அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒரு பக்கம் இது தேசிய அளவில் பெரிய கொண்டாட்டமாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் இப்படியே போனால் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராமர் கோயிலால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு இந்துக்களின் வாக்குகள் அதிகமாக கிடைக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் உள்ள இந்துக்களின் மனநிலையைப் பற்றிய கருத்துக் கணிப்பின் முடிவுகளை ‘the print’ என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. Pew Research Center (PRC) என்ற அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்துக்களிடையே நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 29.999 பேரை சந்தித்து அந்த அமைப்பு இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…
இஷ்ட தெய்வம் சிவனா? ராமரா?
உங்களுக்கு விருப்பமான கடவுள் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 44 சதவீதம் பேர் சிவன் என்று தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் ஆஞ்சநேயரையும், 32 சதவீதம் பேர் விநாயகரையும், 28 சதவீதம் பேர் லட்சுமியையும், 21 சதவீதம் பேர் கிருஷ்ணரையும், 20 சதவீதம் பேர் காளியையும் தங்கள் இஷ்ட தெய்வங்களாக கூறியுள்ளனர். 17 சதவீதம் பேர் மட்டுமே ராமரை தங்கள் இஷ்ட தெய்வமாக கூறியுள்ளனர்.
இந்தியாவின் மத்திய மண்டலப் பகுதிகளில்தான் ராம பக்தர்கள் அதிகமாக உள்ளனர். இங்குள்ள இந்துக்களில் 27 சதவீதம் பேருக்கு ராமர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். வட இந்தியாவில் 20 சதவீதம் பேருக்கும், கிழக்கு இந்தியாவில் 15 சதவீதம் பேருக்கும், தென்னிந்தியாவில் 13 சதவீதம் பேருக்கும் ராமர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் மிகக் குறைந்த அளவாக 5 சதவீதம் பேருக்கு மட்டுமே ராமர் இஷ்ட்தெய்வமாக இருக்கிறார்.
வாழ்க்கையில் மதத்தின் பங்கு
நாட்டில் உள்ள 84 சதவீதம் இந்துக்கள் தங்கள் வாழ்க்கையில் மதம் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் உள்ள இந்துக்களிடையே இந்த உணர்வு குறைவாக உள்ளது. இப்பகுதியில் 69 சதவீதம் பேர் மட்டுமே மதத்தை தங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக பார்க்கிறார்கள்.
இந்தியாவில் வாழும் இந்துக்களில் 59 சதவீதம் பேர் தினசரி பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள். இதில் தென்னிந்தியாவில் மிக்க்குறைந்த அளவாக 37 சதவீதம் இந்துக்கள் மட்டுமே தினசரி பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
45 சதவீதம் இந்துக்கள் மட்டுமே தங்கள் பக்கத்து வீடுகளில் பிற மதத்தினர் வாழ்வதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
36 சதவீதம் இந்துக்கள் தங்கள் பக்கத்து வீடுகளில் இஸ்லாமியர்கள் குடியிருப்பதை விரும்புவதில்லை.
மதச்சார்பின்மையால் நன்மையா?
மதச்சார்பின்மையால் இந்தியாவுக்கு நன்மை இருப்பதாக 53 சதவீதம் இந்துக்கள் மட்டுமே நினைக்கிறார்கள். 24 சதவீதம் பேர் அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிப்பதாக நினைக்கிறார்கள். 24 சதவீதம் பேர் இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
ஒருவர் இந்துவாக இருப்பது மட்டுமின்றி, இந்தி தெர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று 80 சதவீதம் இந்துக்கள் நினைப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.