மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது உலகக் கோப்பை கால்பந்து. 32 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இப்போது 8 அணிகள் போட்டியில் இருக்கின்றன. காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக் கிழமை தொடங்க உள்ளது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கால்பந்து ரசிகர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள்.
காலிறுதியில் இருக்கும் எட்டு அணிகளில் எந்த அணிக்கு வாய்ப்பு? அதிகம்..அணிகளின் பலம் பலவீனம் என்ன?… பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை அதாவது 9-ம் தேதி நடக்கவுள்ள முதலாவது கால் இறுதிப் போட்டியில் வலிமை மிக்க பிரேசிலை குரோஷியா எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையை அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ள பிரேசில், கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு அந்த அணிக்கு உலகக் கோப்பை ‘பெப்பே’ காட்டி வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ள பிரேசில் ‘இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை’ என்ற வைராக்கியத்துடன் இந்த உலகக் கோப்பையில் கால் வைத்துள்ளது.
ஆரம்ப போட்டிகளில் கோல் அடிக்க சிரமப்பட்ட நெய்மரின் பிரேசில் அணி, தென் கொரிய அணிக்கு எதிரான இரண்டாம் சுற்றுப் போட்டியில் 4 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளது. பிரேசிலின் கதை இப்படியென்றால், அதற்கு சற்றும் குறையாத வலிமையான அணியாக குரோஷியா இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம்வரை முன்னேறிய குரோஷியா, நூலிழையில் உலகக் கோப்பையை தவறவிட்டது. ஆனாலும் பதறாமல், ‘துண்டு ஒருமுறைதான் தவறும்’ என்பதைப் போல் மீண்டும் அதே வேகத்தில் ஆடி வருகிறது. யாருக்கும் பயப்படாத துணிச்சலான அணி என்று பெயரெடுத்துள்ள குரோஷிய அணியின் முக்கிய நாயகனாக மோட்ரிக் இருக்கிறார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு (இந்திய நேரம்) நடக்கவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பையில் 3 முறை இறுதி ஆட்டடம் வரை முன்னேறிய நெதர்லாந்து அதில் ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அந்த கோப்பை தாகம் தீர வான் டிக்கின் ஆவேசமான ஆட்டத்தை நம்பி களம் களங்குகிறது நெதர்லாந்து. அவர்களின் எதிர்ப்புறம் ஆடும் அணி அர்ஜென்டினா.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழியை இந்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா பொய்யாக்கி இருக்கிறது. தங்கள் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா தோற்றபோது அந்த அணி தேறாது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பிறகு மெஸ்ஸியும் அவரது சகாக்களும் வேற லெவலில் ஆடத் தொடங்கினர். அடுத்தடுத்த போட்டிகளில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா ஜெயித்தால், அரை இறுதியில் பிரேசிலும் அர்ஜெண்டினாவும் சந்திக்க வாய்ப்புகள் அதிகம்.
சனிக்கிழமை நடக்கவுள்ள 3-வது கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோவை சந்திக்கிறது போர்ச்சுக்கல். இந்த உலகக் கோப்பைக்குள் நுழையும்போது போர்ச்சுக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மட்டும்தான் பலருக்கும் தெரியும். போர்ச்சுக்கல் கோப்பையை வென்றால் அதற்கு ரொனால்டோ மட்டுமே காரணமாக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆட்டங்கள் செல்லச் செல்ல ரொனால்டோவைவிட பெபே, ரமோஸ், புரூனோ பெர்னாண்டஸ் என மற்ற வீரர்கள் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். கடந்த போட்டியில் ரொனால்டோ பெஞ்சில் உட்கார வைக்கப்பட, அவருக்கு பதிலாக ஆடிய ரமோஸ் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த புதிய எழுச்சி போர்ச்சுக்கல்லை உயிர்பித்திருக்கிறது.