வீடு என்பது மகிழ்ச்சி, நிம்மதி, சிரிப்பு, அழுகை, துக்கம், அமைதி, ஞாபகம் போன்ற பலவித உணர்வுமிக்க தருணங்களால் நிறைந்த ஒன்று. அனந்தம் எனும் வீட்டில் என்ன மாதிரியான சம்பவங்களெல்லாம் நிகழ்கிறது என்பதே இந்த வெப் தொடரின் கதை.
அனந்தம் வீட்டை வாங்கி தன் மனைவி மரகதத்துடன் குடியிருக்கிறார் வெங்கடேசன். பல வருடங்கள் குழந்தையில்லாமல் மன வருத்தத்தில் இருக்கும் இவர்களுக்கு இந்த வீட்டுக்கு வந்ததும் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. மகனுக்கு அனந்தம் என்று பெயர் சூட்டுகின்றனர்.
வீட்டை ஓர் உயிருள்ள ஜீவனாகப் பார்க்கிறாள் மரகதம். வெளியூரில் வேலை கிடைக்கவே வீட்டை வாடகைக்கு விட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு குடும்பங்கள் அனந்தம் வீட்டிற்கு குடி வருகின்றனர். அவர்களுக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை, வீட்டையே ஒரு கதாபாத்திரமாக்கி கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ப்ரியா.
8 அத்தியாயங்களாக ப்ரியா எழுதியிருக்கும் இந்தக் கதைகளில் சமூகத்தின் பிரச்சனைகளையும், டேபூ என்று ஒளித்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களையும் பேச துணிந்திருப்பது பாராட்டுக்குரியது.
ஓரினச் சேர்க்கை, குழந்தை பாலியல் தொல்லை, மடந்தைப் பெண்ணுடன் காதல், கண் தெரியாதவரின் வாழ்க்கை, குற்றவுணர்வால் ஏற்படும் உளவியல் சிக்கல் என பேசா பிரச்சினைகளை விரிவாக திரைக்கதையாக்கி இருக்கிறார், ரசனையுடன்.
பல வருடங்களுக்குப் பிறகு வெங்கடேசனுக்கு உடல் நலம் குன்றுகிறது. எழுத்தாளரான அவர் மகன் அனந்த் வீட்டுக்கு திரும்புகிறார். அனந்தம் வீட்டுக்கு குடி வந்தவர்களின் வாழ்க்கைகளை இணைத்து கதையாக எழுத முனைகிறார்.
ஊருக்கே உபதேசம் செய்யும் வெங்கடேசனால் தன் மகன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் (gay) என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டுத் துரத்துகிறார்.
முற்போக்கு சிந்தனை என்பது, தனக்கும் தன் வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பாதகமும் இல்லாத வரைதான் என்பதை மிகவும் அழகாகப் படமாக்கியிருக்கிறார் ப்ரியா.
கண் தெரியாத சீதாவை சொத்துக்காக மணம் முடித்த சுந்தர், விவாகரத்தான லலிதா மீது ஆசைக் கொண்டு, சீதாவை கொலை செய்துவிட்டு அவரை மணமுடிக்கிறார். பின்னொரு காலத்தில் லலிதாவின் மகன் பாலு அதே வீட்டிற்கு குடி வருகிறார். அங்கே சீதா பேயாக இருப்பதாகவும் தன்னை அவள் துரத்துவதாகவும் லலிதா ஒரு பேய்க் கதையைப் பின்னியிருக்கிறார். குற்ற உணர்ச்சியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலையும் செய்து கொள்கிறார் லலிதா. ஆனால், பாலுவைப் பொருத்தவரை தன் அம்மா தான் உலகத்திலேயே மிகவும் நல்லவள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு மனிதனால் எல்லா மனிதனுக்கும் கெட்டவனாகவும் வாழ்ந்து விட முடியாது, அதே போல நல்லவனாகவும் வாழ முடியாதென்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இந்தக் கதையில்.
