திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த ஸ்மார்ட் ஃபோனை 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதன் உரிமையாளர் ஏலத்தில் எடுத்தார். இதன்மூலம் அவருக்கு அந்த ஸ்மார்ட் ஃபோன் மீண்டும் சொந்தமானது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் ‘பாளையத்தம்மன் ‘ என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ராம்கி – திவ்யா உன்னியின் குழந்தை தவறுதலாக கோயில் உண்டியலில் விழுந்துவிடும். இந்த குழந்தை யாருக்கு என்பதில் பாளையத்தம்மனுக்கும், குழந்தையின் தாயான திவ்யா உன்னிக்கும் இடையே விவாதம் நடக்கும். உண்டியலில் விழுந்ததால் குழந்தை கோயிலுக்குதான் சொந்தம் என்று அம்மன் கூறுவார்.
அதே போன்ற நிலை கடந்த மாதம் திருப்போரூர் முருகன் கோயிலில் ஏற்பட்டது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் திருப்போருர் முருகன் கோயிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி வந்துள்ளார். கோயில் உண்டியலில் அவர் பணத்தைப் போடும்போது, அவரது கையில் இருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன், தவறுதலாக அந்த உண்டியலுக்குள் விழுந்துவிட்டது. இது தொடர்பாக அப்போதே கோயில் நிர்வாகத்திடம் தினேஷ் புகார் கொடுத்திருந்தார். குடும்ப பிரச்சினையால் மன சஞ்சலத்தில் இருந்தபோது உண்டியலில் காசு போடும்போது கையில் இருந்த ஸ்மார்ட் ஃபோன் தவறுதலாக உள்ளே விழுந்துவிட்ட்தாக அந்த புகாரில் தினேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் முருகன் கோயில் உண்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் உண்டியலில் போட்டிருந்த பணம் நகைகளுடன் தினேஷின் விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோனும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததும் தன் ஃபோனை திரும்பத் தருவதற்காகத்தான் அழைக்கிறார்கள் என்ற உற்சாகத்தில் தினேஷ் அங்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கோயில் உண்டியலில் விழுந்ததால் அந்த ஃபோன் கோயிலுக்கே சொந்தம் என்று கூறிய நிர்வாகத்தினர், அதில் உள்ள தரவுகளை மட்டும் வேறு ஃபோனுக்கு மாற்றிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் தினேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இருந்தாலும் சாமி விஷயம் என்பதால் எதிர்த்துப் பேச விரும்பாத அவர், தன்னிடம் தரவுகளை பெற லேப்டாப் உள்ளிட்டவை இல்லை. ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக தெரிவித்தார். பின்னர் அந்த ஐபோன் கோவில் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்த செய்தி வெளியான பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்ட்து. தினேஷுக்கு அவரது ஸ்மார்ட் ஃபோனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “அறநிலையத் துறை விதிகளை ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்