No menu items!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில்  படிக்கும் புத்தகம் இதுதான்!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில்  படிக்கும் புத்தகம் இதுதான்!

அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர்ந்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, வரும் 15ஆம் தேதிவரை சிறையில் அடைக்க, டில்லி ரோஸ் நிழற்சாலை நீதிமன்ற சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நேற்று காலை உத்தரவிட்டார். இதனையடுத்து, கெஜ்ரிவால் சிறைக்குள் தான் வாசிப்பதற்காக கொண்டுபோக 3 புத்தகங்களுக்கு அனுமதி கோரினார். அதில், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுடன் நீரஜா சௌத்ரி எழுதிய ‘How Prime Ministers Decide’ என்கிற புத்தகத்தையும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

How Prime Ministers Decide புத்தகத்தில் என்ன விசேஷம்?

இந்நூல் பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘How Prime Ministers Decide, நீண்ட அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி எழுதி அண்மையில் வெளியான புத்தகம். ஆறு பிரதமர்கள் பற்றி எழுதியிருக்கிறார் (இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், விபிசிங், வாஜ்பாய், மன்மோகன் சிங்)

நீரஜா செளத்ரி அண்மையில் (பிப்ரவரி 2024) ஜெய்பூர் இலக்கிய விழாவில் நடந்த உரையாடலில் அந்தப் புத்தகத்தில் உள்ள சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் கேட்க சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருக்கிறது என்பது மட்டுமல்ல. வேறு பல insightகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

1

பெரும் தோல்விக்குப் பின் இந்திரா 1980ல் பிரதமரானார். மிகப் பெரிய வெற்றி. வெற்றிக்குக் காரணம் சஞ்சய் காந்தி வகுத்த உத்திகள் என இந்திரா நினைக்கிறார். இந்திரா 1977லிருந்து 1980 வரை கோவில் கோவிலாகப் போய்க் கொண்டிருந்தார். அவர் இஷ்ட தெய்வம் இமயத்தில் உள்ள சாமுண்டா தேவி. வெற்றிக்குப் பின் அவரைப் போய் வழிபட வேண்டும் என்று நினைக்கிறார். ஆறு மாதங்கள் அசைய முடியவில்லை. பின் போவதற்கு ஜூன் 22 (1980) என்று நாள் குறிக்கிறார். கோவிலில் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், புறப்பட வேண்டிய அன்று வானிலை சரியில்லை, ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாது. எனவே, போக வேண்டாம் என சஞ்சய் தடுத்துவிடுகிறார். (ஆனால், அன்று வானிலை நன்றாகத்தானிருந்தது)

அவர் வரவில்லை என்ற செய்தி கேட்டதும் கோவில் பூசாரி தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டது என்று சீற்றம் அடைகிறார். “சாதாரண மனிதர்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை என்றால் அம்மா (சாமுண்டா தேவி) மன்னித்துவிடுவாள். ஆனால், ஆள்கிறவர்கள் வரவில்லை என்றால் சீற்றம் அடைவாள்” எனச் சொல்கிறார். இந்திரா வராமலே அவர் சார்பாக பூஜைகள் நடக்கின்றன. பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கோவில் பூசாரிகள் டில்லிக்குச் செல்கின்றனர். டில்லியை அடைய 50 கி.மீ இருக்கும் போது செய்தி வருகிறது. சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்துவிட்டார்! என.

2

சிவானந்த மூர்த்தி என்று நரசிம்மராவிற்கு ஒரு குரு. போலீஸ் அதிகாரியாக இருந்தவர் அந்தப் பணியைத் துறந்துவிட்டு விசாகப்பட்டினத்தில் ஆசிரமம் அமைத்து இருந்து வருகிறார். நரசிம்மராவ் அவரை குருஜி என்றே எல்லோர் முன்னிலையிலும் கூப்பிடுவது வழக்கம்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். நரசிம்மராவ் சிவானந்த மூர்த்தியை சந்திக்கிறார். பாப்ரி மஸ்ஜித் என்ன ஆகும் எனக் கேட்கிறார். குருஜி சில நிமிடம் கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டு பின் திறந்து சொல்கிறார்: “என்னால் அதை அங்கு காணமுடியவில்லை.”

3

வாஜ்பாய்க்கு கேன்சர் இருந்தது 1980லிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், அது யாருக்கும் தெரியாது. அவரது நிதி அமைச்சராக இருந்த யஷவந்த் சின்காவிற்குக் கூடத் தெரியாது. ஆனால், அந்த ரகசியம் ராஜீவ் காந்திக்குத் தெரியும். ராஜீவ் காந்தி அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறார். முற்றிலுமாகச் சிகிச்சை முடியும் வரை திரும்பி வரக்கூடாது எனக் கட்டளை இடுகிறார். அதன் பின் வருடா வருடம், ஐநா சபைக் கூட்டத்திற்கு அனுப்புவது போல அவரை அனுப்பி செக் அப் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.

ராஜீவ் இறந்த போது வாஜ்பாய் சொன்னது: “ராஜீவ் என் உயிரைக் காத்தவர்.”

4

2004. காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது. சோனியாதான் பிரதமர் என்று முடிவாகிவிட்டது. சோனியா, வாஜ்பாய்க்கு போன் செய்து என்னை ஆசிர்வதியுங்கள் எனக் கேட்கிறார். “உனக்கு என் ஆசிர்வாதங்கள் நிறைய உண்டு. ஆனால், நான் ஒன்று சொல்லலாமா? நீ இந்தப் பதவியை ஏற்க வேண்டாம். ஏற்றால் நாடு பிளவுபடும். அதிகாரிகளிடையே பிரிவினை ஏற்படும்” என்கிறார் வாஜ்பாய்.

மன்மோகன் பிரதமர் ஆகிறார்

*

இன்னும் பலவற்றையும் (வாஜ்பாய் -அத்வானி உறவு, RSSம் இந்திராவும் பரஸ்பரம் ஒருவரை பயன்படுத்திக் கொண்ட விதம்… இப்படிப் பல) நீரஜாவே சொல்வதை இங்கே (கட்டுரையில் கடைசியில் உள்ள) இணைப்பைச் சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.

நீரஜா சொல்கிற ஒரு விஷயத்தை நான் நன்கு அறிவேன். பிரதமர் பதவி அதிகாரம் மிக்கது எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் Vulnerable, lonely (பாதுகாப்பற்றவர்கள், தனிமைப்பட்டவர்கள்) என்கிறார் நீரஜா.

அதை நான் ஜெயலலிதா விஷயத்தில் பார்த்தேன். அந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் என் ‘தோழி’ நாவல்” எனக் குறிப்பிட்டுள்ளார் மாலன்.

ஜெய்பூர் இலக்கிய விழாவில் நீரஜா செளத்ரி பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...