இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கும், கங்கை அமரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக அவருக்கும், எக்கோ நிறுவனத்துக்கும் இடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, “வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இளையராஜாவை வம்புக்கு இழுத்த வைரமுத்து
இது திரையிசை உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட இசை வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய வைரமுத்து, “இசையும் பாடல் வரிகளும் இணைந்தால் நல்ல பாடல் உருவாகும். சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்துகொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என பேசியிருந்தார்.
வைரமுத்துவுக்கு நன்றி இல்லை – கங்கை அமரன்
இந்த பேச்சில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
எங்களால் மேலே வந்தவர் வைரமுத்து. இப்போது வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார். வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் படத்தை வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. மனிதனுக்கு நன்றி வேண்டும். தனது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார்.
வைரமுத்துவுக்கு நான் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள். அவர்களால் அதைவிட சிறப்பாக நிச்சயம் இசையமைக்க முடியாது. இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை முடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது. இளையராஜாவை பற்றி ஏதாவது பேசினால் விளைவுகள் வேறுவிதமா இருக்கும்’ என்று அந்த வீடியோவில் எச்சரித்திருக்கிறார்.
பாட்டு வரிகள் பலம் – வைரமுத்து பதிவு
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு
கணிசமான கவனம்பெற்ற
FINDER திரைப்படத்தின்
கலைக் குழுவினர்
இயக்குநர்
வினோத் ராஜேந்திரன் தலைமையில்
வீட்டுக்கு வந்து
வாழ்த்துப் பெற்றனர்;
பாட்டு வரிகள்
படத்திற்கு பலம் என்றனர்
வெற்றிகள்
அரிதாகிப்போன சூழலில்
சிறிதாகிய வெற்றியும்
பெரிதாகத் தோற்றுகிறது
ஒவ்வொருவரையும்
வாழ்த்தினேன்
‘அடுத்த படத்திற்கேனும்
தமிழில் தலைப்புவைக்க
வேண்டும் தம்பி’ என்றேன்
‘அப்படியே செய்வேன் ஐயா’
என்றார் இயக்குநர்
இந்த நிகழ்ச்சியில்
நான் அடைந்த
பெருமகிழ்ச்சி அதுதான்