மனிதர்களின் முக்கியமான தேவைகளில் ஒன்று நிம்மதியான தூக்கம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஒவ்வொருவரும் சராசரியாக 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அந்த தூக்கம் விஷயத்தை ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு வகைகளில் கையாள்கிறார்கள்.
ஜப்பானியர்களின் பவர் நேப்:
உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் என்று ஜப்பானியர்களைத்தான் அனைவரும் புகழ்வார்கள். அவர்களின் இந்த சுறுசுறுப்புக்கு காரணம் தூக்கம். இதைச் சொன்னதும் அவர்கள் நாள்முழுக்க தூங்கி வழிவார்கள் என்றோ, இரவில் நெடுநேரம் தூங்குவார்கள் என்றோ நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டையும் அவர்கள் செய்வதில்லை. அதற்கு மாறாக பகல் நேரத்தில் மதிய உணவை உண்ட பிறகு சுமார் கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரத்துக்கு குட்டித் தூக்கம் போடுகிறார்கள். சிலர் பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது இந்த தூக்கத்தை போடுகிறார்கள். இரவில் நெடுநேரம்வரை சுறுசுறுப்பாக உழைக்கக்கூடிய ஆற்றலை அவர்களுக்கு இந்த குட்டித் தூக்கம் கொடுக்கிறது. அதனானேலேயே அந்த தூக்கத்தை ‘பவர் நேப்’ என்று ஜப்பானியர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.
நிர்வாணமாக தூங்கும் இங்கிலாந்து மக்கள்:
இங்கிலாந்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அந்நாட்டில் உள்ள சுமார் 20 சதவீதம் பேர் உடைகள் ஏதும் அணியாமல் நிர்வாணமாக தூங்குவதாக தெரியவந்துள்ளது. உடைகளை அணியாமல் தூங்கும்போது, உடல் வெப்பநிலை குறைவதாகவும், அதனால் ஆழமான தூக்கத்துக்கு செல்ல முடியும் என்றும் அந்நாட்டு மக்கள் நம்புவதே இதற்கு காரணம்.
உறங்குவதற்கு முன் குளிக்கும் பின்லாந்து மக்கள்:
உலகிலேயே பின்லாந்து நாட்டில்தால் மக்கள் அதிக அளவில் மகிழ்ச்சியாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த மகிழ்ச்ச்சிக்கு அவர்களின் நிம்மதியான தூக்கமும் ஒரு காரணம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, தங்களுக்குப் பிடித்த பாடலை ஸ்பீக்கரில் ஒலிபரபரப்பவிட்டு, வெந்நீரில் நீண்ட நேரத்துக்கு ஒரு குளியலைப் போடுவது பின்லாந்து மக்களின் வழக்கம்.
தனிமையில் தூங்கும் அமெரிக்கர்கள்:
கணவன் – மனைவி என தம்பதிகளாக வாழ்ந்தாலும், இரவில் தனித்தனி அறைகளில் படுப்பதை அமெரிக்கர்கள் பலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். Better Sleep Council என்ற அமைப்பு நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் அங்குள்ள 25 சதவீதம் தம்பதிகள் தனித்தனி அறைகளில் படுத்து தூங்குவதாக தெரியவந்துள்ளது. ஒருவரின் தூங்கும் முறை மற்றும் குறட்டை போன்ற விஷயங்களால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தனித்தனி அறைகளில் உறங்கும் வழக்கத்தை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
செல்லப் பிராணிகளுடன் தூங்கும் கனடா மக்கள்:
கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரு அறையில் படுத்து தூங்குவது நமது வழக்கம். ஆனால் கனடாவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன்தான் தூங்குகிறார்களாம். மயோ க்ளினிக் என்ற நிறுவனம் 2017-ம் ஆண்டில் நடத்தியுள்ள ஒரு ஆய்வில், தங்கள் நாய்க்குட்டிகளை கட்டிப் பிடித்துக்கொண்டு தூங்குபவர்கள் நிம்மதியான தூக்கத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ளவர்களில் மூன்றில் ஒருபங்கு பேர் இப்படித்தான் தூங்குகிறார்களாம்.
கவுதமாலா மக்களும் பொம்மையும்:
கனடா நாட்டினராவது பரவாயில்லை… செல்லப் பிராணிகளுடன் தூங்குகிறார்கள். ஆனால் கவுதமாலா நாட்டினர் இன்னும் மோசம். அவர்கள் தங்களுக்கு இஷ்டமான பொம்மையை கட்டிப் பிடித்து தூங்குகிறார்கள். இதற்காகவே சிறுவயதில் இருந்து ஒரு பொம்மையை அவர்கள் வைத்துக்கொள்வதாகவும், தங்கள் மகிழ்ச்சிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி அந்த பொம்மையுடன் அவர்கள் பேசுவதாகவும் அது அவர்களுக்கு ஒருவித மன நிம்மதியைத் தருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.