No menu items!

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியில் நீங்கள் பேசும்போது 2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் கூறினீர்கள். அதன் முன்னால் சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘25 இடங்களில் வெல்வோம்’ என்று கூறி சென்றிருக்கிறார். அப்படி ஒரு அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் தெரிகிறதா?

திமுக, 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், 2019இல் ஒரு இடம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வென்றார்கள். இதுதான் அரசியல் விளையாட்டு, அரசியல் மாற்றம். இது ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறுவதுதான். வரும் தேர்தலிலும் அது நடக்கும். தமிழ்நாட்டில் அதற்கான சூழ்நிலை வந்துவிட்டது; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கேற்ப எங்கள் கட்டமைப்புகளை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். குறிப்பாக அடித்தட்டு மக்கள் மத்தியில் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறோம்.

ஆனால், நேற்று தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் மோடியா ராகுலா என்ற கேள்விக்கு 71 சதவீத வாக்குகள் ராகுலுக்குதான் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் மோடியைவிட ராகுல் காந்திக்குதான் அதிக செல்வாக்கு என்பது இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறதே?

அதனால் என்ன? போன முறையும் அப்படித்தான் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட்டார்கள். இங்கே திமுகவுக்கு சாதகமாக சில ஊடகங்கள் செயல்படுகின்றது. அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்தது கர்நாடகத்தில் மட்டும்தான். அங்கேயும் நடந்த சமீபத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 66 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது. பொதுவாக தென்னிந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு இல்லை என்று கூறப்படும்போது அமித் ஷா சொல்வது போல் 25 இடங்கள் என்பது சாத்தியமா?

2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத திமுக 2019இல் 38 இடங்களில் வெற்றிபெறவில்லையா. அதுபோல் நாங்கள் வருவோம். கருணாநிதி இருந்தவரை இந்த மாநில அரசியல் என்பது கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்கிற வகையில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. கருணாநிதியை யார் கடுமையாக எதிர்த்தார்களோ அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. அதனடிப்படையில் சொல்கிறேன், இப்போது நாங்கள்தான் கடுமையாக திமுகவை எதிர்க்கிறோம்; அதனால், நாங்கள் தான் வருவோம்.

ஆனால், கூட்டணி தயவு இல்லாமல் வெற்றி பெற இயலாத நிலையில்தானே இப்போதும் பாஜக இருக்கிறது. இந்நிலையில் முக்கிய கூட்டணி கட்சியான அதிமுகவுடன் முரண்பாடுகள் வருவது வெற்றியை பாதிக்காதா?

அந்த முரண்பாடுகள் வரத்தான் செய்யும், அது இயல்பானதுதான். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இரண்டும்தான் பெரிய கட்சிகள். மூன்றாவதாக ஒரு கட்சி வளர்கிறது என்று சொன்னால் அந்த இரண்டு கட்சிகளுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். நம் இடத்தை அவர்கள் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற போட்டி இருக்கத்தான் செய்யும். அதற்காக நாங்கள் எங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்ள முடியாது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விரும்பும் எந்தவொரு கட்சியும் அந்த இலக்கை நோக்கித்தான் செல்லும்.

அதற்காக கூட்டணியில் இருக்கும்போதே பரஸ்பரம் இரண்டு கட்சி தலைவர்களும் விமர்சித்துக்கொள்வதும், உங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவியாக இருந்த ஜெயலலிதாவை ஊழலில் தண்டிக்கப்பட்ட முதல்வர் என்று அண்ணாமலை பேசுவதும் சரியா?

அது தவிர்க்க வேண்டியுதுதான். யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். ஆனால், எந்த சூழ்நிலையில் அண்ணாமலை அதை சொன்னார் என்று பார்க்க வேண்டும். அவருடைய பேச்சு தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது என்பதுதான் என் கருத்து.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தப்படுகிறது என்ற விமர்சனத்தை திமுகவினர் வைக்கிறார்கள். அமித் ஷா வந்த போது மின் தடை ஏற்படுத்தியதற்கு பதிலடி என்று கூறுகிறார்களே?

சினிமா பார்த்துவிட்டு உளர்கிறார்கள். அவர்கள் சினிமாவுக்கு கதை, வசனம் எழுத சென்றால் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். செந்தில்பாலாஜி மீதான இந்த அமலாக்கத்துறை சோதனை என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இந்த சோதனைகள் நடைபெறுகிறது. அவர் செய்த ஊழல், அவர் வாங்கிய லஞ்சம்… அவர் அனுபவிக்கிறார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும், சட்டம் தன் கடமையை செய்யும்.

நடிகர் எஸ்.வி. சேகர் கடந்த சில மாதங்களாக பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவரானப் பிறகு பாஜகவில் பிராமணர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதுதான் அவரது முக்கியமான குற்றச்சாட்டு. பாஜகவில் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

பாஜகவில் அதுபோல் ஒரு குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி அரசியல் செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அவர் குறிப்பிடும் சாதியினர் நிறைய பேர் மாநில பொறுப்புகளில் இருக்கிறார்கள், மாவட்ட பொறுப்புகளில் இருக்கிறார்கள். தேசிய அளவில் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். எஸ்.வி. சேகருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். அவர் சொல்வது தவறு. எனக்குத் தெரிந்து அண்ணாமலை, ஒரு குறிப்பிட்ட சாதியினரை வெறுப்பதோ, ஒதுக்குவதோ இல்லை.

அண்ணாமலை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்பது எஸ்.வி. சேகர் உட்பட பலர் முன்வைக்கும் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டு பாஜகவின் வார் ரூம் அண்ணாமலை புகழ் பாட மட்டுமே செயல்படுகிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?

எந்தவொரு அரசியல்வாதியும் தன்னை முன்னிலைப்படுத்தத்தான் செய்வார். தமிழ்நாடு அரசியல் அமைப்பில் ‘பெர்சனாலிட்டி மேட்டர்’ முக்கியம். எனவே, அது தவறே இல்லை.

தமிழக பாஜகவில் இது போன்ற கோஷ்டி மோதல்கள் முரண்பாடுகள் முன்பு வெளியில் தெரியாது. காங்கிரஸ் கட்சிக்குள்தான் கோஷ்டி என்று கார்டூன் போடுவார்கள். இப்போது பாஜகவிலும் அப்படி ஆகிவிட்டதா?

ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஆயிரம் கருத்து மோதல்கள் உள்ளன, பெரிய கட்சியில் இல்லாமல் இருக்குமா? இது எல்லாம் கடந்து போய்விடும். ஆனாலும், முடிந்தவரை இதுபோல் நடக்கக்கூடாது என்று நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம், நிர்வாகிகளிடம் தவிர்க்க வலியுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...