உடல்நல சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும்” என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்படி சமந்தா என்ன சொன்னார்? மருத்துவர்கள் கண்டனத்துக்கு சமந்தா பதில் என்ன?
சமந்தா என்ன சொன்னார்?
நடிகை சமந்தா, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சில வருடங்கள் தொடர் சிகிச்சையில் இருந்தார். குணமடைந்த பின்னர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வரும் சமந்தா அண்மையில், தனது ஸ்டோரி பகுதியில், ‘நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன், “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு (hydrogen peroxide) மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவர்கள் கண்டனம்
சமந்தாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், ”துரதிர்ஷ்டவசமாக, உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத, செல்வாக்கு மிக்க இந்திய நடிகையான சமந்தா ரூத் பிரபு, சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அவரை பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்படும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை.
இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இது போன்ற பிரபலங்கள் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது குறித்து ஏதேனும் செய்வார்களா? அல்லது முதுகெலும்பில்லாமல் மக்களை இறக்க விடுவார்களா?” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து பலரும் சமந்தாவின் பதிவுக்கு கடுமையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
சமந்தா சொல்வது ஏன் தவறு?
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நன்றி பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, “நடிகை சமந்தா இண்ஸ்டாகிராமில் நெபுலைசர் சிகிச்சை எடுப்பதைப் பற்றி பதிவு போட்டு அதை அனைவரையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறார். அவர் பரிந்துரைத்த சிகிச்சைதான் பிரச்சனை. ‘ஹெ2ஓ2 எனும் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை நீருடன் கலந்து அதை நெபுலைசர் எனும் கருவியில் ஊற்றி புகையாக மாற்றி ஆவி பிடித்தால் பல சுவாசப்பாதை பிரச்சனைகள் குணமாகும். இது சூப்பர் சிகிச்சை. மாத்திரை மருந்துகள் எடுப்பதை விட இது நல்ல சிகிச்சை’ என்றெல்லாம் சமந்தா எழுதியிருப்பது தான் பிரச்சனை.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது தரை உள்ளிட்ட தளங்களை சுத்தம் செய்யப் பயன்படும் க்ளீனர்களில் கலந்துள்ள ரசாயனமாகும். இதை உபயோகப்படுத்தி இரும்புப் பிளேட்டுகளில் உள்ள கறைகளைக் கூட நீக்க முடியும் என்கிற அளவுக்கு சக்தி வாய்ந்தது.
இந்த திரவத்தைப் பருகினாலோ நுகர்ந்தாலோ திசுக்களை அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதன் 3% திரவம் – சுவாசிக்கப்படும் போது சுவாசப் பாதை எரிச்சல், ரசாயனத்தால் ஏற்படும் தீவிர நுரையீரல் அழற்சியை (Inhalational Chemical Pneumonitis) ஏற்படுத்தும்.
ஆஸ்துமா நோயாளிகளோ நீண்ட நாள் சுவாசப்பாதை அழற்சி நோய் கொண்டவர்களோ சைனஸ் பிரச்சனை கொண்டவர்களோ இது போன்ற ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசர் போன்ற விஷப் பரீட்சைகளை முயன்று பார்க்கக்கூடாது. நுரையீரல் போன்ற நுண்ணிய சவ்வு மற்றும் திசுக்கள் இருக்கும் பகுதியில் இது போன்ற தீவிரமான ரசாயனத்தை உள்செலுத்தினால் நிரந்தரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
சமந்தா பிரபலமாக இருப்பதால் அவரது இது போன்ற கருத்துகளை பல கோடி மக்கள் காண்பர். இதில் சில லட்சம் பேர் அதை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இது விஷப்பரீட்சை. எனவேதான் மருத்துவர்கள் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின்றி வேறு யார் பரிந்துரைப்பதையும் ஏற்காதீர்கள். சிந்தித்து அறிவு பெற்று பிறகு முயற்சி செய்யுங்கள். அதுவே சிறந்தது.
நடிகர்கள், கலை, விளையாட்டு, இலக்கியம் போன்ற பல்துறை விற்பன்னர்கள் அவரவர் துறையின் செய்திகளை தகவல்களை வெளியிட்டால் நல்லது. அதை விடுத்து மருத்துவ அறிவியல் பூர்வமில்லாத சான்றுகள் மற்றும் ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபணமாகாத மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகள் / கருத்துகளைக் கூறுவது அவர்களை பின்பற்றும் பல லட்சம் பேரை தவறான வழிக்கு இட்டுச் சென்று விடும் ஆபத்தான போக்காகும். இதை அவர்கள் கைவிட வேண்டும்.
பிரபலங்கள் மட்டுமல்ல யார் என்ன கூறினாலும் உடனே முயற்சி செய்யக்கூடாது. அவரவருக்கு மூளையும் அறிவும் கல்வியும் சிந்திக்கும் ஆற்றலும் நிறையவே வழங்கப்பட்டுள்ளது. எதைச் செய்தாலும் அது யாரைப் பார்த்து செய்தாலும் இறுதியில் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நாம் தான் அனுபவிக்கப் போகிறோம் என்பதால் எதையும் சிந்தித்து ஆராய்ந்து நம்புவது நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
                                    


