காலையில் ஆபீசுக்கு வராமல் போனில் வந்த ரகசியா, “கர்நாடக மாநில தேர்தல் நிலவரத்தை தெரிஞ்சுக்க பெங்களூருவுக்கு வந்திருக்கேன்” என்றாள்.
“அமைச்சரவை மாற்றம், ஓபிஎஸ் – தினகரன் சந்திப்புன்னு தமிழக அரசியலே பரபரப்போட உச்சத்துல இருக்கு. இந்த நேரத்துல கர்நாடக தேர்தல் ரொம்ப முக்கியமா? பெரிய அண்ணாமலைன்னு நினைப்பா?”
“கவலைப்படாதீங்க பாஸ். நான் கர்நாடகால இருந்தாலும் தமிழ்நாட்டு செய்திகளை ஃபாலோ பண்றதை விடமாட்டேன். உங்களுக்கு தேவையான விஷயங்களைக் கேளுங்க. பதில் சொல்றேன்.”
“இன்னும் ரெண்டு நாள்ல அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு அறிவாலயத்துலயும், கோட்டையிலயும் பேசிக்கறாங்களே… “
“இந்த முறை அமைச்சரவை மாற்றத்துக்கு முக்கிய காரணம் பிடிஆர். ஆடியோ விஷயத்துல சர்ச்சையைக் கிளப்பின நிலையில இனியும் அவரை நிதியமைச்சரா தொடரவைக்க வேண்டாம்னு முதல்வர் நினைக்கறாரு. அதேநேரத்துல பிடிஆரை அமைச்சரவையில இருந்து நீக்கினா ஆடியோ விஷயம் உண்மைன்னு ஆகிடுமோன்னு நினைக்கறார். அதனால அவருக்கு வேறு இலாகாவைக் கொடுக்கலாமான்னு யோசிக்கறார் முதல்வர்.”
“இதுக்கு பிடிஆரோட ரியாக்ஷன் என்ன?”
“சாதனை விளக்க பொதுக்கூட்டத்துல கலந்துக்கறவங்க பட்டியல்ல இருந்து தன்னை நீக்கினதால முதல்வர் மனசுல தனக்கு இடம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டார் பிடிஆர். வேற பதவிக்கு தன்னை மாத்தறதை டீ பிரமோஷனா அவர் நினைக்கறார். அப்படி கண்துடைப்பா வர்ற பதவியை ஏத்துக்கறதுக்கு பதில் அமைச்சர் பதவியில இருந்தே ராஜினாமா செஞ்சிடலாமான்னு அவர் யோசிச்சுட்டு இருக்கார். இப்போது வேண்டாம். கட்சிக்கே கெட்டப் பெயர் வரும்னு சில முக்கிய பெரியவங்க அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. அதனால அவர் தயங்குகிறார்”
“புதிய நிதியமைச்சரா தங்கம் தென்னரசு வர வாய்ப்பு இருக்கறதா சொல்றாங்களே?”
“ஆமாம், யாருக்குலாம் வாய்ப்புனு தனியா செய்தி தரேன். தனிக் கட்டுரையா எழுதிக்குங்க.”
“அதுவும் நல்லதுதான். சரி, சேப்பாக்கம் மைதானத்துல சபரீசனை ஓபிஎஸ் சந்திச்சு இருக்காரே?”
“ஜி ஸ்கொயர் வருமான வரி சோதனையால சபரீசன் தப்பி ஓட்டம்னெல்லாம் வதந்திகள் பரவிச்சு. இந்த வதந்திகளைப் பொய்யாக்க என்ன பண்றதுன்னு சபரீசன் யோசிச்சுட்டு இருந்தார். ‘நான் இந்தியாலதான் இருக்கேன். அதுலயும் சென்னையிலதான் இருக்கேன்’னு எல்லோருக்கும் சொல்றதுக்காகதான் அவர் சேப்பாக்கம் வந்தார். சும்மா வந்துட்டுப் போனா நல்லாருக்காதுனுன் வந்த இடத்துல ஓபிஎஸ்ஸையும் சந்திச்சிருக்கிறார். மைதானத்தில் இருந்தப்ப அங்க ஓபிஎஸ் வந்ததிருக்கறதா அவருக்கு தகவல் தெரிஞ்சிருக்கு. உடனே தன் உதவியாளர்களை அனுப்பி மரியாதை நிமித்தமா காபி சாப்பிட கூப்டிருக்கார். அவர் வந்ததும் அதைப் படமெடுத்து வெளியிட்டிருக்கார். இதனால சபரீசனைப் பத்தின வதந்திகள் மறைஞ்சுடுச்சு. இது சபரீசனுக்கு ப்ளஸ் ஓபிஎஸ்க்கு மைனஸ்”
”ஓபிஎஸ் எப்படி சம்மதிச்சார்?”
