No menu items!

சென்னைக்கு வந்த தூங்கும் பெட்டிகள்

சென்னைக்கு வந்த தூங்கும் பெட்டிகள்

நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று காத்திருப்பு. புயல், மழை, மூடுபனி போன்ற காரணங்களால் விமானங்களோ, ரயில்களோ புறப்படும் நேரம் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவது நம் ஊரில் அடிக்கடி நடக்கும் விஷயம். இதுபோன்ற சூழலில் சில சமயம் 12 மணிநேரம்கூட பயணிகள் விமான நிலையத்திலோ, ரயில் நிலையங்களிலோ காத்திருக்க வேண்டிவரும். அப்படி காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ‘ஸ்லீப்சோ’ என்ற உறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான ஸ்லீப்பிங் பாட் அதாவது தூங்கும் பெட்டி வசதிதான் இப்போது ‘ஸ்லீப்சோ’ என்ற பெயரில் சென்னை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்லீப்பிங் பாட்’, ‘ஸ்லீப்சோ’ ஆகிய பெயர்கள்தான் வேறே தவிர இரண்டிலும் ஒரே வகையான வசதிகள்தான் கிடைக்கின்றன.

“அது என்ன ஸ்லீப்பிங் பாட்?

பொதுவாக நாம் ஒரு ஊருக்கு சுற்றுலாவுக்காகவோ அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காகவோ செல்வதாக இருந்தால் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குவோம். அந்த அறைகள் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், வாடகை நமக்கு கட்டுப்படியாகாது. மேலும் சில ஊர்களில் ஓட்டல் அறைகளைக் கட்ட போதுமான இட வசதிகளும் இருக்காது. இந்த சூழலில்தான் ஜப்பான் நாட்டில் ‘ஸ்லீப்பிங் பாட்’ ஓட்டல்கள் அறிமுகமாகின.

இந்த பாட் ஓட்டலில் அறைகள் இருக்காது. அதற்கு பதிலாக வங்கிகளில் இருக்கும் லாக்கர் அறைகளைப் போல் போல சின்னச் சின்ன கேப்சூல் வடிவ அறைகள் இருக்கும். ரயில்களில் பர்த்துகளில் படுத்துக்கொண்டு நாம் பயணிப்பது இல்லையா. அதேபோல் இந்த உறை போன்ற அறைகள் இருக்கும். இந்த அறைகளின் அகலம் சுமார் 3 அடியாகவும், உயரம் 3 அடியாகவும், நீளம் சுமார் 7 அடியாகவும் இருக்கும். இந்த அறைக்குள் நம்மால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. ஆனால் அமர்ந்துகொள்ள முடியும். டிவி, இன்டர்நெட், சிறிய பிரிட்ஜ், மின் வெளிச்சம், ஏசி என அனைத்து வசதிகளும் இருக்கும். இந்த கேப்சூல் அறைகளுக்கு வெளியே பொதுவான கழிப்பறை வசதிகளும் இருக்கும்.

மக்கள்தொகை அதிகமாக உள்ள டோக்கியோவில் பல பேச்சுலர்கள் இதுபோன்ற அறைகளைத்தான் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இப்படி ஜப்பானில் பிரபலமான ஸ்லீப்பிங் பாட்தான் இப்போது சென்னை விமான நிலையத்தில் அறிமுகமாகி உள்ளது. சென்னைக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை ரயில் நிலையத்தில் திறந்துவைக்கப்பட்ட ஸ்லீப்பிங் பாடில் இதில் 12 மணிநேரம் தங்குவதற்கான வாடகை ரூ.999. அதே 24 மணிநேரம் தங்குவதற்கு ரு.1,999 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அங்கு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது சென்னை விமான நிலையத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பேகேஜ் பெல்ட் அருகே முதல் கட்டமாக ’ஸ்லீப்சோ’ என்ற பெயரில் 4 தூங்கும் கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய இயக்குநர் ஷரத் குமார் இதைத் திறந்து வைத்துள்ளார்.

சென்னையில் திறக்கப்பட்டுள்ள ஸ்லீப்சோவில் படுக்கைகள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி, புத்தகங்களை படிப்பதற்கான மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்லீம்சோவில் நாம் எத்தனை மணிநேரம் தங்குகிறோமோ, அதற்கு ஏற்ற வகையில் கட்டணம் செலுத்தவேண்டிருக்கும்.

இணைப்பு விமானங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் இந்த வசதியை ஏற்படுத்தினால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...