No menu items!

சூப்பர் ஸ்டார் சர்ச்சை: ரஜினி ஒரிஜினல் – விஜய் காப்பி!

சூப்பர் ஸ்டார் சர்ச்சை: ரஜினி ஒரிஜினல் – விஜய் காப்பி!

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காகம் – கழுகு குட்டிக்கதையால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஷங்கர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே…

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது வைரலாகியுள்ளது. அந்தப் பேச்சு தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார்கள். நீங்கள் நீண்ட காலமாக அவரை நெருக்கமாக ஃபாலோ செய்து வருபவர் என்பதன் அடிப்படையில் கேட்கிறோம்… ‘குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நம்முடைய வேலைய பார்த்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்’ என்று அந்த விழாவில் ரஜினி பேசியுள்ளார். இதில், குறை சொல்லாத வாய் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார்?

சினிமாவில் ரஜினி அனைவரையும்விட உயரமான இடத்தில் இருக்கிறார். யாருடனும் போட்டி போட வேண்டிய அவசியத்தில் அவர் இல்லை. இப்போது அவரது எண்ணமெல்லாம் இந்த சினிமாவில் கடைசி வரை தொடர்ந்து இருப்பது மட்டும்தான். அந்தளவுக்கு சினிமா அவருக்கு உயிர். அரசியல் எல்லாம் அப்புறம்தான். இந்நிலையில், ‘நான் தான் சூப்பர் ஸ்டார்’, ‘நான் தான் நம்பர் 1’ என அவரை சீண்டுவது மாதிரி வரும் சர்ச்சைகள் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் அவர் அந்த மேடையில் வெளிப்படுத்துகிறார்.

தொடர்ந்து அந்த விழாவில் ரஜினி ஒரு குட்டிக்கதையும் சொல்லியுள்ளார். “காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும் பொழுது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்” என்கிறார். இந்தக் குட்டிக் கதையில் கழுகு யார், காகம் யார்? கழுகு – ரஜினி, காகம் – விஜய் என்று சிலர் சொல்கிறார்களே, அது சரியா?

அது அப்படி சொல்கிறவர்கள் பார்வை. மற்றபடி விஜய் என்ற தனிப்பட்ட நபரை பற்றி பேச வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. ரஜினிக்கு சமமானவரும் இல்லை விஜய். ரஜினியின் ஸ்டைல், மேனரிசம், பாணி பார்த்து காப்பியடித்து வளர்ந்தவர்தான் விஜய். ’நான் ரஜினி ரசிகன்’, ‘அண்ணாமலை தம்பி நான்’, ‘நான் தான் பாட்சா தம்பி’ என்றெல்லாம் வசனம் சொல்லி வந்தவர்தானே விஜய். அவருக்கென்று தனி ஸ்டைல் உண்டா? ‘போக்கிரி’ வரைக்கும் ரஜினியை குறிப்பிடாத விஜய் படங்களே இல்லை. இன்று அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் பேசுவதுகூட ரஜினியை காப்பியடித்துதான்.

விஜய் இப்போது தளபதி என்று வைத்திருக்கிறாரே அதுகூட ரஜினியைப் பார்த்துதான். முதலில் ரஜினியைத்தான் தளபதி என்று சொல்வார்கள். ‘தளபதி’ என்று அவர் ஒரு படமே செய்துள்ளார். தளபதி ரஜினி என்பதால், விஜய், இளைய தளபதி என வைத்துக்கொண்டார். இது தொடர்பான ஒரு கேள்விக்கு விஜய் அப்பா சந்திரசேகர் சொன்ன பதில், ‘தளபதி என்றால் ரஜினி. அவரது தம்பி என்பதால் விஜய் இளைய தளபதி’ என்பதுதான்.

இப்படிப்பட்ட ஒருவரைப் பார்த்து ரஜினி பொறாமைப்பட வேண்டிய அவசியமே இல்லை. 45 வருடங்களாக தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருபவர் ரஜினி. இதுபோல் ஒரு ரெக்கார்ட் விஜய்க்கு இருக்கிறதா? ‘மெர்சல்’ தொடங்கி ‘வாரிசு’ வரைக்கும் விஜய் படங்களின் வெற்றி எல்லாம் சர்ச்சைக்குறியதுதான். எதை வைத்து ‘நான் தான் நம்பர் 1’ என்று அவர் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

ஒருவேளை நாளை நம்பர் 1ஆக விஜய் ஆனாலும்கூட ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வைத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் சொல்வேன். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் சிவாஜிதான், புரட்சித் தலைவர் என்றால் எம்.ஜி.ஆர்.தான், அதுபோல் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான். விஜய் விருப்பப்பட்டால் ‘சினிமாவின் கிங்க்’ என்று வைத்துக்கொள்ளட்டும், யார் தடுக்கப் போகிறார்கள். அதைவிட்டுவிட்டு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு அவர் ஆசைப்படுவது தர்மம் அல்ல; எக்காலத்திலும் ரஜினியும் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்றுதான் நான் சொல்வேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...