No menu items!

விவசாயிகளுடன் பேசுங்கள்: மத்திய அரசுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் மகள் கோரிக்கை

விவசாயிகளுடன் பேசுங்கள்: மத்திய அரசுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் மகள் கோரிக்கை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தங்கள் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி மீண்டும் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

டில்லி நோக்கி நேற்று புறப்பட்ட ‘டில்லி சாலோ’ விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் – ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை நேற்று (13-02-24) மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. பதிலுக்கு காவல்துறையினர் மீது விவசாயிகள் கற்களை வீசினர். விவசாயிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த இந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய (14-02-24) தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறினார்.

இரவில் போராட்டத்தை நிறுத்திக்கொண்டு முகாமிட்ட விவசாயிகள், இன்று இரண்டாவது நாளாக மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக அவர்கள் மீது ட்ரோன் மூலம் இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப் பைகளை கைகளில் வைத்திருக்கும் விவசாயிகள், தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க முயன்று வருகின்றனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர். மேலும், நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நேற்று (13-2-24) கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா ஸ்வாமிநாதன் காணொலி வாயிலாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும் அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்துகொண்டேன். அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். எனது தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கவுரவிக்க எண்ணினால், எதிர்காலத்துக்காக நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உத்திகளிலும் விவசாயிகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...