கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. ரிலீஸாகி 2 வாரத்துக்கு மேல் ஆகியும் இப்படம் இன்னும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமூக வலைதளப் பக்கங்களில் எல்லோரும் இப்படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை இப்படத்தை இயக்கிய சிதம்பரத்தின் முதல் திரைப்படம் ‘ஜான் இ மன்’. பசில் ஜோசப், அர்ஜுன் அசோகன், லால் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தைப் போலவே நட்புக்கு ஜே சொல்லும் படம்தான் இதுவும். கனடாவில் யாருமில்லாத ஒரு பனிமலைப் பகுதியில் வேலை பார்ப்பவர் பசில் ஜோசப். பனிமலையைத் தவிர துணைக்கு யாருமில்லாமல் தனிமையில் வாடும் இவர், தன் பிறந்தநாளை நண்பர்கள் சூழ பெரிய அளவில் கொண்டாட திட்டமிடுகிறார்.
இதற்காகவே கனடாவில் இருந்து கேரளாவுக்கு வரும் பசில் ஜோசப், அங்குள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை 10-ம் வகுப்பில் தன்னுடன் படித்தவர்களின் ரீ யூனியனாகவும் கொண்டாட ஆசைப்படுகிறார். ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் பேசி, வண்ண விளக்குகள் அலங்காரம், வாண வேடிக்கை, பிறந்த நாள் கேக், டிஜே என்று எல்லாவற்றுக்கும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பு, அந்த வீட்டில் எதிர்வீட்டில் வசிக்கும் ஒரு வயதான மனிதர் மரணமடைகிறார்.
எதிர்வீட்டில் ஒருவர் இறந்து, எல்லோரும் அழுதுகொண்டு இருக்கும்போது, பிறந்தநாள் கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் பிறந்த நாளுக்காக கனடாவில் இருந்து வந்த பசிலை ஏமாற்ற விரும்பாமல், அவரது பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் திட்டமிடுகிறார்கள். இது மரணம் அடைந்தவரின் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்படும் சூழலை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் சிதம்பரம்.
ஒரே இரவில் 2 வீடுகளில் நடக்கும் சம்பவங்களை கொஞ்சம்கூட சலிப்படைய வைக்காமல் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சிதம்பரம். பிறந்த நாள் கொண்டாடும் வீட்டின் காட்சிகளை சொல்லும்போது நம்மைச் சிரிக்கவைக்கும் இயக்குநர், அடுத்த நிமிடமே இழவு வீட்டின் காட்சிகளை காட்டும்போது நம்மை உருகவைக்கிறார்.
10-ம் வகுப்பு மாணவர்களின் ரீ யூனியன், அந்த வகுப்பில் படித்த காதல் ஜோடியின் சந்திப்பு என்று வேறொரு டிராக்கிலும் கதை பயணிக்கிறது.
இந்த படத்தின் ஹைலைட்டான காட்சி நாயகன் பசிலும், இறந்தவரின் மகனும் பேசிக்கொள்வதுதான். தனக்கு எல்லோரும் வேண்டும் என்று விரும்பும் நபர் பசில். ஆனால் இறந்து போன முதியவரின் மகன், உறவுகளையும், நட்பையும் வெறுப்பவர். தனக்கு யாரும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர். அவரிடம் பேசும் பசில் கதாபாத்திரம், வாழ்க்கையில் யாருடனும் பேசாமல் வாழ்வது எத்தனை பெரிய சாபம் என்று விளக்குகிறது.
இயல்பாக சென்றுகொண்டிருக்கும் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட் க்ளைமேக்ஸில் வருகிறது. அது என்ன என்பதை படித்து தெரிந்துகொள்வதை விட பார்த்து தெரிந்துகொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும்.