இஸ்லாமியர்கள் குறித்த நடிகர் ராஜ்கிரணின் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது இதுதான்.
“இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு,
அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…
’இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம்
என்ற கொள்கையினால்”
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர்,
நபிகள் நாயகம் அவர்களின்
வாழ்க்கையையும், வார்த்தைகளையும்
பின்பற்றுவதால், பொறுமையைவிட
சிறந்த பொக்கிஷம் இல்லை என்று
பொறுமை காக்கிறோம்.
இந்தப் பொறுமையை
தவறாகப் புரிந்துகொண்டு
கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு
மிக மோசமாயிருக்கும்”
இதுதான் நடிகர் ராஜ்கிரனின் வாக்கியங்கள். பொதுவாய் அமைதியாய் பேசும் ராஜ் கிரன் இங்கு பொங்கியிருக்கிறார்.
அவரது இந்த நீண்ட பதிவின் ஒரு வரி கருத்து இஸ்லாமியர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்பது.
என்ன நடந்தது அவர் கோபம் கொள்ள?
கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவரது பொறுமையை இழக்க வைத்திருக்கலாம்.
மும்பை ரயில் ஒன்றில் பயணிகளைப் பாதுகாக்க வேண்டிய காவலர் சேத்தன் குமார், தனக்கு வழங்கப்பட்ட தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு தனது மேலதிகாரியையும் மூன்று பயணிகளையும் சுட்டுக் கொன்றிருக்கிறார். அந்த மூன்று பயணிகளும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்தியப் பிறகு அந்த காவலர் பிரதமர் மோடியையும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தையும் உயர்வாக குறிப்பிடுகிறார்.
இந்த துப்பாக்கிச் சூடு நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவலர் சேத்தன் குமார், மன அழுத்தத்தில் இருந்தார், அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன என்று ரெயில்வே காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தாலும் அவர் கொன்றவர்களில் மூவர் இஸ்லாமியராக இருப்பது பலவித சந்தேகங்களை சமூக ஊடகங்களில் கிளப்பியிருக்கிறது. மிக முக்கியமாக இஸ்லாமியர் பலர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது வட இந்தியாவில் நடந்த சம்பவம்.
இங்கு தமிழ்நாட்டில் நேற்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதும் சர்ச்சையைக் கிளப்பியது.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான் ‘ மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா தேவாலயத்திற்கு போய் ‘தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள். இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை திமுகவுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான்.’ என்று குறிப்பிட்டிருந்தார். சீமானின் இந்தப் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டம் தெரிவித்திருந்தன.
இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு நேற்றிரவு ராஜ்கிரனிடமிருந்து இப்படியொரு பதிவு வருகிறது.
இது கடந்துப் போகக் கூடிய பதிவு அல்ல. இஸ்லாமியர்களின் இன்றைய மனநிலையை பிரதிபலிக்கும் பதிவு.
அரசும் சமூகமும் ராஜ்கிரணின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும்.