விஜயகாந்த்தின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி:
விஜயகாந்த் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். தமிழ் சினிமாவின் ஆளுமைகளின் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார். அரசியல் தலைவராக தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் அவரின் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி.
எடப்பாடி பழனிசாமி:
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை:
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.
கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு, தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.
கமல்ஹாசன்:
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் பாரதிராஜா: எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாசர்:
செய்தி கேட்டவுடன் உண்மைதானா என ஆயிரம் பேரை கேட்டுத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டபோது மனத்தளர்வு ஏற்பட்டது. இதுவேதான் கேப்டன் என்ற பெயரை அறிந்தவர்க்கெல்லாம் ஏற்பட்டிருக்கும். முரட்டுத்தனமான நேர்மை எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை, களைப்பில்லா உழைப்பு, தமிழ் திரையுலகத்தின் முக்கியத்தூண் அடையாளமற்று கிடந்த அடையாறு திரைப்படக் கல்லூரியின் இரும்புக் கதவை திறந்து விட்டவர். அதிகமான திரைப்படக் கல்லூரி இயக்குநர்களை அழைத்து வந்தவர்.
கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புது ரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது. அவரால் பசிதீர்ந்த பல்லாயிரம் நல்மனங்கள் இன்று அவரை கண்ணீரோடு நினைவு கூறும். அவர்கள் வேண்டுதல் அவரை இறையின் பக்கம் கொண்டு நிறுத்தும்.
அரசியல் களம் ஒரு போர்க்களம் என தெரிந்தும் நிராயுதபாணியாய் மக்கள் நலமே தன் பலமென துணிவோடு ஒரே நோக்காய் செயல்பட்டவர். ஏழைகளின் குரலாக, நலிந்தோரின் துணையாக கடைசி மூச்சுவரை ஓங்கி ஒலித்தவர் இன்று நம்மோடு இலையே என்ற உண்மை நற்பகலை காரிருள் கவ்வுகிறது நமக்கே ஆறுதல் வேண்டும் போது ஆறுதலை யாருக்கு அளிக்கமுடியும்.
அவரின் மறைவு தந்த குடும்பத்தாரின், நண்பர்களின், தொண்டர்களின், தோழர்களின் துக்கத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்து மனம் உருகி மரியாதை செலுத்துகிறது
சரத்குமார்:
அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஒரே ஒரு மனுஷனுக்காக கிடைச்ச ஓட்டு.. இனி விஜயகாந்த் வாக்கு வங்கி யாருக்கு? போட்டியில் பெரும் கட்சிகள் அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிவக்குமார்:
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர்.. ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்.
தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர்.
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச் சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்.. கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
டி.ராஜேந்தர்:
அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராக உதயமாகி, புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த்.
ஏ.ஆர்.முருகதாஸ்:
அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
விக்ரம்:
மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். மிஸ் யூ கேப்டன்.
நடிகை த்ரிஷா:
கேப்டன் உங்கள் இரக்க குணத்தை எப்போதும் நினைவு கூர்வேன்.
பா.ரஞ்சித்:
ஆழ்ந்த இரங்கல்கள். மிஸ் யூ.
மாரி செல்வராஜ்:
அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த்.