இன்னொரு கதையில் பார்வதி எனும் குழந்தை, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறது. இதைக் குடும்பத்தில் சொன்ன போதிலும், அதை யாரும் கண்டுகொள்ளாமல் விடவே மன உளைச்சலுக்கு ஆளாகிறாள் பார்வதி. பெற்றோர்களும் அக்காவும், அண்ணனும், உற்றமும், சுற்றமும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நிலையில், அவர்கள் அதை செவி கொடுத்து கேட்காத பட்சத்தில் இன்னும் பார்வதி போன்ற இன்னொரு குழந்தைக்கு நம் சமூகம் ஒரு நரகமே என்பதை அழுத்தமாக பதிவு செய்ததற்கு இயக்குனருக்கு நன்றி.
அடுத்ததாக ஒரே வீட்டில் மூன்று பெண்கள். மகள் சுஜாதா, அம்மா ஷைலஜா, பாட்டி சரோஜா. அந்த வீட்டுக்கு பேயிங் கெஸ்டாக கிருஷ்ணன் வருகிறார். அவரை மூவருக்குமே பிடித்துப் போகிறது. அதனால் ஏற்படும் சலசலப்பை நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருக்கின்றனர்.
இறுதியாக கிருஷ்ணனுக்கு பாட்டி சரோஜா மீதுதான் காதல் என்று தெரிந்ததும் அடுத்தக் கட்டமாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே இந்த எபிசோடின் மீதிக் கதை.
அனந்தத்தில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத கதை என்றால், தொழிலில் முடங்கிப் போன ஒருவன் அங்கு குடி வந்த பிறகு பின்னாளில் பெரிய விஞ்ஞானி ஆகும் கதைதான். இதில் நடித்தவர்களின் நடிப்பும் சுமாராக இருந்தது.
இளமைக் கால பிரகாஷ் ராஜாக நடித்திருக்கும் அரவிந்த் சுந்தரின் நடிப்பு பிரமாதம். சிறு வயது பிரகாஷ் ராஜை பார்ப்பது போல் இருக்கிறது. சம்யுக்தாவின் அப்பாவித்தனம் அழகு. சீதாவாக அம்ருதா கலக்கியிருக்கிறார். அஞ்சலி ராவும் நன்று. அம்மாவாக மிளிர்கிறார் இந்திரஜா. அளவான முகபாவனைகள் லட்சுமி கோபாலசாமிக்கு அளவில்லா அழகு. பார்வதியாக மிர்னா வாழ்ந்திருக்கிறார். வினோதினிக்கு நகைச்சுவை பலம். விவேக் ராஜகோபால், வினோத் கிஷன் காதல் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. ஜான் விஜய், அர்ஜுனன் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பொறுப்பை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள். எமோஷனல் காட்சிகளில் சம்பத் அருமையாக நடித்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரகாஷ் ராஜ். பெயரைச் சொன்னாலே போதும் நடிப்பை தரம் பார்க்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு எபிசோடும் சுமார் 1 மணி நேரம் என்பது சலிப்புத் தருகிறது. சுருக்கியிருந்தால் வீரியம் அதிகமாக இருந்திருக்கும்.
இந்தத் தொடரின் இன்னொரு பலவீனம் மேலோங்கி நிற்கும் நாடகத் தன்மை. திரைக் கதையின் நீளம் இந்த நாடகத் தன்மையை மேலும் கூட்டுகிறது. காட்சிகள் மெல்ல நகர்வது போன்ற உணர்வைத் தருகிறது. கத்தரி போட்டிருக்கலாம்.
எல்லாம் சேர்ந்ததே வீடு என்பதால், இந்தக் குறைகளையும் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு, ஒரு முறை அனந்தத்திற்குள் போய் வரலாம். நல்ல அனுபவம் கிடைக்கும். ஜீ-5ல் (ZEE5) பார்க்கலாம்.