இந்த புத்தாண்டு ஒரு பூகம்பத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. ஆம். ஜனவரி 1ஆம்தேதி ஜப்பானை நாட்டை குலுக்கி எழுப்பி விட்டது ஒரு பூகம்பம். ரிக்டர் அளவுகோலில் 7.6. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து குட்டிக்குட்டியாய் 21 நில அதிர்வுகள்.
ஜப்பானின் மேற்குக் கரையில், நோட்டோ தீபகற்பம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இஷிகவா பகுதியில் பெரும் பாதிப்பு. சுசு பகுதியில் பல வீடுகள் இடிந்தன. 32 ஆயிரம் வீடுகளில் கரண்ட் கட். கூடவே குடிநீர், தொலைபேசி தொடர்புகளும் துண்டிப்பு.
ஒரு லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றப்பட, உயிர்ப்பலி மொத்தம் 92. காயம் அடைந்தவர்கள். 413 பேர். இதுபோக காணவில்லை என்று 242 பேர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பூகம்பத்தில் கார்கள் கவிழ, கப்பல்கள் பாதி மூழ்கிப் போக, இஷிகவா, நிகாத்தா, டோயோமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சுனாமி என்கிற ஆழிப்பேரலை எச்சரிக்கை, ஜப்பானை மட்டுமின்றி, ரஷியா, வட கொரியா நாடுகளையும் அச்சுறுத்தியது. புத்தாண்டு பூகம்ப அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் இன்னும் மீளாத நிலையில், ‘அடுத்தடுத்து அங்கே பூகம்பம் ஏற்பட 20 சதவிகித வாய்ப்பு இருக்கிறது’ என்று எச்சரித்திருக்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள்.
புத்தாண்டுக்கு சில நாள் முன்னதாக, அதாவது, ஜப்பான் நாட்டு பூகம்பத்துக்கு முன்னோட்ட மாக, ஐரோப்பாவில் உள்ள போஸ்னியா ஹெர்சிகோவினா நாட்டில் ஒரு மினி பூகம்பம், முகத்தைக் காட்டியிருந்தது. ரஷியா உள்பட சில நாடுகளிலும் சின்ன சின்ன நிலஅதிர்வுகள் ஒத்திகை பார்த்திருந்தன.
ஜப்பான் பூகம்பத்தைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம்தேதி மிசோரம் மாநிலம் லுங்லே பகுதியில் 3.5 அளவில் ஒரு சின்ன குலுக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரி. பூகம்பங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் சென்னையைத் துவைத்து தொங்கப் போட்ட மழையை நாம் மறந்திருக்க மாட்டோம். வழக்கமாக, சென்னைக்கான மொத்த மழையில் 63 சதவிகிதத்தை வாரிவழங்குவது வடகிழக்குப் பருவமழைதான். ஆனால், இந்தமுறை மிக்ஜாம் புயலுடன் கூட்டணி சேர்ந்து சென்னையை ஏகத்துக்கும் மிரட்டிவிட்டது வடகிழக்குப் பருவ மழை.
47 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை சந்தித்த மிகப்பெரிய மழை அது. டிசம்பர் 4ஆம் தேதியில் மட்டும் 23 சென்டி மீட்டர் மழை. அதற்கு முந்தைய நாள் 6.2 செ.மீ. டிசம்பர் 5ஆம்தேதி 23.8 செ.மீ. ஆகமொத்தம் 3 நாள்களில் 53.1 சென்டி மீட்டர் அளவுக்கு அசுர மழை.
2015ல் சென்னையை வெள்ளக்காடாக்கிய செம்பரம்பாக்கம் நிகழ்வின்போது டிசம்பர் 1,2,3 தேதிகளில் விழுந்த மொத்த மழையளவு 34 சென்டி மீட்டர்தான். 2023ல் சென்னையை மிரட்டிய மிக்ஜாம் புயல்மழை இதை மிஞ்சிவிட்டது.
ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இதற்கு முன் இவ்வளவு மழை பெய்ததே இல்லை. ‘இவ்வளவு கனமழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு மையம் முன்கூட்டியே உரிய எச்சரிக்கை செய்யவில்லை’ என்று குற்றச்சாட்டு ஒருபக்கம் குதித்த நிலையில், ‘இனி இதுபோன்ற அதிக அளவு கனமழையை அடிக்கடி பார்க்கலாம்’ என்று, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறி யிருக்கிறார்.
‘சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்கள் வெப்பத் தில் தீயாய் தகிக்கிறது’ என்று சிலர் அங்கலாய்க்க, இந்த அங்கலாய்ப்பு வருண பகவானுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ? சென்னையை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் எதிர்பாராதவிதமாக 60 செ.மீ. பெருமழையைச் சந்தித்து வெள்ளக் காடாயின.
