எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத விஷயமாக இந்த ஐபிஎல் தொடரில் ரன் மழை பெய்கிறது. 200 ரன்களெல்லாம் மிகச் சாதாரண ஸ்கோராக மாறியிருக்கிறது. உச்சகட்டமாக நேற்று நடந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்களைக் குவிக்க, அடுத்ததாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ், 19-வது ஓவரிலேயே அந்த ஸ்கோரை முந்தி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் 26-ம் தேதி வரை நடந்த ஆட்டங்களில் மட்டும் 7 முறை 260 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. 24 முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. 700 சிக்சர்களுக்கு மேல் பறக்க விடப்பட்டுள்ளன. நேற்றைய போட்டியில் மட்டும் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ன.
என்ன ஆச்சு ஐபிஎல்லுக்கு? பேட்ஸ்மேன்கள் ஹீரோக்களாக உச்சம் தொட, பந்துவீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுக்கும் வள்ளல்களாக மாறிப் போனது ஏன் என்ற கேள்வி பல ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. முன்னாள் பந்துவீச்சாளர்கள் பலரும் பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் இந்த ஐபிஎல்லில் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை. பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஐபிஎல்லில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் மோசமான ஐபிஎல்லாக இருக்கிறது என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு 2024 ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகரிக்க காரணம் என்ன?
இந்த கேள்விக்கான பதிலாக எல்லா கிரிக்கெட் வல்லுநர்களும் சொல்லும் ஒரே காரணம் இம்பாக்ட் பிளேயர் என்ற விதி. மற்ற கிரிக்கெட் தொடர்களில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை ஐபிஎல் நிர்வாகம் இந்த தொடரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த புதிய விஷயம்தான் இம்பாக்ட் பிளேயர்.
இதன்படி ஒரு அணி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு வீரரை ஆட்டத்தில் இருந்து விலக்கி, அவருக்கு பதிலாக மற்றொரு வீர்ரை களத்தில் இறக்கி விடலாம். அப்படி களத்தில் இறங்கும் வீரர்தான் இம்பாக்ட் பிளேயர்.
உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசுகிறது என்றால் அந்த அணியின் முதல் பாதி ஆட்டத்தில் பந்துவீச்சாளரான பதிரணா இருப்பார். அதே சென்னை அணி பேட்டிங் செய்யும்போது பதிரணாவை ஒதுக்கிவைத்து, அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனான சிவம் துபேவை களத்தில் இறக்க முடியும்.
இந்த இம்பேக்ட் பிளாயர் முறையால் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கூடுதல் பலம் கிடைக்கிறது. தாங்கள் அவுட் ஆனாலும் வேறொரு அதிரடி பேட்ஸ்மேனை இம்பாக்ட் பிளேயராக கொண்டுவர முடியும் என்பதால் அவர்கள் அதிக சுதந்திரத்துடன் பேட்டிங் செய்வார்கள். இது அவர்களின் ஆற்றலை அதிகரிக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
இந்த விதிப்படி பார்த்தால் பந்து வீச்சாளர்களிலும் இம்பாக்ட் பிளேயர் வருகிறார்களே. அது அவர்களுக்கு பலம் சேர்க்காதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இம்பாக்ட் பிளேயராக வரும் பந்துவீச்சாளரால் அதிகபட்சம் 4 ஓவர்கள்தான் பந்துவீச முடியும். ஆனால் இம்பாக்ட் பிளேயராக வரும் பேட்ஸ்மேன்கள் அதிகபட்சம் 20 ஓவர்களும் ஆட முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
இந்த இம்பாக்ட் பிளேயர் விதிப்படி பந்துவீச்சாளர்களுக்கு அடுத்ததாக ஆல்ரவுண்டர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பல அணிகள் ஆல்ரவுண்டர்களை பந்துவீச பயன்படுத்தாமல், அவர்களுக்கு பதில் இம்பாக்ட் பிளேயரை பந்துவீச வைக்கிறார்கள். உதாரணமாக சிஎஸ்கே அணி இம்பாக்ட் பிளேயரான பதிரணாவை பந்துவீச வைப்பதால் ஆல்ரவுண்டரான துபேவை ஒரு ஓவர்கூட பந்துவீச வைக்கவில்லை. அவர் தனது ஆல்ரவுண்டர் திறமையை காட்ட முடியாததால், ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டர் என்ற கோட்டாவில் அவர் அணியில் இடம்பிடிப்பது கடினமாகி இருக்கிறது.