No menu items!

இந்தியாவை விட்டுப் போகும் பணக்காரர்கள்

இந்தியாவை விட்டுப் போகும் பணக்காரர்கள்

இந்தியா பணக்கார நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பணக்காரர்களின் நாடாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்ததாக அதிக பில்லியனர்களைக் கொண்ட 3-வது நாடு இந்தியா. இந்தியாவில் மொத்தம் 169 பில்லினியர்கள் இருப்பதாக World of Statistics அமைப்பு தெரிவித்துள்ளது. பில்லினியர்களைப் போலவே மில்லினியர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா சிறப்பான இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 7.96 லட்சம் மில்லியனர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெருமைக்கும் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து பணக்காரர்கள் வேகமாக வெளியேறி வருவதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Henley Private Wealth Migration report 2023 – வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 6,500 பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 7,500 பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளின் குடிமக்களாகி இருக்கிறார்கள். கடந்த ஆண்டைவிட இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் என்ணிக்கை இந்த ஆண்டு சற்று குறைந்து இருந்தாலும், வரும்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா மட்டுமல்ல, சீனாவும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறது. சீனாவில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 13,500 பணக்காரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த இரு நாடுகளையும் அடுத்து இங்கிலாந்தில் இருந்து 3,200 மில்லியனர்களும், ரஷ்யாவில் இருந்து 3 ஆயிரம் மில்லினியனர்களும் வெளியேறி இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து பணக்காரர்கள் அதிக அளவில் வெளியேறுவதற்கு, இங்குள்ள வரி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Henley Global Citizens Report, 2022 அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள வரிகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்கள் வெளியேறி வருகிறார்கள். வரிக்கு அடுத்ததாக வாழ்க்கைத் தரம், குழந்தைகளுக்கான கல்வித்தரம் ஆகியவை பணக்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து பல பணக்காரர்கள் வெளியேறினாலும் புதிய பணக்காரர்கள் பலர் உருவாவார்கள் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இழப்பு, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு லாபமாகி இருக்கிறது. பணக்காரர்கள் அதிகம் விரும்பி குடியுரிமை பெறும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 5,200 மில்லியனர்கள் குடியேறுவார்கள் என்று கனிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு 4,500 மில்லியனர்களும், சிங்கப்பூரில் 3,200 மில்லினியனர்களும் குடியேறுவார்கள் என்று கனிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி ஒரு காலத்தில் பணக்காரர்களின் சொர்க்கபூமியாக இருந்த அமெரிக்கா, இப்போது அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. இந்த ஆண்டில் 2,100 மில்லியனர்கள் மட்டுமே அமெரிக்காவில் குடியேறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இன்னொரு சுவாரஸ்யமான தகவையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி இருந்த இந்தியர்கள் இப்போது படிப்படியாக தாயகத்துக்கு திரும்பி வருகிறார்கள் என்பதே அந்த செய்தி. இதன்படி 2022-ம் ஆண்டின் கடைசி காலாண்டை விட, 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவுக்கு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் அதிகரித்துள்ளது. நம் நாட்டில் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக அவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

பணக்காரர்கள் நாட்டை விட்டு போவதை நினைத்து வருத்தப்படுவதா… அல்லது ஏற்கெனவே போனவர்கள் திரும்பி வருவதை நினைத்து மகிழ்ச்சியடைவதா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...