No menu items!

எச்சரிக்கை – சாகச மரண சுற்றுலாக்கள்

எச்சரிக்கை – சாகச மரண சுற்றுலாக்கள்

110 வருடங்களுக்கு முன் கடலில் 13 ஆயிரம் அடி ஆழத்துக்கு முழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக கடலுக்குள் நீர்முழ்கி கப்பலில் பயணித்து உயிரைவிட்டிருக்கிறார்கள் ஐந்து கோடீஸ்வரகள். இவர்களில் 19 வயது மகனும் 48 வயது தந்தையும் சேர்ந்து இறந்திருக்கிறார்கள்.

இந்த தந்தை மகன் ஜோடி பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தில் குடியேறி மிகப் பெரிய நிறுவனங்களை நடத்துகிறார்கள். தந்தை ஷாஷாதாவுக்கு சாகசப் பயணங்கள் மிகவும் பிடிக்கும். 19 வயது மகன் சுலைமான் தாவுத்துக்கு இது போன்ற சாகசங்கள் அலர்ஜி. ஆனாலும் தந்தையின் வற்புறுத்தலுக்காக நீர்மூழ்கி கப்பலில் பயணித்திருக்கிறார்கள். இந்தப் பயணத்துக்கு இவர்கள் செலவிட்டது ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய். ஆபத்தானது என்று தெரிந்தும் நான்கு கோடி ரூபாய் செலவழித்து மரணத்தை தேடிக் கொண்டார்கள்.

கொரோனா பொது முடக்கங்களுக்குப் பிறகு சாகச சுற்றுலாக்கள், பயணங்கள் அதிகரித்துவிட்டதாக உலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2022ல் சாகச பயணங்களின் மொத்த வியாபாரம் உலக அளவில் 31ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது 2030ல் ஒரு லட்சம் கோடியாக உயருமாம்.

செவ்வாய் கிரகத்துக்கு செல்வது, எவரெஸ்ட் மலையேறுவது, காட்டுக்குள் நடை பயணம், பாலைவனங்களில் பயணம், கடலுக்குள் மூழ்குவது என்று பலவித சாகச பயணங்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.

சமீபத்தில் தமிழ்நாட்டை சார்ந்த தேனிலவுத் தம்பதிகள் பாலி தீவில் வேக விசைப் படகில் படமெடுக்க முயன்றபோது கடலுக்குள் விழுந்து இறந்தார்கள், திருமணமாகி எட்டே நாட்களில். தேன் நிலவு பயணத்திலும் சாகசப் படங்கள் எடுக்க முயன்றதன் விளைவு இது.

உலகக் கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ் கடந்த வருடம் நண்பர்களுடன் விண்வெளி பயணம் மேற்கொண்டார். இப்போதெல்லாம் கோடீஸ்வரர்களின் பயணங்கள் என்பது ஸ்விட்சர்லாந்து போவதோ ஹாவாய் கடற்கரையில் ஓய்வெடுப்பதோ இல்லை. சாகச பயணங்கள் மேற்கொள்வதுதான் அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறது.

7 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் கொடுத்தால் அதாவது சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்தால் பசிபிக் பெருங்கடலுக்குள் 7 மைல் தூரம் அழைத்துச் செல்கிறேன் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறது ஒரு நிறுவனம். இந்தப் பயணத்தை மேற்கொள்ள போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் கோடீஸ்வரர்கள்.

சாகசப் பயணப் பழக்கம் சாதாரண எளிய மக்களிடம் பரவி இருக்கிறது. ஊட்டிக்குப் போனால் போதாது, ஊட்டி மலைத் தொடரில் இருக்கும் காட்டுக்குள் செல்வதுதான் த்ரில். அடர்ந்த காடுகளுக்குள் சென்று தொலைந்து போனவர்களும் உண்டு.

சாகசங்கள் சுவாரசியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் சாகாமல் இருப்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...