No menu items!

நிரந்தர ஓய்வெடுத்த ’எதிர் நீச்சல்’ மாரிமுத்து

நிரந்தர ஓய்வெடுத்த ’எதிர் நீச்சல்’ மாரிமுத்து

சமீபகாலமாக சின்னத்திரையிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இயங்கி வந்த நடிகர் மாரிமுத்து இன்று இவ்வுலகில் இல்லை.

ஒரு திரைப்பட இயக்குநராக ஜெயிக்க வேண்டுமென வாழ்க்கைப் போராட்டங்களுடன் ’எதிர்நீச்சல்’ போட்ட இயக்குநர் மற்றும் நடிகரான மாரிமுத்துவுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது ‘எதிர்நீச்சல்’ டிவி சீரியல்.

அதே ’எதிர்நீச்சல்’ சீரியலின் டப்பிங் பேசும்போதே மாரிமுத்து தனது உயிரை இழந்திருக்கிறார். அதிகாலையில் மும்முரமாக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதே, காலை 8.30 மணியளவில் லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கிறார். இதனால் டப்பிங் பேச முடியாமல் தவிக்க, தனக்கு ஏதோ சரியில்லை என்று நினைத்த மாரிமுத்து, உடனேயே அங்கிருந்து தனது காரிலேயே ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார். அங்கே போனவர் நிலைக்குலைந்துப் போய்விட்டார்.

மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.

பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு தற்போதுதான் அவருக்கான, அவரது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இவரது இயல்பான அதே நேரம் மனதில் பட்டதை பட்டென்று பேசுகிற இவரது குணத்திற்கு இப்போது சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியலில் இவரது கதாபாத்திரம் பேசுவதெல்லாம், அப்படியே மாரிமுத்துவை பிரதிபலிப்பது போல் இருக்கும்.

சினிமா ஒரு கவர்ச்சிகரமான உலகமாக இருந்தாலும், அதன் வெளிச்சத்தில் இருப்பவர்களை மட்டும்தான் நமக்கு தெரியும். வெளிச்சத்திற்கு அப்பால் இருப்பவர்களுக்கு சினிமா ஒரு சிறைத்தண்டனையைப் போன்றது. ஓடவும் முடியாது. விட்டு ஒதுங்கவும் முடியாது. வேறு வழியும் தெரியாது. அதற்குள்ளேயேதான் தங்களது வாழ்க்கையைக் கழித்தாக வேண்டியிருக்கும்.

அப்படியொரு போராட்டம் மாரிமுத்துவிற்கும் இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக பணியாற்றினார். பின்பு ராஜ்கிரண் முன்பு இயக்கிய ’அரண்மனைக்கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக வேலைப்பார்த்திருக்கிறார். இயக்குநர்கள் வஸந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். ஒர் இயக்குநராக இவர் இயக்கிய ‘கண்ணும் கண்ணும்’ படம் நன்றாக இருக்கிறது என்று பேசப்பட்டாலும் அவருக்கு பெரிய பெயரைக் கொடுக்கவில்லை. அடுத்து அவர் இயக்கிய ’புலிவால்’ ஓரளவிற்கு பெயரை பெற்று தந்தது. ஆனால் அது மட்டுமே தனது குடும்பத்தோடு வாழ்க்கையை தொடர உதவவில்லை.

இதனால் நடிகராகவும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருக்கிறார். மாரிமுத்து. ஆனாலும் டிவி சிரீயல் மூலமே இவர் மக்களிடையே பிரபலமானார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிய ஃப்ளாட்டுக்கான இஎம்ஐ, உட்பட வாழ்க்கையின் பொருளாதார நெருக்கடிகள் மாரிமுத்துவுக்கு அதிகம் இருந்ததாக கூறுகிறார்கள். இதனால் இரவுப்பகல் பாராமல் தொடர்ந்து நடிப்பது, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என தூக்கமில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்திருக்கிறார்.

ஓய்வு இல்லாமல் ஓடியது இவரது மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

தனது மனைவி, மகன், மகள் என மூவருக்காகவும் வாழ்க்கை போராட்டங்களைச் சமாளிக்க தொடர்ந்து எதிர் நீச்சலடித்த மாரிமுத்துவைப் பார்த்த இயற்கை, அவருக்கு இப்போது நிரந்தர ஓய்வை அளித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...