No menu items!

திமுக Vs பா.ரஞ்சித் – ஆம்ஸ்ட்ராங் கொலையில் கேள்விகள்

திமுக Vs பா.ரஞ்சித் – ஆம்ஸ்ட்ராங் கொலையில் கேள்விகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் எழுப்பியுள்ள கேள்விகள் இவை:

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் ஆம்ஸ்ட்ராங்குக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!


இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும்போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

திமுக ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?

ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை) வழிநடத்தும். ஜெய்பீம்!


பா.ரஞ்சித்தின் இந்தக் கேள்விகளுக்கு திமுகவினர் சமூக ஊடகங்களில் எதிர் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். @shafeeqkwt கேட்டிருக்கும் அந்தக் கேள்விகள்:

ஆம்ஸ்ட்ராங் உடன் எப்பொழுதும் 10-15 நபர்கள் கூடவே இருப்பார்கள் என கூறப்படுகிறது.மாலை/முன்னிரவு தான்.நள்ளிரவு கூட இல்லை.படுகொலை நடந்த அன்று ஏன் இல்லை.?

அவர் விலையுயர்ந்த நவீன ரக துப்பாக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.எதிரிகளுக்கும் தெரிந்து தான் இருக்கும்.அருகில் வர பயம் இருக்கும். ஆனால் வீட்டில்/வாசலில் நிற்கும் போது அவருடன் துப்பாக்கி இருக்காது என நெருக்கமானவர்கள் தவிர வேறு யாருக்கு தெரிந்திருக்கும் ? அது எப்படி கொலையாளிகளுக்கு தெரிந்தது.

குடியிருப்பு பகுதி,மக்கள் தொகை அடர்த்தியான பகுதி,சிறிய அளவிலான அலுவலகம் இடம்.இந்த இடத்தில் அடக்கம் செய்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு இடைஞ்சலாக இருக்கும்.? மேலும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஒத்துழைப்பும் உதவியும் செய்ததாக ஆம்ஸ்ட்ராங் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.உண்மை இவ்வாறு இருக்கும் போது tool kit பரப்பும் அதே அவதூற்றை நீங்களும் கையில் எடுத்திருப்பதின் நோக்கம் என்ன?

சரணடைந்தவர்கள் மற்றும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் மட்டுமன்றி இந்த கொலைக்கான motivation, இந்த கொலைக்கு முன்னால் நடந்த கொலைகள் மற்றும் அதன் பின்னணி வழக்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதற்கட்ட விசாரணை அடிப்படையில் காவல்துறை சார்பில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதெல்லாம் ஆரம்ப கட்டம் தான். திட்டமிட்டு ஏவியவர்கள், அவர்களை இயக்கியவர்கள், வேறு பின்னணி ஏதும் உள்ளதா !இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் காவல்துறையின் அடுத்தடுத்த கட்ட விசாரணையில் மேலும் விபரங்கள் வெளிவரத்தான் போகிறது. ஆனால் tool kit கும்பலுடன் இணைந்து அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்ற தொனியில் உங்கள் கேள்வியும் உள்ளது,அப்படி என்றால் உண்மையான குற்றவாளிகளாக யாரை கருதுகிறீர்கள்/றார்கள் ? சந்தேகம் எழுபபும் யாரும் வேறு எதனால் என பேச மறுப்பது ஏன் ? திசை திருப்ப முயற்சிக்கும் tool kit கும்பலுக்கு நீங்களும் துணை போவது ஏன் ?

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் தலித் தலைவர் தான்.கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி மற்றும் கும்பல் தலித்துகள் என கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர் தலித் என சுட்டிக்காட்டுபவர்கள் யாரும் இந்த படுகொலையைச் செய்தவர்கள் தலித் என கூற மறுப்பது ஏன் ?


படுகொலைக்கு பிறகு எந்த அசம்பாவிதம் கலவரம் நடக்காமல் சட்டம் ஒழுங்கு கெடாமல் கட்டுக்குள் வைத்தது தமிழ்நாடு அரசு.படுகொலை நடந்ததும் சில மணித்துளிகளில் எந்தவிதமான விபரங்கள் வெளிவரும் முன்னர் மட்டுமின்றி ஆரம்பகட்ட விபரங்கள் ஓரளவு வெளிவந்த பின்னரும் கூட திட்டமிட்டு ஒரு மாபியா கும்பல் சமூகவலைதளங்களிலும் சில ஊடகங்கள் மூலமும் திமுகவை குற்றவாளியாக்கும் முயற்சியில் பல அவதூறுகளையும் பொய்களையும் அள்ளிவீசி திமுக தலித்துகளுக்கு எதிரி என ஒரு Narrative செட் செய்ய களம் இறங்கியது.அதை எந்த ஒரு திமுககாரன்/திமுக அனுதாபி/சமூகநீதியால் பலன் பெற்ற எவனும் வேடிபார்த்துக் கொண்டு இருக்க மாட்டான்.

அதற்கான எதிர்வினைகள் எதிர் கேள்விகள் எழத்தான் செய்யும்.ஏன் அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லையா ? கேள்விகள் மூலம் அம்பலப்படும் என்ற பதட்டமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...