‘விஸ்வநாத் பிரதாப் சிங்’…
இவர் யார் என்று கேட்டால், பலரும் தெரியாது என்றே சொல்வார்கள். சுருக்கமாக, ‘வி.பி.சிங்’ என்றால் ‘ஓ! தெரியுமே’ என்பார்கள். ‘27 சதவிகித இடஒதுக்கீடு நாயகன் ஆச்சே?’ என்பார்கள்.
வி.பி.சிங். இந்தியாவின் 7-வது பிரதமராக இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதியாக இருக்கக் கூடும். ஆனால், அவர், உத்தரபிரதேசத்தில் உள்ள மண்டா ராஜ்ஜியத்தின் 41ஆவது ராஜா பகதூர் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. ஆம். வி.பி.சிங், ராஜபுத்திர அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
1960ல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் காங்கிரசின் கையைப் பிடித்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் வி.பி.சிங். அவரது பிறப்பிடமான பிரயாக்ராஜ், அலகாபாத்தின் அருகேதான் இருக்கிறது.
1969ல் சட்டமன்ற உறுப்பினர். 71ல் மக்களவை எம்.பி. 74ல் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் துணை வணிக அமைச்சர் அவர். பின்னர் வணிக அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
1980ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் வேண்டுகோளின்படி, உத்தரபிரதேசத்தின் பன்னிரண் டாவது முதல்வராகப் பதவியேற்றார் வி.பி.சிங்.
சம்பல் கொள்ளையர்கள் சிலர், அதற்குமுன்பு வினோபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னிலையில் சரணடைந்தனர். அந்த வரிசையில் வி.பி.சிங் முன்னிலையிலும் சம்பல் கொள்ளையர்கள் சிலர் சரணடைந்தனர். ஆனாலும், உ.பி. முதல்வர் பதவியை சரிவர செய்யமுடியவில்லை என்று கூறி இரண்டே ஆண்டுகளில் வி.பி.சிங் பதவி விலக, ‘இந்திய அரசியலில் இப்படி ஒருவரா? என்று நாடு முதன்முறையாக அவரைக் கண்டு திகைத்துப் போனது.
பொற்கோயிலில் இந்திய ராணுவத்தின் புளூஸ்டார் அதிரடித்தாக்குதல், இந்திரா காந்தி சுட்டுக்கொலை.. இந்த சம்பவங்களுக்குப்பிறகு 1984ல் ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது அமைச்சரவையில் வி.பி.சிங் நிதியமைச்சர்.
அமலாக்கத்துறைக்கு அதிக அதிகாரம், லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் கெடுபிடிக்குத் மூக்கணாங்கயிறு, தங்கக் கடத்தலைத் தடுக்க வரிகுறைப்பு, வரிஏய்ப்புத் தடுப்பு… இப்படி தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் வி.பி.சிங். தொழிலதிபர் திருபாய் அம்பானியும், நடிகர் அமிதாப்பச்சனும் கூட வருமானவரித்துறையின் அதிரடி சோதனைகளுக்குத் தப்ப வில்லை.
ஒருகட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு நிதியுதவி செய்பவர்களும்கூட வருமான வரி சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட, நிதியமைச்சர் பதவியில் இருந்து, 1987ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு பந்தாடப்பட்டார் வி.பி.சிங். அங்கேயும் அவர் சும்மா இருக்கவில்லை. ஆயுதப் பேர முறைகேடுகளைத் தோண்டித் துருவ முற்பட்டார். போபர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் பெரிதாக வெடித்தது.
விளைவு? அமைச்சர் பதவியில் இருந்து வி.பி.சிங். நீக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகினார். அலகாபாத் தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அலகாபாத் மறுதேர்தலில் வென்றார். அருண்நேரு, ஆரிப்கானுடன் இணைந்து 1987ல் ஜன மோர்ச்சா அமைப்பை உருவாக்கினார்.
1988ல் ஜன மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக்தளம், காங்கிரஸ் எஸ் ஆகியவை இணைந்து ஜனதா தளம் உருவானது. அதன் தலைவரானார் வி.பி.சிங். தெலுங்குதேசம், தி.மு.க., அசாம் கனபரிஷத் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய முன்னணியை அமைத்தார். என்.டி.ராமராவ் அதன் தலைவர். வி.பி.சிங். ஒருங்கிணைப்பாளர்.
1989 பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி 143 இடங்களில் வென்று, பாரதிய ஜனதா, இடதுசாரிகளின் உதவியுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவானது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பிரதமர் பதவியை ஏற்கும்படி வி.பி.சிங்., சௌத்திரி தேவிலாலை வேண்ட, ‘வேண்டாம். வி.பி.சிங்தான் பிரதமர்’ என்று தேவிலால் கூற, இந்திய அரசியல் வரலாற்றில் அப்படியொரு அரிய நிகழ்வு நடந்தது அதுதான் முதல்முறை.
