No menu items!

கள்ளச்சாராய சாவுகள்: என்னநடந்தது? எப்படிநடக்கிறது? – போலீஸ் அதிகாரியின் பகீர் தகவல்கள்

கள்ளச்சாராய சாவுகள்: என்னநடந்தது? எப்படிநடக்கிறது? – போலீஸ் அதிகாரியின் பகீர் தகவல்கள்

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவுகள். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள் நிலை சீரியஸாக இருப்பதால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீதான நடவடிக்கை மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒராண்டுக்குள் அடுத்த சம்பவம்… என்ன நடந்தது? யார் காரணம்?

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே…

“கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக காவல்துறையில் ஒரு ஏடிஜிபி தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு செயல்படுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று யூனிட்டுகள் உள்ளன. மூன்று யூனிட்டுக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் பொறுப்பு. அவருக்கு கீழே இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், எட்டு தலைமை காவலர்கள், 10 காவலர்கள். இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஏடிஎஸ்பி, ஒரு டிஸ்பி இருக்கிறார்கள். இப்படி 32 மாவட்டங்களுக்கும் உள்ளது. இத்தனை பேர் இருந்தும் கள்ளச்சாராயத்தை  ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள், கள்ளச்சாராய வியாபாரிகள் பின்னால் இருந்து செயல்படும் அரசியல்வாதிகள்.

டாஸ்மாக் சரக்குகளின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் குறைவான விலையில் கிடைக்கும் போதை வஸ்துகளை தேடிப் போகிறார்கள். அவர்களை குறிவைத்து 10, 20 ரூபாய் பொட்டலமாக கஞ்சா விற்கப்படுகிறது. இதுபோல்தான் கள்ளச் சாராயமும்.

பொதுவாக டாஸ்மாக்களில் விற்கப்படும் மது ஈத்தேல் ஆல்கஹால் கலந்தது. இதில் 30 சதவிகிதம் வரைக்கும் ஆல்கஹால் கலக்கலாம். குடிப்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது. இப்போது இறந்து போயிருப்பவர்கள் குடித்துள்ளது எத்தனால் ஆல்கஹால். எத்தனால் ஆல்கஹால் என்பது மருந்து கம்பெனிகளில் மருத்து தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இதில் எவ்வளவு தண்ணீர் கலந்தாலும் இதன் விஷத் தன்மை போகாது. இது குடிப்பவர்கள் கண்களை முதலில் பாதிக்கும், தொடர்ந்து லிவர், இதயத்தை பாதிக்கும். உயிரே போய்விடும்.

கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கு மெத்தனால் வரும் வழியைக் கண்டுபிடித்து தடுக்க வேண்டும். மருந்து கம்பெனிகளில் மெத்தானால் இருப்பு, செலவு போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உளவுத் துறை இதில் கடுமையாக செயல்பட வேண்டும்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம், சட்டம் பலவீனமாக இருப்பது. இதனால், கள்ளச் சாராயம் விற்பவர்களை காவல்துறை கைது செய்தாலும் நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிவிட்டு சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள். ஏனெனில், சாராயத்தில் விஷம் கலந்துள்ளது என்றால் மட்டுமே ஜாமினில் வெளிவர முடியாத செக்‌ஷனில் வழக்கு பதிவு செய்யமுடியும்; இல்லை என்றால், ஜாமினில் வெளிவரக்கூடிய வழக்குகள்தான் பதிவு செய்யப்படும். சுலபமாக ஜாமின் கிடைக்கும் என்பதால், கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கு பயமில்லை.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள்கூட விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். நான் பணியில் இருக்கும்போது கள்ளச் சாராயம் விற்றவர்கள் 35 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தேன். அதுபோல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மேலும் குண்டாஸ் போடவேண்டும்.

கள்ளச் சாராயம் விற்பவர்கள் சுலபமாக வெளியே வர முடியாதபடி மது விலக்கு அமல் சட்டத்தை திருத்தி கடுமையாக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்ததுபோல், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். கள்ளச் சாராய சாவுகளை கொலைக் குற்றமாக கருத வேண்டும். இறந்த போனவர்கள் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கான உண்மையான இழப்பீடு என்பது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுதான். தவறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும். குண்டர் சட்டம் போட்டாலும் திரும்ப வெளியே வந்து மீண்டும் கள்ளச் சாராயம் விற்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

காவல்துறை கறுப்பு ஆடுகள், பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்” என்கிறார், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...