சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டின் விலை 400 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டிலேயே இந்த விலைக்கு விற்கப்படுவதால், சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் பூண்டின் விலை கிலோவுக்கு 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஏன் இந்த விலை உயர்வு?
பூண்டு விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோயம்பேடு வியாபாரிகள், “தமிழக மக்கள் பயன்படுத்தும் பெருமளவிலான பூண்டு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை செய்யப்படும். பின்னர் அவை காய வைக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்படும்.
கடந்த ஆண்டு அதிக அளவிலான பூண்டு உற்பத்தியானது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் பூண்டின் தேவை மக்களிடையே அதிகரிக்கவில்லை. இதனால் பூண்டின் விலை மிகவும் குறைந்து, அதை உற்பத்தி செய்த விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
அதனால் இந்த ஆண்டில் மிக குறைந்த அளவிலான விவசாயிகளே பூண்டை பயிரிட்டனர். அதனால் பூண்டின் உற்பத்தி பெரிய அளவில் குறைந்தது. தினமும் சென்னைக்கு 15 லாரிகளில் பூண்டு வந்துகொண்டு இருந்தது. ஆனால் இப்போது 5 லாரி பூண்டுகள்தான் வருகின்றன. அதே நேரத்தின் பூண்டுக்கான தேவை குறையாததால் அதன் விலை உயர்ந்து வருகின்றது. அறுவடைக் காலம் முடிந்ததும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.
400 ரூபாயைத் தொட்டு, இப்போதைக்கு கோயம்பேட்டின் சூப்பர் ஹீரோ அந்தஸ்தை பெற்றிருக்கும் பூண்டின் சிறப்புகள் சிலவற்றை பார்ப்போமா?…
எகிப்து நாட்டில் தொடங்கிய பூண்டின் வரலாறு
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் தங்கள் உணவில் பூண்டை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். பூண்டை முதலில் பயன்படுத்த தொடங்கியது எகிப்தியர்கள்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகில் சுமார் 450 வகை பூண்டுகள் உள்ளன.
கடவுள்களுக்கு நாம் தேங்காய், பழம் ஆகியவற்றை படைப்பதுபோல் பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் தங்கள் கடவுள்களுக்கு பூண்டை படைத்திருக்கிறார்கள்.
பூண்டின் நாற்றம் போக: பூண்டை உட்கொள்ள பலரும் தயங்குவதற்கு காரணம் அதினால் ஏற்படும் துர்நாற்றம். ஆனால் பூண்டை சாப்பிட்ட பிறகு, எலுமிச்சம் பழத்தின் சாறு கொண்ட தண்ணீரில் வாயைக் கொப்பளித்தால் பூண்டால் ஏற்படும் துர்நாற்றம் போகும்.
முதலிடத்தில் சீனா: உலகில் உற்பத்தியாகும் பூண்டில் மூன்றில் 2 பங்கு பூண்டுகள் சீனாவில் உற்பத்தி ஆகின்றன. அங்கு ஆண்டொன்றுக்கு 25.4 மில்லியன் டன் பூண்டு உற்பத்தி ஆகிறது.
உலக அளவில் ஆண்டொன்றுக்கு 26.5 மில்லியன் டன் பூண்டை மக்கள் பயன்படுத்துகிறார்கள். பூண்டு உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் சீனாதான், அதைப் பயன்படுத்துவதிலும் முதல் இடத்தில் இருக்கிறது சீனர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 14.3 கிலோ பூண்டை சாப்பிடுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சர்வதேச பூண்டு தினம்:
ஆண்டுதோறும் ஏப்ரல் 19-ம் தேதி சர்வதேச பூண்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.