No menu items!

பிரசாந்த் கிஷோர் – காங்கிரசை கரை சேர்ப்பாரா?

பிரசாந்த் கிஷோர் – காங்கிரசை கரை சேர்ப்பாரா?

நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என நேரு குடும்ப வாரிசுகளை நம்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இப்போது தனக்கு வழி காட்ட ‘தேர்தல் மன்னன்’ பிரசாந்த் கிஷோரை அழைத்திருக்கிறது.

கடந்த மூன்று நாள்களில் சோனியாவை இரண்டு முறை சந்தித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர். இந்த மற்ற கட்சியினரைவிட காங்கிரஸ்காரர்கள்தாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சனிக்கிழமை(16.4.22) முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கான செயல்திட்டத்தை கொடுத்து விளக்கமளித்திருக்கிறார். வியூகங்களையும் எடுத்து வைத்திருக்கிறார்.

சனிக் கிழமை சந்திப்பு முடிந்து நேற்று மாலை (18.4.22) மீண்டும் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பிருக்க கூடிய 370 தொகுதிகளில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.

இந்திய தேர்தல்களின் நாயகன், சென்ற இடமெல்லாம் வெற்றி என்ற பிம்பத்துடன் இந்திய அரசியல் களத்தில் இருப்பவர் பிரசாந்த் கிஷோர்.

2011ல் 35 வயதில் இந்திய அரசியலுக்குள் நுழைகிறார் பிரசாந்த். அதற்கு முன்பு ஐநா சபையில் பணி. ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றியிருக்கிறார்.

2011ல் இந்தியா திரும்பி அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அப்போது அவருக்கு ஆதரவாக இருந்தது அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி. 2012 குஜராத் பொதுத் தேர்தலுக்கான ஆலோசனைகள் அவருக்கு தேவைப்பட்டது. மூன்றாம் முறை முதல்வராவதற்கான தேர்தல். சற்று கடுமையான தேர்தல்தான்.

மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால் அதற்கான வியூகம் மிக சரியாக இருக்க வேண்டும். பிரசாந்த் கிஷோர் அமைத்துக் கொடுத்தார். மோடி வென்றார்.

அந்த நட்பு 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. பாஜகவுக்கான தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் (Indian Political Action Committee) அமைத்துக் கொடுத்தது. பிரதமரானார் மோடி.

பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு மட்டுமல்ல மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் வியூக ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

2015ல் பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்காக ஆலோசனைகள் வழங்கினார். அந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்திருந்தன.

தேர்தலில் வெற்றிப் பெற்ற நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வரானார். தனது திட்டக் குழு ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார்.

2017ல் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசின் ஆலோசகரானார். அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி. அமரீந்தர் சிங் முதல்வரானார்.

பிரசாந்தின் வெற்றி ஓட்டத்தை 2017 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தடுத்து நிறுத்தியது. அந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரசின் தேர்தல் வியூக ஆலோசகராக பணியாற்றினார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அந்தத் தேர்தலில் பிரசாந்த் சொன்ன ஆலோசனை உ.பி. காங்கிரஸ்காரர்கள் கேட்கவில்லை என்ற விமர்சனமும் உண்டு.

2019ல் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ஆலோசகரானார். அந்தத் தேர்தலில் வென்று ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்.

2020 டெல்லி தேர்தல். ஆம் ஆத்மிக்கு ஆலோசனைகள் தந்தார். ஆம் ஆத்மி வென்று அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார்.

2021ல் இரண்டு கட்சிகளுக்கு ஆலோசனையாளராக பணியாற்றினார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும் தமிழ் நாட்டில் திமுகவுக்கும் வியூக ஆலோசனை தந்தார். இரண்டு கட்சிகளும் இப்போது ஆட்சிக் கட்டிலில்.

2011லிருந்து தேர்தல் வியூகங்கள் அமைத்துக் கொடுத்து வரும் பிரசாந்த் கிஷோர் சறுக்கியது 2017 உத்தரப் பிரதேச தேர்தலில் மட்டும்தான்.

இந்த வெற்றி வரலாறு அவரை உற்று நோக்க வைக்கிறது. காங்கிரசை அவரால் மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

பிரசாந்த் கிஷோர் ஒரு ஏமாற்றுக்காரர். வெற்றி பெறும் குதிரையின் மேல் சாவாரி செய்து என்னால்தான் வெற்றி என்று பெருமிதம் கொள்பவர் என்று அவரை விமர்சிக்கிறவர்கள் கூறுகிறார்.

அவரால் ஏன் 2017ல் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று கேள்வியையும் கேட்கிறார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்களும் கேள்விகளும் இருந்தாலும் பிரசாந்த் மீதான கவனம் கூடியிருக்கிறது. தனது வாக்கு வங்கியை வேகமாக இழந்து வரும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியுமா? ஆட்சியில் அமர்த்த முடியுமா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

பிரசாந்த் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. கட்சியில் இணைந்து வியூகம் அமைக்கப் போகிறாரா அல்லது வெளியிலிருந்து வியூக ஆலோசனைகள் தரப் போகிறாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் காங்கிரஸ்காரர்களுக்கு உற்சாகம் வந்திருக்கிறது.

2014ல் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி பிரதமர் மோடியை பிரதமராக்கிய பிரசாந்த் கிஷோர் 2024ல் பாஜகவை வீழ்த்துவாரா? காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவாரா? அவரது வியூகங்கள் வெற்றி பெறுமா?

இரண்டு வருடங்களில் தெரிந்துவிடும். காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...