இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையில் 2 பொருட்களின் விலை உயர்வு இப்போது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தக்காளி மற்றும் துவரம் பருப்பு ஆகியவைதான் அந்தப் பொருட்கள். தக்காளியின் விலை கிலோவுக்கு 130 ரூபாய் வரை அதிகரிக்க, துவரம் பருப்பின் விலையோ கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
தக்காளியின் விலை உயர்வுக்கு மழை மீது பழி போடப்பட்டுள்ளது. தக்காளி விளையும் இடங்களில் பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று அரசு சொல்கிறது. ஆனால் இந்த துவரம் பருப்புக்கு என்ன ஆச்சு? அதன் விலை ஏன் இப்படி அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
குறையும் பயன்பாடு:
துவரம் பருப்பின் விலை ஏற்றத்தால், நாட்டில் 27 சதவீதம் பேர் அதைப் பயன்படுத்துவதைக் குறைத்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் இந்தியா என்ற அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடெங்கிலும் சுமார் 14 ஆயிரம் பேரைச் சந்தித்து பருப்பு பயன்பாடு பற்றிய கேள்விகளைக் கேட்டு இந்த ஆய்வு நட்த்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இறுதியில் 5 சதவீதம் பேர் துவரம் பருப்பை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பதாகவும், 8 சதவீதம் பேர் விலை குறைந்த மட்ட ரகமான துவரம் பருப்புக்கு மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதே நேரம் இந்த ஆய்வில் பங்கேற்ற 57 சதவீதம் பேர், தாங்கள் துவரையின் பயன்பாட்டை குறைக்கவில்லை என்றும், பழையபடியே துவரம் பருப்பை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வு ஏன்?
இந்திய மக்களைப் பொறுத்தவரை துவரம் பருப்பு ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இந்தியர்களின் தேவையை எதிர்கொள்ள ஆண்டொன்றுக்கு 44 முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடந்த 2022 – 2023 நிதியாண்டில் மொத்தம் 30 லட்சம் டன் துவரம் பருப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே கடந்த நிதியாண்டில் மொத்தம் 39 லட்சம் டன் துவரம் பருப்பு உற்பத்தி ஆகியிருந்தது. துவரையை பயிர் செய்யும் பகுதிகளில் பெய்த அளவுக்கு அதிகமான மழையால் அதன் உற்பத்தி இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டில் அதிக அளவில் துவரம் பருப்பை நாம் இறக்குமதி செய்யவேண்டி இருப்பதே இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
“பருப்புகளை இறக்குமதி செய்ய நாம் பெரும்பாலும் மியான்மர் நாட்டை சார்ந்து இருக்கிறோம். ஆனால் அந்நாடு தற்போது துவரம் பருப்பை அதிகம் ஏற்றுமதி செய்யாமல் பதுக்கி வருவதாலும் விலை உயர்வு அதிகரித்து ஏற்பட்டுள்ளது. தற்போது மியான்மரில் மழைக்காலம் வரவுள்ளதால், அந்நாட்டால் அதிக காலத்துக்கு துவரம் பருப்பை பதுக்கிவைக்க முடியாது விரைவில் அதை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் என்று நம்பப்படுகிறது.
அதே நேரத்தில் பருப்பு விஷயத்தில் இனியும் மியான்மரை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிடமும் துவரம் பருப்புக்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த துவரம் பருப்பெல்லாம் வந்துசேர மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் உடனடியாக தற்போதைக்கு பருப்பு விலை குறைய வாய்ப்பில்லை” என்று மத்திய நுகர்வோர் துறை செயலாளரான ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த பருப்பு வந்த பிறகாவது விலை குறைந்தால் சரி.