No menu items!

ஹார்மோனியத்தை தொட்டாலே பாடல்! – இளையராஜாவை புகழும் மலையாள இயக்குநர்

ஹார்மோனியத்தை தொட்டாலே பாடல்! – இளையராஜாவை புகழும் மலையாள இயக்குநர்

காப்புரிமை தொடர்பாக இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகி உள்ள நிலையில், கேரளாவில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநரான சத்யன் அந்திக்காடு.

மாத்ருபூமி ஸ்டார் & ஸ்டைல் மே 2024 இதழுக்காக அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்…

விசாலமாகப் பரந்து விரிந்த வேம்பனாட்டுக் காயல் எங்கள் முன்னில். நதிப்பரப்பின் மேல் மிதந்து செல்லும் படகு வீட்டின் முன்னின்று நீரின் அழகை ரசிக்கிறார் இளையராஜா. ‘மனசினக்கரே’ படத்தின் பாடல்களை உருவாக்கக் காலையில்தான் அவர் விமானத்தில் வந்து இறங்கியிருந்தார்.

வழக்கமாக அவர் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது கம்போசிங் அறையில் அமர்ந்துதான் பாடல்களை உருவாக்குவார்.

புலம்பெயர் விவசாயியான மாத்துக்குட்டிச்சாயனின் கிராமத்து மனைவி கொச்சுத்திரேசியாவின் கதைக்கு, எனது ஊருக்கு வந்திருந்து அவர் இசையமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.
மண் மணம் கமழும் பாடல்கள் என்று சொல்வார்களல்லவா? அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.

ஃபாசிலிடம் நான் கேட்டபோது அவர் சொன்னார்,

“நடக்காது சத்யா. தனது சொந்த அறையிலிருந்தே ராஜா சார் இசையமைப்பார். ரஜினிகாந்தும் கமலஹாசனும் கூட எத்தனையோ முறை முயன்றிருக்கிறார்கள். அவர்களது அழைப்பையும் கூட அவர் மரியாதையுடன் மறுத்திருக்கிறார்.”

இளையராஜாவை என்னிடம் அறிமுகப்படுத்தியவர் ஃபாசில்தான். அவர் சொல்வது நூறு சதவீதம் உண்மைதான். ஆனால் எனக்கொரு உள்ளுணர்வு. நான் அழைத்தால் அவர் இங்கு வருவாரென்று.

அதற்கு முன்பு ஒரே ஒரு படத்தில்தான் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம். அது ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’. ஆனால், அந்தப் படத்தில் வேலை செய்ததன் மூலம் நாங்கள் நட்பாகியிருந்தோம். அதை நட்பு என்று சொல்லக்கூடாது. அவருக்கு என் மீது ஒருவிதப் பாசம் இருந்தது போல எனக்குத் தோன்றியது. அந்த நம்பிக்கையில் அவரைத் தொலைபேசியில் அழைத்தேன்.

“ஒருமுறை ஆலப்புழாவுக்கு நீங்கள் வர இயலுமா? சென்னைச் சூழலிலிருந்து இரண்டு மூன்று நாட்கள் விடுபடலாம். காயலோரமுள்ள ரிசார்ட்டில் அறை எடுத்துக் கொள்ளலாம். இடையிடையே படகு வீடு ஒன்றில் ஏறிச் சுற்றியும் வரலாம்” என்றேன்.

அவர் சிரித்தார்.

“வானிலை எப்படி இருக்கிறது?”

“நல்ல வானிலை சார். வெயில் அதிகமில்லை. சில நாட்களில் மழையும் உண்டு.”

அவர் என்னை மிகவும் நேசித்தார். விமான நிலையத்திலிருந்தே நேரே படகு வீட்டுக்கு வந்திறங்கினார். கூடவே ஹார்மோனியமும், உதவியாளர் சுந்தரராஜனும். கிரீஷ் புத்தஞ்சேரி (பாடலாசிரியர்) அதற்கு முன்பே வந்திருந்தார்.

