இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடந்துக் கொண்டிருக்கிறது. நான்கு டெஸ்டுகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டிலும் இந்தியா வெற்றிப் பெற்றிருக்கிறது. இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கியிருக்கிறது. இந்தியா மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணியில் கே.எல். ராகுலை சேர்க்க வேண்டுமா கூடாதா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்கூ கே.எல்.ராகுல் நல்ல பேட்ஸ்மேன் தான் ஆனால் ஃபார்மில் இல்லாத போது ஏன் சேர்க்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் ஆடவில்லை.
அணிக்கு கே.எல்.ராகுல் வேண்டுமா தேவையில்லையா? மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஆர்.மோகன் தன் கருத்துக்களை கூறுகிறார்.
வெளிநாட்டு தொடர்களில் அதிக செஞ்சுரி அடித்திருக்கிறார் என்ற அடிப்படையில் கே.எல்.ராகுல் அணியில் இருக்கிறார். ஆனால் அவர் இந்தியாவில் ஆடும் மேட்சுகளில் எப்படி ஆடுகிறார் என்று கவனிப்பதில்லை.
இந்தியாவில் விளையாடும்போது அவரால் நம்ம பிட்சுகளில் எடுக்கும் ஸ்பின் பந்துகளை தடுத்தோ அடித்தோ ஆட முடியவில்லை. இது அவருக்கு பெரிய பலவீனம். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் அவர் ஸ்பின் பந்துகளை தடவுவதைப் பார்க்கிறோம். கே.எல்.ராகுலை வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டும் அழைத்துச் சென்றால் போதும்.
சுப்மான் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவரை கடந்த இரண்டு மேட்சுகளில் பெஞ்ச்சில் உட்கார வைத்திருந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. நல்ல ஃபார்மில் இருப்பவர்களை அணியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அது ஊக்கமளிப்பதாக இருக்கும். 22 வயதுதான் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று அவரை ஆட வைப்பதை தள்ளிப் போடுவது சரியல்ல.
சச்சின் 16 வயதில் அணிக்குள் வந்தார். சிறு வயதிலேயே அனுபவங்கள் கிடைக்கும்போது அவர்கள் நாளடைவில் பெரிய ஆட்டக்காரர்களாக வருவார்கள். இன்று நமக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் கில்தான். அவரது பல ஷாட்கள் பிரமிக்க வைக்கின்றன. பழைய ஸ்டைலும் புதிய நுட்பமும் கலந்து அவர் ஆடுகிறார்.
அதே போல் ரஹானேக்கும் போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. அவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவரும் நல்ல ஆட்டக்காரர்.
பொது இந்திய அணி இந்தியாவில் ஆடும்போது துணை கேப்டன் என்ற பதவி கிடையாது. கேப்டனுக்கு ஏதாவது பிரச்சினை என்றாள் அணியின் மூத்த வீரர்கள் வழிநடத்துவார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் ஆடும்போது வைஸ் கேப்டன் பதவியை வைத்திருக்கிறார்கள். வைஸ் கேப்டனாக கே.எல்.ராகுல் இருக்கிறார். அதனால்தான் அவரை சுலபமாக மாற்ற முடியவில்லை. இப்போது அவரை வைஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அவருக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்தூரில் நடக்கும் இந்தப் போட்டியைப் பொறுத்தவரைக்கும் நம்ம பிட்சைதான் குறை சொல்ல வேண்டும். நம்ம ஸ்பின்னர்களுக்கு ஏற்றது போல் பிட்சை ரெடி செய்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு சாதகமா போய்விட்டது. இந்த மேட்ச்சைப் பொறுத்தவரை நான்காவது இன்னிங்க்ஸ் ஆடுபவர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.