தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு க்ளைமேக்ஸாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உதிர்த்த வார்த்தைகள்:
முதல்வர் ஸ்டாலின்:
தமிழகத்தில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழகத்தை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி:
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது; அதனை திமுக எதிர்க்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
அ.தி.மு.க.வை அழித்துவிடுவதாக அண்ணாமலை கூறுவது வெற்று வார்த்தைதான். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்பேன். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்?. கொள்கைக்கு ஒத்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி; உரிமைகளை நிலைநாட்ட தனித்துதான் நிற்க வேண்டும்.
அண்ணாமலை:
உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும்.
சீமான்:
கோவையில் ஓட்டிற்கு திமுக, அதிமுக ரூ.ஆயிரம் கொடுக்கிறது. பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை ரூ.2ஆயிரம் கொடுக்கிறார். இந்த இடத்தில் காசு கொடுக்கிறார்கள் என தகவல் கொடுத்தால் பல காரணங்கள் சொல்லி, அந்த இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் செல்வதில்லை.
மாறாக மருத்துவமனைக்கு, கடைக்கு பொருள்கள் வாங்க போகிறவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குகிறார்கள். நான் பேசி முடிப்பதற்குள் 12 ஆம்புலன்சுகள் சென்றுவிடும். அதில் தான் பணம் கடத்தப்படுகிறது.
என்னிடம் ஏன் ரெய்டு வருவதில்லை? ஏனென்றால் என்னிடம் எதுவும் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுக்காமல், அனைவரும் தனித்தனியாக நின்று நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியுமா?.
ராமதாஸ்:
பா.ம.க., உட்பட கூட்டணி வேட்பாளர்கள், 40 பேரும் வெற்றி பெற வேண்டும் என்றால், அடுத்த நான்கு நாட்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, கடுமையாக உழைத்து முன்னணியில் இருக்கிறோமே என்ற எண்ணம் வரக்கூடாது. அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறி விடக்கூடாது.
பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட, அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் வேண்டும்.
அதன்படி அடுத்த நான்கு நாட்களுக்கு பா.ம.க., வினர் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஓட்டுச்சாவடி கமிட்டியில் உள்ளவர்கள், ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது, 10 முறையாவது சந்தித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
கமல்ஹாசன்:
நான் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்தவன். அந்த விமர்சனங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, என் விமர்சனத்தில் என்னவெல்லாம் சொல்லப்பட்டதோ, அதை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அது நல்ல தலைமைக்கான அழகு. காந்தியாரிடத்தில் மட்டும் தான், நின்று எதிர்வாதம் செய்ய முடியும். இன்று, டெல்லியில் எந்த தலைவர்களிடமாவது எதிர்வாதம் செய்ய முடியுமா… ‘ஏன் நாட்டை பிரித்துக் கொடுத்தாய்… ‘ஏன் 55 கோடி கொடுத்தாய்’ என்று காந்தியிடம் சென்று கேட்க முடியும். ‘நான் சொல்கிறேன். கோபப்படாதே’ என்று பதில் சொல்வார் காந்தி. அந்தப் பண்பு சனநாயகப் பண்பு. அது ஜெயிலில் தள்ளினாலும், பற்றிக்கொள்ளும் தொற்றிக் கொள்ளும். அப்படி வந்தவர்தான் ஸ்டாலின்.