எலன் மஸ்க் வாங்கிய காலத்தில் இருந்தே ட்விட்டருக்கு நேரம் சரியில்லை. ஒரு பக்கம் ஊழியர்களை கண்ட மேனிக்கு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க், மறுப்பக்கம் ட்விட்டரில் ப்ளூ டிக்கை பயன்படுத்த கட்டணம், குறிப்பிட்ட அளவிலான ட்வீட்களைத்தான் பார்க்க முடியும் என ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து கழுத்தை நெரிக்கிறார். இந்த நேரம் பார்த்து ட்விட்டருக்கு போட்டியாக ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார் மெட்டா (ஃபேஸ்புக்) நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க். த்ரெட்ஸ் செயலியைத் தொடங்கிய 7 மணி நேரத்திலேயே 1 கோடிக்கும் அதிகமானோர் அந்த செயலியில் இணைய நிலைகுலைந்து போயிருக்கிறது ட்விட்டர்.
அது என்ன த்ரெட்ஸ்?
த்ரெட்ஸ் (Threads) என்பது பயனர்கள் எழுத்து (டெக்ஸ்ட்கள்) மூலம் கருத்துகளைப் பகிரும் ஒரு செயலி. இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாகவும் ஒருவர் இதில் கணக்கைத் தொடங்க முடியும். ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். ட்விட்டரில் இதைவிட குறைவான (280 வார்த்தைகள்) வார்த்தைகளைத்தான் பதிவிட முடியும் என்பதால் இது ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வார்த்தைகளைப் பதிவிடுவது த்ரெட்ஸின் பிரதானமான அம்சமாக இருந்தாலும், இதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ், உயர் தர வீடியோக்களையும் பகிர முடியும்.
த்ரெட்ஸ் செயலியின் முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. எழுத்துகள் அடிப்படையிலான உரையாடலுக்கான செயலி இது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த ட்விட்டர் தளத்துக்குப் போட்டியாக த்ரெட்ஸ் தளத்தை தொடங்குகிறாரோ, அதே ட்விட்டர் தளத்தில் அதைப்பற்றிய அறிமுக ட்வீட்டை பதிவிட்டுள்ளார் மார்க். இதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தை அவர் பயன்படுத்தி இருக்கிறார். 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ட்விட்டரில் பதிவைப் போட்ட பிறகு, நேற்றுதான் மீண்டும் அவர் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் உள்ளது. அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வண்ணத்தில் இது இருப்பதாக கூறப்படுகிறது.
த்ரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராமுடன் இணைக்கப்பட்டுள்ளது அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும், இதனால் எதிர்காலத்தில் ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக த்ரெட்ஸ் இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
ட்விட்டர் செயலியை த்ரெட்ஸ் முந்துமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்கு சில காலம் பிடிக்கும்” என்று கூறியுள்ளார். இந்த செயலியைப் பற்றி மேலும் கூறியிருக்கும் அவர், “இன்ஸ்டாகிராமில் இருந்து சிறந்த அம்சங்களை எடுத்து அதை மேலும் மேம்படுத்தி, மக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இந்த செயலியை உருவாக்கி இருக்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.