அதிலும், காயல்பட்டினத்தில் பெய்த மழை இருக்கிறதே அடடா. 24 மணி நேரத்தில் 95 செ.மீ. மழை! தமிழக வரலாற்றில் சமவெளியில் பெய்த மிக அதிக அளவு மழை இதுதான். இதற்கு முன் 1992ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் காக்காசி பகுதியில் பெய்த 96.5 செ.மீ. மழைதான் சாதனை என்ற நிலையில், கிட்டத்தட்ட அதை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டது காயல்பட்டின மழை.
விடாமல் ஒருபக்கம் தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க, அணைகள் திறக்கப்பட தாமிரபரணி, கருமேனியாறு எல்லாம் பெருக்கெடுத்து ஓட, வெள்ளத்தில் மூழ்கி எழுந்தன நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
இந்தநிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜனவரி 6ஆம்தேதி) தமிழகத்தின் 11 மாவட்டங்கள் மழையைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அறிவித் துள்ளது வானிலை ஆய்வு மையம். இப்போது மழை, கீழடுக்கு சுழற்சி என்ற வார்த்தைகள் எல்லாம் பயமூட்டும் வார்த்தைகளாகி விட்டதால், ‘இன்னும் முடியலையா?’ என்று ஒருவித அச்சத்தில் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்கள் வெள்ளத்தில் மிதக்க பல காரணங்கள் இருக்கலாம். ஒழுங்கற்ற நகர திட்டம், அடைக்கப்பட்ட வடிகால்கள், அடைத்துக் கொள்ளும் குப்பைகள், சுருங்கி வரும் பள்ளிக்கரணை போன்ற சதுப்புநிலங்கள், உயர்ந்து வரும் கடல்மட்டம்.. இப்படி பல காரணங்களை சொல்லலாம்.
மழையின் பாணி மாறிப்போய் இப்படி ஒழுங்கில்லாமல் மழை விழுந்தால் சென்னை மட்டுமல்ல, கட்டிடக்கலை வல்லுநர் கார்பூசியர் பார்த்து பார்த்து வடிவமைத்த சண்டிகர் நகரம்கூட மழைவெள்ளத்தை தாங்காது என்கிறார்கள் புவியியல் நிபுணர்கள். காரணம் ஐந்து லட்சம் மக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய நகரம் சண்டிகர். இன்று அதன் மக்கள் தொகை 11 லட்சம்.
சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளம் போல, 2005ஆம் ஆண்டு மும்பையும், பெங்களூரும் வெள்ளநீரில் ஒரு முங்கு முங்கி எழுந்தன. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரம் 2012ஆம் ஆண்டு வெள்ளத்தில் நீந்தியது.
‘பெங்களூரில் 1985ஆம் ஆண்டு 51 ஏரிகள் இருந்தன. இப்போது இருப்பவை வெறும் 17 ஏரிகள்தான். அந்த 17 ஏரிகளும் கூட 66 சதவிகிதம் கழிவுநீர் கலக்கும் இடங்களாக இருக்கின்றன. 72 சதவிகித நீர்ப்பிடிப்பு பகுதியை அவை இழந்து விட்டன. இந்த அழகில் வெள்ளம் வராமல் என்ன செய்யும்?’ என்று கேட்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
இந்திய அளவில் சென்னையைப் போல அதிக வெள்ள அபாயத்தில் இருக்கும் இன்னொரு நகரம் அமராவதி. ஆந்திர மாநிலத்தின் வருங்காலத் தலைநகரமாக உருமாறி வரும் அமராவதி, 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மீதும், ஏரிகள், ஓடைகள், சிறிய நீர்வழித் தடங்கள் மீதும் கட்டப்பட்டு வரும் நகரம். நாளை மேக வெடிப்பு போன்ற ஏதாவது ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், அமராவதி நகரத்தின் கதி என்ன ஆகும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சரி. ஒரு வருடத்தில் மெல்ல மெல்ல பெய்ய வேண்டிய மழையை, ஒரேநாளில் இயற்கை இப்படி கோபமாக கொட்டிவிட்டு போக என்ன காரணம்? புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றத்தை இதற்கு காரணமாகச் சொல்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள். ‘இனி எல்லாம் இப்படித்தான்’ என்பது அவர்களது கருத்து.
