ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே இன்னும் ஒரு போட்டியில்கூட ஜெயிக்கவில்லை. இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்க, அதற்கு ஈடுசெய்யும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், ஷாருக்கான் என இந்த ஐபிஎல்லில் தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்காக நாம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ என்று பெயரில் சென்னை இருந்தாலும் தமிழக வீரர்களை அந்த அணி என்றுமே ஊக்கப்படுத்தியதில்லை. ஆரம்ப காலகட்டத்தில் அஸ்வின், முரளி விஜய், பத்ரிநாத் போன்ற வீரர்களை வைத்திருந்த சென்னை அணி, அதன் பிறகு பெரிய அளவில் தமிழக வீரர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதற்கு 2 தமிழக வீரர்கள் காரணமாக இருந்தனர்.
இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகியோரின் விக்கெட்களைக் கொய்தார். அதே அணியில் ஆடிய மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றினார். இப்படி தமிழக வீரர்களின் கையால் தமிழர்களின் ஃபேவரைட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் கழுத்து நெரிக்கப்பட்டது.
“அவங்க 2 பேரையும் சிஎஸ்கேவுல எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று ரசிகர்கள் புலம்பியதையும் கேட்க முடிந்தது. இதே போட்டியில் சென்னை அணிக்காக ஆடிய சிங்கள வீரரான மஹீஷ் தீக்ஷனா, பெரிதாக எதையும் சாதிக்காததும் ரசிகர்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது..
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என்ற வலிமையான படையை தந்திருக்கிறது தமிழ்நாடு. இந்த 4 சுழற்பந்து வீச்சாளர்களில் குறைந்தது 2 பேருக்காவது டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பந்துவீச்சில்தான் இப்படியென்றால் இந்த ஐபிஎல்லில் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் தமிழர்கள். குறிப்பாக 5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக இந்த ஆண்டில் வாங்கப்பட்டார் தினேஷ் கார்த்திக்.
ஓய்வு பெறும் வயதை நெருங்கியுள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு இத்தனை கோடி தேவையா என்ற கேள்வி கூட எழுந்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் வெறும் 23 பந்துகளில் 44 ரன்களைக் குவித்து பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தார் தினேஷ் கார்த்திக்.
பேட்டிங்கில் மட்டுமின்றி, ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று பந்துவீச்சாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியும் அதன் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார் தினேஷ் கார்த்திக். இதன்மூலம் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கவேண்டும் என்ற குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் இப்படி கலக்கிக்கொண்டிருக்க இளம் வீரரான சாய் சுதர்சனும் தன் பங்குக்கு சபாஷ்களை வாங்கிக் குவிக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்கும் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்களைக் குவித்து தன் இடத்தை ஸ்திரப்படுத்தி உள்ளார். மற்றொரு தமிழக வீரரான ஷாரூக் கானும் தன் துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
இப்படி சென்னை அணி சொதப்பினாலும் தமிழக வீரர்கள் மற்ற அணிகளுக்காக சிறப்பாக ஆடி தமிழ் நாட்டின் திறமையை உலகுக்கு காட்டி வருகிறார்கள்.