள் ஆயுள் குறைகிறது!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் Air Quality Life Index (AQLI) என்ற ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாகவும் காற்று மாசு காரணமாக இந்தியர்கள் சராசரியாக தங்கள் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் வங்கதேசம் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து 3,4,5ஆம் இடங்களில் நேபாளம், பாகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களாக டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், ஜானுபூர் (உ.பி), லக்னோ, கான்பூர், பாட்னா ஆகியவை உள்ளன.

தமிழ்நாட்டில் காற்று மாசுள்ள நகரங்கள்

இதனிடையே, பெங்களூருவில் உள்ள ‘அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம்’ (CSTEP), காற்று மாசு தொடர்பாக 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் அதிக மாசு உள்ள மாவட்டமாக தூத்துகுடி இருப்பதாகவும் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் தூத்துக்குடியில் காற்று மாசு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் தலைநகர் சென்னையிலும் அதனை சுற்றியும் ஏராளமான மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் பெருகி வருவதால் 2030ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும் எனவும் அப்போது தூத்துக்குடியைவிட சென்னையில் இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆறு பெருநகரங்களின் காற்று மாசு குறித்த அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நேற்று வெளியிட்டது. இதில் டில்லி, கல்கத்தா, மும்பைவிட சென்னையின் காற்று மாசு குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், அந்த நகரங்களைவிட வேகமாக மாசு அதிகரித்து வரும் நகரமாக சென்னையும் பெங்களூருவும் இடம்பெற்று நமக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் ‘பிஎம் 2.5’ என்று அழைக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி காற்றில் அனுமதிக்கப்பட்ட ‘பிஎம் 10’ துகள்கள் அளவு 100 மைக்ரோகிராம், ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் அளவு 60 மைக்ரோகிராம் இருக்கலாம்.

காற்றில் துகள்கள் அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?

காற்றை நாம் சுவாசிக்கும்போது அதிலுள்ள ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல் திசுக்களில் ஆழமாக செல்கிறது. இரத்த ஓட்டத்திலும் நுழைகிறது. இது ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாச நோய்கள் உட்படப் பல உடல்நல பிரச்சினைகள் உருவாக காரணமாகும். ‘காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்களைக் கொல்கின்றன,’ என்கிறது உலகளவில் காற்று மாசை அளவிடும் IQAir அமைப்பு.

சென்னையில் காற்று மாசால் மட்டும் கடந்த 2020ஆம் ஆண்டு 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியா முழுவதும் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களில் ஐந்தாவது இடத்தை காற்று மாசு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை காற்று மாசுக்கு என்ன காரணம்?

இந்தியாவின் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் வாகனப் புகை, நிலக்கரி மின் நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், பயோமாஸ், கட்டுமான தொழில் ஆகியனதான். ஆனால், சென்னையைப் பொறுத்தவரைக்கும் காற்றை மாசுபடுத்துவதில் வாகனப் புகைகளே அதிகப் பங்கு வகிக்கின்றன. வாகனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன், நைட்ரஜன், மீத்தேன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல வாயுக்கள் வெளியேறுகிறது. நான்கு சக்கரம், இரு சக்கரம் என வாகனத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வாகனப் புகையிலும் இவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று, ‘காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1981’ வரையறை செய்துள்ளது. ஆனால், முறையான சோதனை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால், சென்னையில் ஓடும் பெரும்பான்மை வாகனங்கள் இச்சட்டம் குறிப்பிடும் அளவைவிட அதிகமான கார்பனை வெளியிடக்கூடியதாக உள்ளன.

வாகனப் புகையை அடுத்து நிலக்கரி எரிப்பு, கட்டுமான பணிகள், மழை வீழ்ச்சி உட்படப் பல்வேறு காரணிகளும் சென்னை காற்று மாசுக்குக் காரணமாக இருக்கின்றன. வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது என்றால், தென் சென்னை கட்டுமான பணிகளாலும் போக்குவரத்து நெரிசலாலும் மாசடைகிறது.

காற்று மாசை குறைக்க என்ன செய்யலாம்?

காற்றைத் தூய்மையாக வைத்திருக்க மரங்கள் ஓர் இயற்கைத் தீர்வு. எனவே, காற்று மாசடைவதைத் தவிர்க்க, நகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம் நிலப் பரப்புப் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது. ஆனால், சென்னையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. எனவே, சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியம். நம் வீட்டுக்கு முன்னால் இடம் இருந்தால் ஒரு மரத்தை நட்டுப் பராமரிக்கலாம்.

4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் உள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களையும் ஈயம் கலக்காத பெட்ரோலையும் (unleaded) பயன்படுத்தலாம். அதுபோல் எல்.பி.ஜி. கேஸ் பயன்பாடும் காற்று மாசடைவதைக் குறைக்கும்.

குறைந்த தூரப் பயணத்திற்கு நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம்.

சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகனங்களின் என்ஜினை நிறுத்தலாம். ஏனெனில், அவை வெளியிடும் புகை பச்சை விளக்குக்காகக் காத்து நிற்கும் நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...