சமூக நீதி, பெரியார் மண் என்றெல்லாம் பெருமை பேசும் தமிழ்நாடு குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டங்களில் 441 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் பல வடிவங்களில் சாதியத் தீண்டாமை இருப்பதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி (Tamil Nadu Untouchability Eradication Front) நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரியில் சில மாதங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மீது சாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் சாதிய பாகுபாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தகவல்கள்தாம் வெளிவந்திருக்கின்றன.
ஆய்வு செய்யப்பட்ட 441 பள்ளிகளில் 156 பள்ளிகளில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பல அதிர்ச்சிக்குரிய சங்கதிகளும் வெளியில் வந்திருக்கின்றன.
இதில் 15 பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
19 பள்ளிகளில் தண்ணீர் குடிக்க வேறு வேறு டம்ளர்களை பயன்படுத்துகிறார்கள்.
25 பள்ளிகளில் சாதி ரீதியான மோதல்கள் நடந்திருக்கின்றன.
33 பள்ளிகளில் மாணவர்கள் சாதிய அடையாளங்களுடன் (கயிறு கட்டுதல், சங்கிலிகள்) பள்ளிக்கு வருக்கிறார்கள்
12 பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் சாதிய பாகுகபாடுகள் பார்க்கப்படுகின்றன.
ஆய்வு செய்யப்பட்ட 441 பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 321. அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 58. தனியார் பள்ளிகள் 61.
சாதிய மோதல்கள் நடந்த 25 பள்ளிகள் திருவண்ணாமலை, ராமநாதபுரம், தென்காடி, கடலூர், திண்டுக்கள் மாவட்டங்களை சேர்ந்தவை.
”நகரத்துப் பள்ளிகளைவிட கிராமத்துப் பள்ளிகளில்தான் சாதி வித்தியாசங்கள் அதிகமாக இருக்கின்றன” என்கிறார் இந்த ஆய்வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சுகந்தி.
”சாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் அவற்றை பாடமாக வைக்க வேண்டும்” என்கிறார் இந்த முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்.