பூகம்பம், புயல் மழை, எரிமலை, வெள்ளம் போன்ற பூமியில் உள்ள பேரிடர்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயக்கயிறு இணைக்கிறது. இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. புயல், கனமழை, வெள்ளம், வெப்ப அலை இவையெல்லாம் சூழல்சீர்கேட்டின் அதிர்ச்சிப் படைகள். புவி வெப்பமடைய, வெப்பமடைய இனி அடிக்கடி புயல், மழை வெள்ளங்களையும், பூகம்பங்களையும் பார்க்கலாம். போகப்போக அவை இன்னும் பலமாகிக் கொண்டே போகும். அவற்றின் அழிக்கும் சக்தியும் இன்னும் அதிகமாகும்’ என்று எச்சரிக்கிறார்கள் புவி வல்லுநர்கள்.
உலகின் வெப்பநிலை உயர்வதால் கடல்களும் வெப்பமடைந்து அதிக நீரை ஆவியாக்கி மேலே அனுப்புகிறது. ஈரம் தாங்கிய காற்று நிலங்களை நோக்கிப்போகும் போது புயலாகிறது. பிறகு என்ன? மழை..வெள்ளம்…
நமது பூமியின் இப்போதைய சராசரி வெப்பநிலை 1.70 டிகிரி செல்சியஸ். பூமியில் வெப்ப நிலை கூடக்கூட, மழையளவு கூடிக்கொண்டே போகும் எனக் கணிக்கிறார்கள் வானிலை நிபுணர்கள். அதாவது ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடினால் மலைப்பகுதிகளில் 15 சதவிகிதம் மழை அளவு கூடும் என்கிறார்கள்.
இதேரீதியில் வெப்பநிலை உயர்ந்து கொண்டேபோனால், 2020 ஆண்டுக்கும் 2040ஆம் ஆண்டுக்கும் இடையில் மழையளவு 5 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புண்டாம். 2050ல் 11 சதவிகிதம். அதுவே 2070-2090ல் இது 21 சதவிகிதம். இதே வேகத்தில் போனால், இந்த நூற்றாண்டின் முடிவில் மழையளவு 21 சதவிகிதம் அதிகரித்து விடும் என்று கணிக்கிறார்கள் நிபுணர்கள்.
அந்த காலகட்டத்தில், 24 மணிநேரமும் மழை பெய்ய வாய்ப்புண்டு. ஐந்து நாள்களுக்கு எல்லாம் தொடர்ச்சியாக, இடைவிடாமல் மழை பொழிவது அப்போது சர்வசாதாரணமாக இருக்குமாம். அதற்கான ஒரு சின்ன முன்னோட்டம்தான் பூமியில் இப்போது நடந்து வருகிறது. சென்னையையும், தென் மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட மழை வெள்ளம் இதற்கான வெள்ளோட்டம்தான்.
1850ஆம் ஆண்டில் தொழில்துறை சகாப்தம் தொடங்கியதில் இருந்து, பூமி தகதக என வெப்பத்தில் தகித்து வருகிறது. பெட்ரோலிய எண்ணெய்யை அதிக அளவில் பூமிக்குள் இருந்து உறிஞ்சு எடுத்து வாகனங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதால் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் அதிகம் வெளியேறுகின்றன. கார்பன் உமிழ்வு அதிகமாக அதிகமாக பூமி சூடாகிறது.
அனல்மின் நிலையங்கள், விவசாயம், அதிக அளவு வாகனங்கள், ஓரக் கடல்களில் எண்ணெய் எடுக்கும் துரப்பண நிலையங்கள், காடு அழிப்பு, அதிக மீன்பிடிப்பு. இவையெல்லாம் அதனதன் பங்குக்கு புவி வெப்பமடைவதற்கான கைங்கரியத்தைச் செய்கின்றன.
புவிவெப்பம் காரணமாக துருவப்பகுதிகள், 278 ஜிகா டன் பனிப்பாறைகளை இழந்திருக்கிறதாம். இதனால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் மட்டும் 500 மில்லி கோக் பாட்டில் உயரத்துக்கு (15 செ.மீ.க்கு) கடல்மட்டம் உயர்ந்திருக்கிறதாம். ஆண்டுக்கு 3.6 மில்லிமீட்டர் அளவுக்கு கடல்மட்டம் உயர்ந்து வருவதாக கவலைப்படுகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
கடல்மட்டம் உயர்வதால் கடற்கரைப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கும். மழையால் ஏற்படும் வெள்ளம் கூட கடலுக்குப் போகாமல் இனி அடம்பிடிக்க ஆரம்பிக்கும்.
‘புவிவெப்பம் காரணமாக இனி ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை பருவமழையில் பெரிய அளவுக்கு ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரிடர் ஒன்றை சந்திக்க வேண்டி வரும்’ என்று எச்சரிக்கிறார்கள் இயற்கையியல் வல்லுநர்கள்.