’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் தமிழனின் சினிமாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமரர் கல்கி எழுதிய நாவலில் இருந்த முக்கியமான காட்சிகள் மற்றும் சம்பவங்கள் முதல் பாகத்தில் இடம்பெறவில்லை. முக்கிய கதாபாத்திரங்களுடன் இணைந்து வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கான பின்னணி விளக்கப்படவில்லை என்பது போன்ற பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விமர்சனங்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் மணிரத்னம் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார்.
முதல் கட்டமாக இரண்டு வாரங்கள் கேரளாவிற்கு செல்கிறார் மணி ரத்னம். அங்கு கதை விவாதம் மற்றும் லொகேஷன் வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறாராம்.
தீபாவளிக்கு பின் தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பிஎஸ்- 2 வேலைகள் ஆரம்பமாக இருக்கிறதாம்
இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன. இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக்கும் முக்கிய காட்சிகளை சேர்க்கும் எண்ணமிருப்பதால் இந்த கதை விவாதம் நடைபெற இருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
வேகமெடுக்கும் ஏகே 62
ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இதனால் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏகே 62 நிலவரம் பற்றி விசாரித்தால், படத்தின் கதை விவாதம் முழுவீச்சில் போய் கொண்டிருக்கிறது. திரைக்கதை வேலைகளின் முதல் கட்டம் முடிவடைந்து இருக்கிறது என்கிறார்கள்.
ஒரு பக்கம் ஷாரூக்கானுடன் நடித்துவரும் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா பிஸியாக இருக்க, கணவர் விக்கி டிஸ்கஷனில் மூழ்கி இருக்கிறாராம்.
டிஸ்கஷன் இருப்பதால் இந்த ஜோடி தங்களது தலை தீபாவளி பற்றி கூட பெரிதாக திட்டமிடவில்லையாம். இதனால் விக்கி ஒரு பக்கம், நயன் ஒரு பக்கம் தங்களது வேலைகளில் இருக்கிறார்கள்.
டிஸ்கஷனை தொடர்ந்து ஏகே 62-ல் நடிக்கவிருக்கும் நட்சத்திர தேர்வு வேலைகளை தீபாவளி கழித்து விக்கி டீம் ஆரம்பிக்க இருக்கிறதாம்.
இந்த முறை பெரிய நட்சத்திர பட்டாளத்தை நடிக்க வைக்கும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்.
கோபத்தில் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்
விஜய் நடிக்கும் முதல் நேரடி தெலுங்குப் படம் ’வாரிசு’. இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெலுங்கில் ’பொன்னியின் செல்வன்’ பட த்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர்தான் ஷங்கர் இயக்கும் முதல் தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளரும் கூட.
கொஞ்ச நாட்களாக கிடப்பில் கிடந்த ‘இந்தியன் – 2’ படம், கமலின் ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் லைகாவுடன் கைக்கோர்த்த பிறகு உயிர்ப்பெற்று இருக்கிறது.
இதனால் ராம் சரணை வைத்து இயக்கும் தெலுங்குப் படத்தில் பிஸியாக இருந்த ஷங்கர், ‘இந்தியன் -2’ பக்கம் கவனத்தை திருப்பினார். இதற்கிடையில் டோலிவுட்டில் வேலை நிறுத்தம் நடக்க, இந்தியன் -2 ஷூட்டிங்கை ஆரம்பித்தார் ஷங்கர்.
’இந்தியன் – 2’ வேலைகளில் ஷங்கர் கவனம் செலுத்துவதால், தெலுங்குப் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
பொதுவாக ஷங்கர் தான் இயக்கும் படங்களில், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களையே கமிட் செய்வார். ஆனால் ஆரம்பத்தில் தெலுங்கு டெக்னீஷியன்களை கமிட் செய்திருந்தார் தயாரிப்பாளர். இவர்களுடன் செட் ஆகாததால், தனக்கு செட்டாகிற டெக்னீஷியன்களை மாற்ற சொல்லியிருக்கிறார் ஷங்கர். வேறு வழியில்லாமல் கூடுதல் சம்பளத்தில் புதிய டெக்னீஷியன்களை படத்தில் வேலைப் பார்க்க ஓகே சொல்லிவிட்டார் தில் ராஜூ.
அதே போல் பட்ஜெட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கிறார் தில் ராஜூ.
இப்படி இவ்வளவு செய்த பின்பும் ஷங்கர் தெலுங்குப் படத்தின் வேலைகளில் மும்முரம் காட்டவில்லை என்கிறது அப்பட யூனிட்.