இந்தியாவின் 7ஆவது பிரதமராக பதவியேற்ற வி.பி.சிங், சீக்கிய பொற்கோயிலுக்குச் சென்று ‘ஆபரேசன் புளூஸ்டார்‘ ராணுவ நடவடிக்கைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
காஷ்மீரில், முப்தி முகமது சையதுவின் மகள் கடத்தப்பட்டபோது மீட்பு நடவடிக்கையை அவர் கையாண்ட விதம் அலாதியானது. பாகிஸ்தான் பிரதமர் பெநாசிர் பூட்டோவுடன் பேச்சு நடத்தி, இன்னொரு இந்திய பாகிஸ்தான் போர் ஏற்படாமல் தடுத்தவர் வி.பி.சிங்.
பஞ்சாப் ஆளுநர் மாற்றம், இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படையைத் திரும்பப் பெற்றது என்று பல நடவடிக்கைகளில் வி.பி.சிங்கின் முத்திரை பதிந்தது.
1990ல், அண்ணல் அம்பேத்கருக்கும், தென் ஆப்பிரிக்க இனவெறி எதிர்ப்பு, விடுதலை வீரரான நெல்சன் மண்டேலாவுக்கும் பாரத ரத்னா விருதுகளை அறிவித்தார் வி.பி.சிங். சமூகநீதி மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பிடிப்பின் அடையாளம் இது.
1990ல் மத்திய அரசுப்பணிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் வி.பி.சிங். வட இந்தியாவில் இதை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்புகள் நடந்தன. இருந்தாலும் தன் நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாக இருந்தார் வி.பி.சிங்.
அயோத்தியில் ராமஜென்மபூமி பிரச்சினை தகிதகித்தபோது, அத்வானி, அயோத்தி நோக்கி ரத யாத்திரை தொடங்க, அந்த ரத யாத்திரையை பீகாரில் துணிச்சலாகத் தடுத்துநிறுத்தி அத்வானியை கைதுசெய்தார் வி.பி.சிங்.
இவற்றின் எதிர்வினைகளாக வி.பி.சிங் அரசுக்கு பாரதிய ஜனதா நெருக்கடி தர ஆரம்பித்தது. ‘இந்துத்துவ கமண்டலா (கமண்டலமா)? அதற்கு எதிரான மண்டலா?’ என்ற கேள்வியில், ‘மண்டல்தான்’ என்றுகூறி தனது ஆட்சியைப் பலியிடத் துணிந்தார் வி.பி.சிங்.
அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா விலக்கிக் கொள்ள, நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது வி.பி.சிங் அரசு. பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.பி.க்களும், சொந்த கட்சி எம்.பி.களும் கணிசமாகக் கைவிட்ட நிலையில், 356-151 என்ற கணக்கில், வி.பி.சிங். தரப்பு தோல்வி கண்டது.
அதன்பின் சந்திரசேகர் பிரதமராகி அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் நிறுத்தி, மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது எல்லாம் தனிக்கதை.
1991ஆம் ஆண்டு தீவிர அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டார் வி.பி.சிங். 1992ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ‘மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும்’ என அறிவித்த போது, அதைக் கேட்டு வி.பி.சிங்கை விட அதிகம் மகிழ்ந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி, பிரதமர் பதவியை தரமுன்வந்தபோது அதை வேண்டாம் என்று மறுத்தவர் வி.பி.சிங். கவிதையும், ஓவியமும் அவரது உயிருடன் கலந்த பொழுதுபோக்குகள் ஆயின.
1998ல் வி.பி.சிங்குக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 2006ல் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்குத் திரும்பி ஜன மோர்ச்சா கட்சிக்கு உயிர் கொடுத்தார் வி.பி.சிங். ஆனால் அது கொஞ்ச காலம்தான். ரத்தப்புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பால் வாடிய வி.பி.சிங். 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம்தேதி காலமானார்.
அவர் மறைந்த மறுஆண்டு, அவரது ஜன மோர்ச்சா கட்சி, தேசிய ஜனமோர்ச்சா என பெயர் மாற்றப்பட்டு காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.
காவிரிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க 1990ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைத்தவர் வி.பி.சிங்தான்.
இந்தநிலையில் வரும் நவம்பர் 27ஆம்தேதி, மண்டல் கமிஷன் நாயகன் வி.பி.சிங்கின் 15ஆவது நினைவுநாள். இதையொட்டி சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கின் முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிலை திறப்பு விழாவில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
‘வாழ்க்கை நீண்டதாக இருப்பதைவிட சிறப்பாக இருப்பதே நல்லது’ என்ற அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு வி.பி.சிங்கின் வாழ்க்கைதான்.