படகு வீடு நகர ஆரம்பித்தபோது நான் சொன்னேன்,

“இன்று நமக்குப் பாடல் வேலை ஒன்றும் வேண்டாம். காயலினூடே சற்று நேரம் சுற்றுவோம். கதைகள் பேசுவோம். சுவையான சைவ உணவு ஏற்பாடு செய்திருக்கிறேன். மதியம் சற்று இளைப்பாறவும் வசதியுண்டு.”
ராஜா சார் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தார். இசைக்கூடம், வீடு, தியேட்டர் இவற்றை விட்டு வேறு உலகம் அவருக்கு இருந்ததில்லை. எப்போதாவது வெளியே சென்றால் அது திருவண்ணாமலையில் தன் ஆன்மீக குருவான ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்குத்தான். அங்கே அவர் ஒரு துறவி போல் இருப்பார்.

தீர்க்கமாக அமர்ந்திருந்த அவரிடம் ‘மனசினக்கரே’ கதையை நான் கூறினேன். எங்கெங்கு பாடல்கள் வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினேன். ரஞ்சன் பிரமோத் திரைக்கதையாசிரியர். ஆனால் எழுத்துப்பணி இன்னும் முழுமையடையவில்லை. ஆகவே, ரஞ்சன் எர்ணாகுளத்தில் விடுதியறையில் உட்கார்ந்து தலை தீப்பிடிக்க எழுதிக் கொண்டிருக்கிறார்.

கிடைத்த சிறிது நேரத்தில் தனக்குத் தோன்றிய சில கருத்துக்களையும், கிரீஷுக்கு சில ஆலோசனைகளையும் கூறிய பிறகு, ராஜா சார் படகின் முன்புறம் நடந்து சென்றார்.

அமைதியான காயல். சுகமான காற்று. இடையிடையே வலைவீசும் மீனவர்கள். பறந்துதிரியும் பல்வேறு பறவைகள்.

திடீரென இளையராஜா சொன்னார்:

“சுந்தரராஜா, அந்த ஹார்மோனியத்தை எடுத்துவா.”

சுந்தரராஜன் ஹார்மோனியத்தை அவருக்கு முன்னால் வைத்தார்.

அப்போதும் நான் சொன்னேன், “இன்று இசையமைக்க வேண்டாம் சார். இளைப்பாறுங்கள். புதுச் சுறுசுறுப்புடன் நாளை ஆரம்பிப்போம்.”

“ஐயோ, இது சும்மா விளையாட்டுக்காக” என்றார். ஹார்மோனியத்தில் அவரது விரல்கள் விளையாடத் தொடங்கின.

பின்னர் மெல்லிய குரலில் ஒரு மெட்டைப் பாடினார். மிக அற்புதமான மெட்டு அது.

சுந்தரராஜன் அதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தார்.
“கேட்க அருமையாக இருக்கிறது!” என்று நான் வியப்புடன் சொன்னேன்.

சிரித்துக் கொண்டே அவர் கேட்டார், “ஜெயராம் அம்மச்சியுடன் வாகத்தானத்துக்குப் போகும்போது, அந்த தேவாலயப் படிக்கட்டில் அமர்ந்து பாடும் பாடலுக்கு இது போன்றதொரு மெட்டு பொருத்தமாக இருக்குமா?”

“இது போன்றதல்ல, இதுவே போதும்!” என்றேன் நான்.

கிரீஷ் மூலையைப் பார்த்தபடி பாடிப் பார்த்து, தலையசைத்து ஆமோதித்தார்.

“மெல்லெயொன்னு பாடி நின்னே நானுணர்த்தியோமனே” என்ற பாடல் தோன்றியது.

பின்னர் காயலைப் பார்த்தபடி, ஹார்மோனியமின்றி அம்மெட்டின் தொடர்ச்சியை உரக்கப் பாடினார். அது பாடலின் சரணமாக மாறியது.

இளையராஜாவின் ஆன்மாவிலிருந்து ஒரு இசைப்பாடல் பொங்கிவருவதை நான் நேரடியாகக் கண்டேன்.

ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை சொன்னது பொய்யில்லை. “நான் ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் தவமிருப்பேன். ஆனால் இளையராஜா ஹார்மோனியத்தில் கை வைத்தாலே அது இசையாகிவிடும்.”

‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ படத்திற்காக சென்னைக்குப் போகும்போது வீட்டில் நான் சொன்னது, ஓரிரு வாரங்களில் திரும்பி வருவேன் என்றுதான். நடனத்துக்கும் இசைக்கும் மிகுந்த முக்கியத்துவமுள்ள படம் அது. இந்தியாவிலேயே சிறந்த இசையமைப்பாளரோடு முதல்முறையாக ஒரு படத்திற்காக வேலை செய்கிறேன். எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை.

இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்திய ஃபாசில் முதலிலேயே சொல்லியிருந்தார், “காலை துல்லியமாக 7 மணிக்கே அவர் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார். 6.30க்குள் சத்யன் அங்கே இருக்க வேண்டும்.”

நான் 6 மணிக்கே வந்துவிட்டேன். சொன்னபடியே 7 மணிக்கு வெள்ளை உடையணிந்து, புன்னகை பூத்த முகத்துடன் ராஜா சார் வந்தார். புவியில் தரையிறங்கிய ஒரு மெல்லிய மேகம்போல். மூகாம்பிகைக்கு முன் விளக்கேற்றி வழிபட்டபின், கதை கேட்கத் தயாரானார்.

சிரமப்பட்டு தமிழில் கதை சொல்லத் தொடங்கிய என்னிடம் அவர் சுத்தமான மலையாளத்தில் சொன்னார், “மலையாளமே போதும், எனக்குப் புரியும்.”

கதையையும், பாடல் தேவைப்படும் இடங்களையும் அரை மணிநேரத்தில் விளக்கிச் சொன்னேன். சிறிது நேரம் கண்மூடி தியானித்தபின், அவர் ஹார்மோனியத்தை எடுத்து மெட்டுக்களை இசைக்கத் தொடங்கினார். ஒரு சூழலுக்கே பல மெட்டுக்கள். எது மிகவும் பிடித்ததென்று சொன்னால், உடனே அடுத்த பாடல். அதுவும் மிகச் சில நிமிடங்களில்.

நேரம் பத்து மணி ஆனபோது, நான் வெளியே வந்து ஃபாசிலை அழைத்தேன்: “ஃபாசிலே, இப்போது காலை பத்து மணிதான் ஆகிறது. ஆனால் ஐந்து பாடல்களின் இசையமைப்பும் முடிந்துவிட்டது. எனக்கொரு சந்தேகம். அவர் மீதுள்ள வியப்பினால்தான் அந்தப் பாடல்கள் எல்லாம் கதைச் சூழலுக்கு ஏற்றவை என்று எனக்கு மட்டுமே தோன்றுகிறதா?”

சிரித்துக்கொண்டே ஃபாசில் சொன்னார்: “அதுதான் இளையராஜா. சரஸ்வதி தேவி அவரது விரல்களில் குடியிருக்கிறாள்.”

அந்தத் திரைப்படமும் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. ‘கோடமஞ்சின் தாழ்வரை’யும் ‘கானஷ்யாம வ்ருந்தாரண்ய’வும் இன்றளவும் புதுமை குன்றாத பாடல்கள்.

நான் அடிக்கடி ஒன்று சொல்வதுண்டு. சினிமா எனக்குப் பல நற்பயன்களைத் தந்திருக்கிறது. அதில் மூன்று மிகப் பெரிய நற்பயன்களில் ஒன்று, கந்தர்வக் குரலோன் யேசுதாஸ் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தது என்பதுதான். நான் எழுதிய பாடல்களை அவர் பாடுவதைக் கேட்கவும் பார்க்கவும் வாய்த்திருக்கிறது என்பதே என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். மற்றொன்று, அசாத்தியமான நடிகர் மோகன்லாலை என் இயக்கத்தில் நடிக்கச் செய்ததாகும். மூன்றாவதாக, இளையராஜாவுடன் ஒன்றாக அமர்ந்து பணியாற்றியது. நான் படம் இயக்கத் துவங்கியபோது அவரது இசையில் ஒரு படமாவது செய்து விட்டால் போதும் என்பதே எனது ஆசையாக இருந்தது. ஆனால் ஒன்றுக்குப் பதில் மொத்தம் பத்துப் படங்கள் அவரோடு வேலை செய்திருக்கிறேன். இதை அதிர்ஷ்டம் என்று சொல்லக் கூடாது. ஆசி என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு படமும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காட்சியின் பின்னணி இசையும் எனக்கு அரிதான அனுபவங்களை அளித்திருக்கின்றன.

