சாரா அர்ஜூன்.
இன்றைய நிலவரப்படி மிக அதிகம் சம்பாதிக்கும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில், அதாவது இளம் வயது ஐஸ்வர்யா ராய் ஆக நடித்த அதே அழகான குட்டிப் பெண்தான் இந்த சாரா அர்ஜூன்.
நடிகர் ராஜ் அர்ஜூனின் மகளானா சாரா அர்ஜூன், தனது ஆறாவது வயதிலேயே சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டார். 2010-ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாகவும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில், சல்மான் கானுடன் ‘ஜெய் ஹோ’, ஐஸ்வர்யா ராயுடன் ‘ஜஸ்பா’ என முக்கிய நட்சத்திரங்களின் படங்களிலும் சாரா அர்ஜூன் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இவரது நடிப்பைப் பார்த்து தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவும் இவரை வாரி அணைத்து கொண்டிருக்கிறது. இன்றைய சினிமா ட்ரெண்ட்டுக்கு ஏற்றப்படி சொல்ல வேண்டுமென்றால், இவர் ஒரு பான் – இந்தியா குழந்தை நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறார்.
சாராவுக்கு இப்போது வயது 17. இன்று அதிகம் சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் சாரா இதுவரையில் 10 கோடி வரை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் சாரா அர்ஜூன் நடிக்க இருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
கலாய்க்கப்படும் ’அட்லீ’
பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது ‘ஜவான்’ திரைப்படம்.
’பதான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஷாரூக்கான் நடித்திருக்கும் படம் என்பதால் பாலிவுட்டிலும், அடுத்தடுத்து விஜயை வைத்து படமெடுத்த அட்லீ இயக்கம் என்பதால் இங்கே விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்பை உருவாக்கிவிட்டது ’ஜவான்’.
படம் பார்த்த ஹிந்தி ரசிகர்கள், ஷாரூக்கானின் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று சமூக ஊடகங்களில் கமெண்ட் அடிக்கிறார்கள். தற்போது வசூலில் கில்லியாக இருக்கும்’ கடர் 2’ பட த்தின் முதல் நாள் வசூல் சாதனையை ‘ஜவான்’ முந்திவிடும் என்கிறார்கள் வியாபாரப் புள்ளிகள். தென்னிந்தியாவின் புத்திசாலித்தனமும், வட இந்தியாவின் நட்சத்திர மவுசும் சேர்ந்தால் இப்படிதான் இருக்கும் என்றும் விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், படம் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், அட்லீயை கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
1989- ஆண்டில் வெளிவந்தப் படம் ‘தாய் நாடு’. சத்யராஜ் கதாநாயகனாக நடித்தப்படம். சொல்லி வைத்த மாதிரி சத்யராஜூக்கு இரட்டை வேடம்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை அப்படியே எடுத்து, இன்றைக்குள்ள ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி பில்டப்புகளை சேர்த்து, ஷாரூக்கானுக்கு ஏற்ற மாதிரி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார் அட்லீ என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து ‘ஜவான்’ படத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் விஜய்காந்த் நடித்த ‘ரமணா’ படத்தின் காட்சிகளைப் போல் இருக்கிறது என்கிறது ஒரு நெட்டிசன்கள் குழு.
அஜித்தின் ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’, ‘ஆரம்பம்’, விஜயின் ‘தெறி’, ‘பிகில்’, அடுத்து மணி ஹெய்ஸ்ட் என பல படங்களின் காட்சிகள் ஜவானில் ஆங்காங்கே இருப்பதால், ஒரே படத்தில் 23 படங்களைப் பார்க்கும் உணர்வு இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஹீரோவை மனதில் வைத்து படமெடுப்பதுதான் என்னுடைய பாணி. அதனால் அதற்கேற்ற படங்களை எடுக்கிறேன் என்று அட்லீயும் கூறிவிட்டார்.