No menu items!

T20 world cup: இந்திய வெற்றியின் நாயகர்கள்

T20 world cup: இந்திய வெற்றியின் நாயகர்கள்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்று டி20 உலகக் கோப்பையின் அரை இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கியிருக்கிறது இந்தியா. இதன்மூலம் இத்தொடரில் அரை இறுதிச் சுற்றை நெருங்கிய முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறக் காரணமாக இருந்த நாயகர்கள் யாரென்று பார்ப்போம்…

கே.எல்.ராகுல்:

நேற்றைய போட்டிக்கு முன்புவரை கே.எல்.ராகுலுக்கு இருந்த நெருக்கடிகள் அதிகம். தொடக்க ஆட்டக்காரர் என்ற முறையில் கடந்த சில போட்டிகளாக அவர் அதிக ரன்களைக் குவிக்காமல் இருந்தார். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் முதல் 3 போட்டிகளிலும் இரட்டை இலக்க ரன்களைக்கூட கே.எல்.ராகுல் அடிக்காததால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. கேப்டன் ரோஹித் சர்மாவிடமும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடமும் இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் கே.எல்.ராகுலை இருவரும் உறுதியாக நம்பினார்கள். அவருக்கு மேலும் வாய்ப்புகளை வழங்கினார்கள்.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் தன் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் கே.எல்.ராகுல். அதிலும் நேற்றைய போட்டியில் அவர் அடித்த சிக்சர்கள், ‘பழைய ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் திரும்ப வந்துவிட்டார்’ என்ற நம்பிக்கையை இந்திய ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த அரைசதத்தைவிட இந்தியாவுக்கு நேற்று அதிகமாக கைகொடுத்தது கே.எல்.ராகுலின் பீல்டிங்தான். விக்கெட் இழப்பின்றி 7 ஓவர்களில் 66 ரன்களை வங்கதேசம் எடுத்திருந்தபோது இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் நம்பவில்லை. இந்த சூழலில் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்த லிட்டன் தாசை பீல்டில் தன்னுடைய த்ரோ மூலம் ரன் அவுட் செய்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் கே.எல்.ராகுல்.

இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எல்.ராகுல், “ரன் எடுப்பது கஷ்டமாக இருந்த காலத்தில், என்னைச் சுற்றி இருந்தவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். குறிப்பாக கேப்டன் என்னை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். கடந்த சில போட்டிகளாக இந்தியாவின் வெற்றிக்கு பெரிதாக பங்களிக்காமல் இருந்தது வருத்தது கொடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

விராட் கோலி:

இந்த டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இது கோலியின் உலகக் கோப்பையாக மாறி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தான் ஆடிய 4 போட்டிகளில் 3 அரைசதங்களை எடுத்துள்ளார் விராட் கோலி. அந்த வரிசையில் நேற்று அவர் எடுத்த அரை சதமும் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கை அளித்தது. இப்போட்டியில் அரைசதம் எடுத்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

இந்த தொடரில் இதுவரை 220 ரன்களை குவித்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலி, இதே ஃபார்மை தொடரும் பட்சத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.

அர்ஷ்தீப் சிங்:

கடந்த ஐபிஎல் தொடர் வரை இந்திய தேர்வாளர்களின் ராடரிலேயே இல்லாத வீரர் அர்ஷ்தீப் சிங். ஆனால் கடந்த ஐபிஎல் போட்டியில் அவர் அசத்திய பிறகு, இந்தியாவின் மிக முக்கிய பந்து வீச்சாளராகவே அவர் மாறி இருக்கிறார். இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா இல்லாத சூழலில், இக்கட்டான நிலையில் கடைசி ஓவரை வீசுவது என்றாலே, ‘கூப்பிடு அர்ஷ்தீப்பை’ என்ற குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது. இதுபற்றி பெருமையுடம் பேசும் கேப்டன் ரோஹித் சர்மாவும், “இன்று நேற்றல்ல… கடந்த சில மாதங்களாக கடைசி ஓவர்களை வீசும் பணியை மிகச் சிறப்பாக செய்துவருகிறார் அர்ஷ்தீப் சிங்” என்கிறார்.

நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அசத்தினாலும், பந்துவீச்சில் தனி நபராக இந்தியாவை தூக்கி நிறுத்தியவர் அர்ஷ்தீப் சிங். முக்கியமான கட்டத்தில் ஷகிப் அல் ஹசன், அபிஃப் ஹொசேன் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தியதுடன் ஷாண்டோவின் கேட்ச்சையும் பிடித்து வங்கதேச அணியை சிதறடித்தார் அர்ஷ்தீப் சிங். இதன்மூலம் ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் என்று வலுவாக இருந்த வங்கதேசம், 4 விக்கெட்டுக்கு 100 ரன்கள் என சரிந்தது.

இந்த தொடரில் இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், நேற்றைய போட்டியில் மட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடரிலேயே இந்தியாவின் நம்பிக்கை நாயகனாகி நிற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...