’அச்சுவிண்டே அம்மா’ படத்தின் இறுதிப் பகுதியில் ஊர்வசி தனது உண்மையான தாய் இல்லை என்று தெரிந்த பிறகு அவரை மீரா ஜாஸ்மின் பார்க்க வரும் காட்சி ஒன்று உண்டு. வீட்டின் முன்பு கதறி அழுதபடி, அவள் வாயிற்கதவைத் தள்ளித் திறக்கையில் நாம் முதலில் கேட்பது கோயில் மணியோசைதான். அதுவே ஒரு இசையாக மாறும்.

’அந்த வீடு அவளுக்குக் கோயில் போன்றது’. இதுதான் இந்தக் காட்சியின் பின்னணியிசைப் பதிவின் போது இளையராஜா சொன்னது.

ஒரு இசையமைப்பாளர் வெறுமனே படத்தின் காட்சிகளினூடே பயணிக்கக்கூடாது, கதைமாந்தர்களின் ஆன்மாவினூடே பயணிக்க வேண்டும் என்பதை அன்று எனக்கு ராஜா உணர்த்தினார்.

ஏரியைப் போலவே கடலும் ராஜாவுக்கு மிகவும் பிடிக்கும். சில படங்களின் இசையமைப்பு வேலைக்காகக் கடற்கரையில் நாங்கள் தங்கியிருக்கிறோம். அப்போது மாலை வேளைகளில் கடற்கரையோரம் காலாற நடப்பதுண்டு. ஒரு சமயம் பென்னி பி நாயரம்பலம் கூட எங்களுடன் இருந்தார். அப்போது அலைகளின் ஓசையை ஒரு இனிய மெட்டாக ராஜா இசையமைத்தார். உடனே கைதப்புரம் அதைப் பாடினார் (கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி). இதையெல்லாம் சாட்சியாக இருந்து பார்த்தது நான் செய்த புண்ணியம்.

எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் ஒரு எல்லைக்கு மேல் நான் சுதந்திரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். மிகவும் அவசர அவசியமில்லாமல் அவரைத் தொலைபேசியில் அழைப்பதோ, குறுஞ்செய்தி அனுப்பவதோ கிடையாது. அந்த மாமனிதனை சிறிது தொலைவிலிருந்து பார்க்கவே நான் விரும்புகிறேன். விண்மீன்களை விண்மீன்களாகவே பார்க்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் ஒளியை ரசிக்க முடியும்.

சில நாட்களுக்கு முன்பு, நான் அவரது எண்ணில் அழைத்திருந்தேன். மிகவும் பிரியமான மகள் பவதாரிணியின் மரணச் செய்தியைக் கேட்டபோதுதான் அது. தந்தையின் வாழ்நாளிலேயே பிள்ளைகள் இவ்வுலகை விட்டுச் செல்வது, எந்தத் தந்தைக்கும் தாங்க முடியாத துயரமாகும்.

இரண்டு மூன்று முறை அழைத்திருந்தும் அவர் தொலைபேசியை எடுக்காததால், நான் ஒரு குரல் செய்தியை மட்டும் அனுப்பினேன்:

“ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. மற்றவர்கள் துயரப்படும்போது அவர்களை ஆற்றுப்படுத்தும் இளையராஜா இந்தத் துயரத்தைத் தாங்க இறைவன் வலிமையைத் தரட்டும்” என்று மட்டுமே நான் சொல்லியிருந்தேன்.

“நன்றி…சத்யன்” என்று மிகவும் மனம் நொந்த குரலில் அவர் பதிலளித்தார்.

அத்தகைய துயர் நிறைந்த குரலை நான் இதுவரை கேட்டதில்லை. எனவேதான் அந்தக் குரல் செய்தியை நான் இன்னும் அழிக்கவில்லை. அது ஒரு தந்தையின் ஆன்மாவின் ஓலம். இளையராஜா என்ற மாமனிதனின் குரல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...