’விடாமுயற்சி’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, இந்தப் படத்தை முழுமையாக எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்ஷனும், இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அஜித்தும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.
திட்டமிட்டப்படி அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததும், மீண்டும் ஆக்ஷன் காட்சிகளை அங்கேயே எடுக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் சொன்ன தேதியில் யாரும் இங்கேயிருந்து கிளம்பவில்லை.
அஜித்திற்கு மருத்துவ சிகிச்சை இருந்ததால், ஷூட்டிங் தள்ளிப் போகிறது என்று கூறினார்கள். ஆனால் அஜித் இரண்டு நாட்களிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அடுத்து, தன்னுடைய மகன் விளையாட்டைப் பார்த்து ரசிக்க மகனது பள்ளிக்குச் சென்றார். அப்படியே ஒரு பைக் ட்ரிப்புக்கும் போனார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்ளி’ படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனாலும் ’விடாமுயற்சி’ பற்றி எங்கும் பேச்சில்லை. லைகா தரப்பிலும் எதுவும் சொல்லப்படவில்லை. இயக்குநரும் வாயைத் திறக்கவே இல்லை.
இதற்கு காரணம் லைகாவுக்கு இருக்கும் நிதிநெருக்கடிதான் என்று கோலிவுட்டில் ஒரு கிசுகிசு நிலவியது. அடுத்தடுத்த படங்களின் தோல்வியால், கொஞ்சம் பணமுடை அதான் நாட்கள் பிடிக்கிறது என்றும் கிசுகிசுத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக அஜித்திற்கு சம்பளம் கொடுக்கவில்லை. பொதுவாக அஜித் சம்பளம் பேசி அது முடிவானால், தனது சம்பளத்தை ஒவ்வொரு தவணைஅயாக வாங்குவதுதான் வழக்கமாம். ஆனால் சொன்னபடி அஜித்திற்கு சம்பளத்தைக் கொடுக்கவில்லை. அதனால் அஜித் நடிக்க வரவில்லை என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் அஜித் பல தயாரிப்பாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் சம்பளம் வாங்காமலேயே நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். இதனால் அஜித் அப்படி செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. இதற்கும் லைகா தரப்பில் இருந்து அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.
இதற்குள், அஜித் ‘குட் பேட் அக்ளி’ படத்தின் முதல் ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துவிட்டு சென்னைக்கு மீண்டும் திரும்பிவிட்டார்.
இப்படியே இழுத்து கொண்டுப் போன விடாமுயற்சி ஷூட்டிங்கை கடும் முயற்சிக்குப் பிறகு லைகா தொடங்க இருக்கிறது. மீண்டும் அஜர்பைஜான் நாட்டில்தான் ஷூட்டிங். மீண்டும் ஆக்ஷன் காட்சிகளைத்தான் எடுக்கப்போகிறார்களாம்.
இன்னும் 30% மட்டுமே எடுக்கப்படவேண்டியிருக்கிறது. இவற்றை எடுத்துவிட்டால் படம் முழுமையாக முடிவடைந்துவிடும். எப்படியாவது ஒட்டுமொத்த படத்தையும் இந்த ஷெட்டியூலிலேயே முடித்துவிட வேண்டுமென லைகா மும்முரம் காட்டுகிறதாம். அஜித்தும் நிச்சயம் என சொல்லியிருக்கிறாராம்.
லைகா ப்ரொடக்ஷன்ஸுக்கு இப்போதைய தேவை மிகப் பெரும் லாபத்தை கொடுக்கும் படங்கள்தான். அதனால் விடாமுயற்சியை ரொம்பவே நம்பியிருக்கிறதாம் லைகா.
பாலாவுக்கு குடைச்சல் கொடுக்கும் தனுஷ், கமல்
கடைசியாக இயக்கிய மூன்றுப் படங்களும் சரியான வரவேற்பைப் பெறாமல் போனதால், அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் பாலா. வழக்கம் போலவே யாரையும் சந்திப்பதும் இல்லை. பேசுவதும் இல்லை. எப்படியாவது பழைய கெத்துடன் மீண்டு வந்துவிட வேண்டுமென நினைக்கிறாராம்.
ஆனால் மீண்டும் சிக்கல்கள். மனைவி மலருடன் மனஸ்தாபம். அதைத் தாண்டிதான் ‘வணங்கான்’ பட வேலைகளை ஆரம்பித்தார். சூர்யாவுடன் பாலா மீண்டும் இணையவிருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்பு எகிறியது. ஆனால் பாலாவிற்கும், சூர்யாவுக்கும் இடையே ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஈகோ எட்டிப்பார்க்க, இருவரும் பரஸ்பரம் பேசி விலகிவிட்டார்கள்.
ஆனால் ‘வணங்கான்’ படத்தை எடுத்தே தீருவது என அருண் விஜயை வைத்து பாலா எடுத்து முடித்துவிட்டார். படமும் தயாராகிவிட்டது. இங்கேதான் பாலாவிற்கு மீண்டும் குடைச்சல்.
ஜூலை 26-ம் தேதி தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படமான ‘ராயன்’ வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
ஆனால் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் ஷங்கர் – கமல் இணைந்த ‘இந்தியன் 2’ படத்தையும் சீக்கிரமே வெளியிட்டாக வேண்டிய நெருக்கடியில் ஷங்கர் இருக்கிறாராம். இதனால் ‘இந்தியன் 2’ ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
தனுஷ் படத்தின் இந்த அறிவிப்பால் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள வணங்கான் படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனுஷின் ‘ராயன்’ வெளியீடு தள்ளிப் போய் ஜூலை என முடிவாகி இருக்கிறது. ’இந்தியன் 2’ மற்றும் ‘ராயன்’ ஆகிய இரு படங்களும் சில நாட்கள் இடைவெளியில் வெளியாக இருப்பதால், ஜூலை வெளியீடு என்று கூறிவிட்டு அதற்கான வேலைகளில் இறங்கிய பாலாவுக்கு அதிர்ச்சி.
கமல் படம் என்பதால் ஜூலை 26-ம் தேதி வணங்கான் வெளியாகும் என்று முடிவான நிலையில், இப்போது தனுஷும் தனது படத்தை ஜூலை 26-ல் வெளியிட இருப்பதால், வணங்கானுக்கு சிக்கல் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
‘ராயன்’ படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால், யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லையாம். சாதாரண நாட்களில், விடுமுறை இல்லாத போது பெரிய படங்கள் வெளியானால் திரையரங்குகள் அமைவதில் இருந்து, பல சிக்கல்கள் இருக்கின்றன.
அடுத்து இந்தியன் 2, ராயன் இந்த இரு படங்களுக்கும் முன்போ அல்லது நடுவிலோ வணங்கானை வெளியிட்டால், அடுத்த வாரமே மற்றொரு பெரிய படம் வந்துவிடும். இதனால் வசூல் நிச்சயம் பாதிக்கப்படும்.
பொதுவாகவே பாலா படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வசூலில் பிரதிபலிக்காது என்ற பேச்சும் இருக்கிறது. இதனால், ஜூலை வெளியீட்டை தள்ளி வைக்கலாமா என்று பாலா தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
வணங்கானையும் நீங்கள் முதலில் வாங்க. நான் அப்புறம் வர்றேன் என வணங்க வைத்துவிட்டார்களே.