தேனி பகுதியில் தனது மனைவி வைரமாலாவுடன் வசித்து வருகிறார் நாயகன் குங்குமராஜ் முத்துச்சாமி. எலக்ட்ரீஷியின தொழில் செய்து வரும் அவருக்கு குடிப்பழக்கத்தால் வேலையிழப்பு, பணத்தட்டுப்பாடு என்று நெருக்கடி வந்து மனைவி கஷ்டத்தில் தவிக்கிறார். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் பகுதியில் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகிறார் வட இந்திய இந்தியர் பர்வேஸ் மெஹ்ரு. தனது மனைவி குழந்தையை தனியே விட்டு இங்கு வசிப்பதால் பொறுப்போடு நடந்து பணம் சேர்த்து வைக்கிறார். ஒருநாள் சேர்த்த பணத்தை எடுத்து நாயகனின் மனைவியிடம் கொடுத்து வைக்கிறார்.
இந்த நிலையில் குடிப்பழக்கத்தை விட முடியாமலும், மனவியுடன் குடும்பம் நடத்த முடியாமலும் மனச்சிக்கலுக்கு ஆளாகிறார் நாயகன். மனைவிக்கும் பர்வேஸ்க்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து எப்போதும் சண்டை எழுகிறது. இதற்கு தூபம் போடுவது போல் நாயகனின் நண்பன் ரமேஷ் வைத்யா அவ்வப்போது வம்பு வளர்த்து விடுகிறார். வட இந்திய இளைஞனை ஒரு வழி செய்ய வேண்டும் என்று குடி போதையில் திட்டமிடுகிறார்கள். மறுநாள் அந்த இளைஞன் இறந்து போகிறார்;. அவரது சடலத்தை போலீஸ் வீட்டில் கொண்டுவந்து வைத்து வட இந்திய குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கிறது. அவர் எப்படி இறந்தார். நாயகன் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை எளிமையாகவும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான தேனியிலும் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது என்ற நிலையில் கதையை எழுதியிருக்கிறார் பாஸ்கர் சக்தி. டீ கடைகளில்கூட வட இந்திய உணவுகளை சாப்பிடுவதற்கு நம்முடைய மக்கள் மாறிருப்பதையெல்லாம் உன்னிப்பாக பதிவிடுகிறார். தமிழ் இளம் தலைமுறையினர் எப்படியெல்லாம் மதுவிற்கு அடிமையாகி வாழ்க்கை இழக்கிறார்கள் என்பதும் படமாக்கப்பட்டிருக்கிறது. அழுத்தமான கதை இருப்பதால் முழுக்க புதுமுகங்களை வைத்து படமாக்கியிருப்பது எழுத்தாளருக்கு நம்பிக்கையை காட்டுகிறது.
பாஸ்கர் சக்தியின் நம்பிக்கையை படத்தில் நடித்த அனைவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். குங்குமராஜ் முத்துச்சாமி மீது நமக்கே கோபம் வருகிறது. எப்போதும் தள்ளாட்டத்துடன் வரும் அவரது உடல் மொழியும் வேலி, கரடு என்று பார்க்குமிடத்திலெல்லாம் சரக்கு அடிக்கும் ஸ்டைலும் பாத்திரத்தை நன்றாக உள்வாங்கியதைக் காட்டுகிறது. அவரது மனைவியாக வைரமால நடிப்பிற்கு ஒரு வைர மாலையையே சூட்டலாம். ஷோபா, சரிதா ரேவதி போன்ற முகங்களில் பார்த்த அதே யாதார்த்த நடிப்பை காட்டியிருக்கிறார். யாராவது அவருக்கு விருது கிடைக்க சிபாரிசு செய்யலாம்.
அடர்த்தியான கதையில் பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வரும் இடங்கள் சிரிக்க வைத்து மனதை லேசாக்குகிறது. உடல்வாகும், வசன உச்சரிப்பும் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு நம்பிக்கைக்குரிய வரவாக ரமேஷ் வைத்யா இருப்பார் என்று தோன்றுகிறது. மாமனார் பாத்திரத்தில் வரும் கோச்சடை செந்தில், வைரம் பாட்டி, ஷமீரா,பிந்து பர்வேஷ் மெஹ்ரு என்று எல்லோரும் கதையை நகர்த்த கைக்கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனி பின்னணி இசையிலும் பாடலிலும் முத்திரை பதித்திருக்கிறார். இயக்குனர் பாஸ்கர் சக்தியின் கண்களாக மாறி படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. தமிழ் இளைஞர்கள் குடிப்பழக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதும், வைரமாலா, பர்வேஷ் இருவருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக நினைக்க வைப்பதும் பலவீனமான இடங்கள். ஒரு சடலத்தை அரசு மருத்துவமனையில் வைப்பதே காவல் துறையின் கடமை. இதெல்லாம் இயக்குனர் பாஸ்கர் சக்திக்கு திருஷ்டி. மற்றவையெல்லாம் வெற்றி.
ரயில் – அழகு