No menu items!

தமிழ்த் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது திட்டமிட்ட நாடகம்: பொங்குகிறார் எழுத்தாளர் இமையம்

தமிழ்த் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது திட்டமிட்ட நாடகம்: பொங்குகிறார் எழுத்தாளர் இமையம்

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ் வாக்காளர்களிடையே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு எழுத்தாளர் இமையம் அளித்த சிறப்பு பேட்டி இது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே போதே குறுக்கிட்ட கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, பாடலை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் நடைபெற்ற போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மேடையிலேயே நின்று கொண்டிருந்தார். அண்ணாமலை இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததுதான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சை பற்றி உங்கள் கருத்து என்ன?

கர்நாடக தேர்தலில் அங்குள்ள தமிழர்களிடையே வாக்கு சேகரிக்க நடந்த கூட்டம் அது. அதில் தமிழ் வாக்காளர்கள் மட்டும் இருந்ததால் தமிழ்த் தாய் வாழ்த்து போடப்பட்டுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நிறுத்தியிருக்கிறார்கள். ஒன்று அவர்கள் முதலிலேயே கர்நாடக மாநில பாடலை போட்டியிருக்கலாம், தமிழ்த் தாய் வாழ்த்தை போடாமலே கூட இருந்திருக்கலாம். போட்டுவிட்ட பாடிக் கொண்டிருக்கும்போதே பாதியில் நிறுத்தியது மேடை நாகரிகம் இல்லை. இது கண்டிக்கத்தக்கது, மன்னிக்க முடியாத ஒரு தவறு.

இதன் மூலம் ஒரு மொழியை, அந்த மொழியை பேசக்கூடிய மக்களை அவமானப்படுத்தியுள்ளார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உங்களுக்கு வேண்டாம், ஆனால் தமிழர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா? அந்த மக்களின் தயவு தேவைப்படும் சூழ்நிலையிலேயே அந்த மக்களை இப்படி அவமானப்படுத்தும் நீங்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னால் எப்படி மதிப்பீர்கள்?

சரி ஈஸ்வரப்பாதான் கன்னட மொழி வெறியில் அதை செய்தார் என்றால், அப்போது அங்கே நின்று கொண்டிருந்த அண்ணாமலை குறுக்கிட்டு, “ஸார் பாடல் போட்டாச்சு; பாதியில் நிறுத்த வேண்டாம்” என்று சொல்லியிருக்கலாமே. ஆனால், அவரோ அதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லாத ஒரு ஆள் மாதிரியே நின்றுகொண்டிருக்கிறார். முகத்தில் ஒரு சலனம்கூட இல்லை.  ஈஸ்வரப்பா செய்தது தவறு என்றால் அண்ணாமலை செய்தது மிகப்பெரிய தவறு.

அண்ணாமலை அந்த இடத்தில் தமிழ்த்தாய் பாடலை முழுமையாக பாடுங்கள் என்று கூறியிருந்தால் அங்குள்ள பெருவாரியான கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். தேவையில்லாத சர்ச்சை உண்டாகியிருக்கும். ஏற்கனவே காவிரி சிக்கல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது அண்ணாமலை அமைதியாக இருந்தது சரியான முடிவு என்றும் சிலரால் கூறப்படுகிறதே?

இதை ஒரு சமாளிப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

இது குறித்து விளக்கமளித்துள்ள அண்ணாமலை, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் மெட்டு சரியில்லாமல் அதை அவமதிப்பது போல் இருந்ததால் நிறுத்தினோம்” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த விளக்கம் கேட்கவே அசிங்கமாக உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய இந்தப் பாடலை 1976இல் கலைஞர் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்தார். அப்போது தொடங்கி இன்று வரை எத்தனை மேடைகளில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. இதுவரை மெட்டு சரியில்லை என்று யார் சொன்னார்கள்? இப்போது திடீரென மெட்டு சரியில்லை என்று சொல்லும் அண்ணாமலை என்ன இளையராஜாவா அல்லது ஏ.ஆர். ரஹ்மானா? குற்றத்தை மறைப்பதற்காக உளர்கிறார். உளர்வதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்.

மேலும், “ஒரு பாடலை போடவேண்டும் என்றால் முதலில் அந்த மாநில பாடலை போடுவதுதான் நியதி. அதைத்தான் ஈஸ்வரப்பா செய்திருந்தார்” என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இது முதலிலேயே அவர்களுக்கு தெரியாதா? சரி, அப்படின்னா பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அதன்பின்னர் ஏன் போடவில்லை? அவரது அறிவின்மையின் காரணமாகவோ அல்லது திட்டமிட்டோ இரண்டு இன மக்களுக்கு இடையே ஒரு வெறுப்புணர்வை அவர் உண்டாக்க பார்க்கிறார். 

’கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது’ – என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்திருக்கிறார் அண்ணாமலை. அரசியலுக்காக இந்தப் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறார்களா திமுகவினர்?

இந்த எல்லா மொழி குடும்பங்களுக்கும் தாய்மொழி தமிழ் மொழிதான். அவருக்கு இந்த மொழி வரலாறு தெரியுமா? தன் தவறை மறைக்க மேலும் மேலும் அவர் உளறிக்கொண்டே செல்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் நிறுத்தப்பட்டதை நீங்கள் ஏன் தடுக்கவில்லை என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் கவனத்தை திசை திருப்ப என்னன்னமோ சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரது உளறல்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...