நமக்கு சஞ்சய் ராமசாமி தெரியும்.
சஞ்சய் ராமசாமி என்றதும் கஜினி படத்தில் சூர்யா-அசின் காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும்.
இன்று உலக அளவில் இன்னொரு ராமசாமி புகழ் பெற்று வருகிறார். இவர் விவேக் ராமசாமி.
அடுத்த வருடம்..அதாவது 2024ல் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. அந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
ட்விட்டரை எக்ஸாக மாற்றிய எலன் மஸ்க் இன்று ’எக்ஸ்’-ல் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
விவேக் ராமசாமியின் வீடியோ பேட்டி ஒன்றை பதிவிட்டு ஒரே ஒரு வரிதான் குறிப்பிட்டிருக்கிறார். மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர் – எலன் மஸ்க்கின் இந்த ஒரு வரியில் உலகத்தின் ஒட்டு மொத்த கவனத்தை கவர்ந்திருக்கிறார் விவேக் ராமசாமி.
யார் இந்த விவேக் ராமசாமி.
பெயரைப் பார்த்தால் நம்ம தமிழ்நாட்டு ஆள் போல் தெரியும். சரிதான், விவேக் ராமசாமியின் பூர்விகம் தமிழ்நாடுதான்.
ஆனால் இவரது பெற்றொரின் பெற்றோர்கள் கேரளாவில் பாலக்காடு பகுதியில் குடியேறியவர்கள்.
விவேக்கின் அப்பா வி.ஜி.ராமசாமி கேரளாவில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் படித்து முடித்து வேலைக்காக அமெரிக்காவுக்கு குடியேறியவர். அம்மா கீதா மனநல மருத்துவர்.
இப்படி கேரளாவும் தமிழ்நாடும் கலந்து இருப்பதால் விவேக் தமிழரா மலையாளியா என்ற குழப்பம் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் விவேக்குக்கு இரண்டு மொழிகளும் தெரியும். புரியும். ஆனால் தமிழ் மட்டும்தான் பேச முடியும்.
1985 ஆம் ஆண்டு பிறந்தவர் விவேக். இப்போது 38 வயதாகிறது. இந்தக் குறுகிய வயதில் பல சாதனைகளை செய்து அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவராய் மாறிவிட்டார்.
புகழ்பெற்ற பல்கலைக்கழங்களான ஹார்வர்டிலும் யேல்-லிலும் படித்திருக்கிறார். படிக்கும்போது வெப்சைட் நடத்துவது போன்ற சிறு சிறு தொழில்கள் செய்திருக்கிறார். அந்தத் தொழில்களை நல்ல லாபத்துக்கு விற்றிருக்கிறார்.
29 வயதில் ரோய்வண்ட் சயின்சஸ் (Roivant Sciences) என்ற பயோடெக்னாலாஜி நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். 2017 வரை இந்த நிறுவனம் சக்கைபோடு போடுகிறது. பணத்தைக் கொட்டுகிறது. ஆனால் 2017ல் நிறுவனத்தில் நடந்த சில குளறுபடிகளால் வீழ்ச்சியடைய தொடங்குகிறது. பார்த்தார் விவேக், ஆரம்பித்த நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.
40 வயதுக்குள் அமெரிக்காவில் பெரும் பணத்தை சம்பாதித்தவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும். இந்தப் பட்டியலில் 2016ஆம் ஆண்டு இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 31.
பிசினஸில் இருந்தாலும் விவேக்குக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தீவிர வலதுசாரி கருத்துக்களை கொண்டவர்.
அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்சிகள். வலதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும் ரிபப்ளிகன் கட்சி.
மற்றொன்று அதற்கு எதிரான டெமாக்ரடிக் கட்சி.
விவேக் ராமசாமி ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர்.
விவேக்குக்கு ரிசர்வேஷன் என்று சொல்லப்படும் இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறப்பு சலுகைகள் போன்றவை பிடிக்காது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அதிகம். விவேக் அப்படி பிரித்து பார்க்கக் கூடாது. திறமை அடிப்படையில்தான் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று கூறி வருபவர்.
அமெரிக்க அரசில் கல்வித் துறை இருக்கக் கூடாது என்று சொல்லி அதிர்வுகளை ஏற்படுத்தினார். பள்ளிகள் மூலம் அரசியல் ரீதியாக தவறான கருத்து பரப்பப்படுகிறது என்பது விவேக்கின் வாதம்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற குற்ற விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ.யை மூட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். FBI தேவையில்லாத ஆணி என்பது அவர் கருத்து.
இப்படி பல அதிரடி கருத்துக்களை கூறி மக்களை கவர்ந்து வருகிறார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது.
டெமாக்ரட்ஸ் கட்சியின் சார்பாக இப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடனே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுக் கட்சி அதாவது ரிபப்ளிகன் கட்சி சார்பாக டோனால் ட்ரம்ப் போட்டியிட விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க கட்சி அரசியல் நம்ம ஊர் அரசியல் போல் அல்ல. இங்கு பாஜக என்றால் மோடிதான், திமுக என்றால் மு.க.ஸ்டாலின் தான், அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமிதான் என்று தீர்மானிக்கப்படுவதில்லை.
குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும். பிறகு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து யார் வேட்பாளர் என்பதை தீர்மானிப்பார்கள்.
அந்த வகையில் ரிபப்ளிகன் கட்சி சார்பாக அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் விவேக் ராமசாமி.
முதலில் அவர் கட்சிக்குள் நடத்தப்படும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். இதுதான் அமெரிக்கத் தேர்தலில் முதல் ரவுண்ட். அதில் வென்றால்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.