“அவருக்கு வேற வழி கிடையாது. மத்தியில பாஜககிட்டயும் சப்போர்ட் இல்லை. மாநிலத்துல திமுகவையும் பகைச்சுக்கிட்டா அவருக்கு கஷ்டம். இது ஓபிஎஸ்க்கு நல்லா தெரியும்”
“ஆனா இதனால ஓபிஎஸ்ஸைப் பத்தின வதந்திகள் அதிகமாயிடுச்சே? திமுகவுக்கு போறார், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப் போறர்னுலாம் சொன்னாங்களே”
“ஆமா, எல்லாம் எடப்பாடி டீம் கிளப்பிவிட்டது. இந்த வதந்திகளை சமாளிக்கதான் அடுத்த நாளே திமுக அரசு செய்த 15 துரோகங்கள்னு அறிக்கை வெளியிட்டார்.”
“ஓபிஎஸ் தினகரனை சந்திச்சதும் பெரிய நியூஸ் ஆகிடுச்சே? யார் முதல்ல கூப்ட்டதாம்?”
“ தினகரன் தான் முதல்ல ஓபிஎஸ்ஸை கூப்பிட்டு இருக்கார். வெளிப்படையான இந்த சந்திப்புக்கு முன்பே பல முறை சந்திச்சதாகவும் போன்ல தொடர்புல இருந்ததாகவும் செய்திகள் இருக்கு. நேரடியா மீட் பண்ணலாம் வீட்டுக்கு வாங்கனு தினகரன் கூப்பிட்ட போது, ‘நான் இன்னைக்கு புதுக்கோட்டையில இருக்கேன். நாளைக்கு வரேன்’ன்னு ஓபிஎஸ் சொல்லி இருக்கார். அடுத்த நாள் ஓபிஎஸ் கிளம்ப, அவரோட போக மத்த தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டலையாம். கடைசியில பன்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் அவரோட போயிருக்கார்”
“ஆமா, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் இப்படி யாருமே போகலையே..தினகரன் கூட சேர்றது அவங்களுக்குப் பிடிக்கலையா?”
“ஆமாம். சசிகலா குடும்பத்தை எதிர்த்துதான் வெளில வந்தோம். திருப்பி அவங்க கூடவே சேர்றதானு கேட்டிருக்காங்க. ஆனால் ஓபிஎஸ் தன்னோட பிளானை சொல்லியிருக்கிறார். தினகரனை சந்திக்க வரலைனாலும் என் கூடவே இருங்க. நல்லது நிச்சயம் நடக்கும்னு ஓபிஎஸ் சொன்னாராம். சசிகலாவையும் சந்திக்க முயற்சி பண்றாங்க. ஆனா இப்ப வேண்டாம்னு சசிகலா மறுத்துட்டாங்க”
”ஏன்?”
“கர்நாடக தேர்தல் முடிவுகள் வர்ற வரைக்கும் காத்திருப்போம். அதுக்கப்புறம் காய்களை நகர்த்துவோம்னு சசிகலா இருக்காங்க. கர்நாடக தேர்தல்ல பாஜக தோத்துருச்சுனா அதோட அரசியல் வேறு மாதிரி இருக்கும். அப்போ நமக்கு வாய்ப்பிருக்கும்னு தன்னோட நெருக்கமா இருக்கிறவங்ககிட்ட சசிகலா சொல்லியிருக்காங்க”
“என்ன வாய்ப்பு?”
“ஒன்றுப்பட்ட அதிமுகவுக்கு பாஜக ஏற்பாடு பண்ணும்னு அவங்க நம்புறாங்க. அப்ப அதுக்கு தலைமை தாங்க போகலாம்னு நினைக்கிறாங்க”
“இதெல்லாம் நடக்கற காரியமா? இன்னும் உலகம் சசிகலாவை நம்புதா?”
“அப்படிலாம் சொல்லாதிங்க. ஓபிஎஸ், தினகரன், சசிகலா போடுகிற கணக்கே வேற”
“என்ன கணக்கு?”
”அதிமுகன்ற கட்சி இப்போ நம்மகிட்ட இல்லை. அதனால நம்ம சாதி ஓட்டை ஒன்று திரட்டுவோம்கிற பிளான்ல இருக்காங்க. நம்ம சாதிக்கு எதிரா எடப்பாடி சதி செய்து நம்மகிட்டருந்து பிடுங்கிட்டு போய்ட்டாருனு பேசப் போறாங்க. இது அரசியல் ரீதியா வொர்க் அவுட் ஆகும்னு நம்புறாங்க. ஏன்னா எடப்பாடிக்கு மேற்கு, வடக்கு பகுதிகள்ல இருக்கிற ஆதரவு தெற்கு, டெல்டா பகுதிகள்ல இல்லை. அதை பயன்படுத்திக்கணும்னு திட்டம் போடுறாங்க. இப்படி வியூகம் அமைச்சா பாஜகவும் தங்களைத் தேடி வரும்னு ஆதரவாளர்கள்கிட்ட சொல்றாங்க”
“சதித் திட்டம்னு சொல்ற மாதிரி இது சாதி திட்டமா? எடப்பாடி அதிமுக எப்படி பார்க்கிறாங்க?”
“எடப்பாடி அதிமுகனு சொல்லாதிங்க. அதிமுகனு சொல்லுங்க. அவங்க இந்த சந்திப்பைப் பத்தி கவலைப்படவே இல்லை. இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்தும்னு நினைக்கிறாங்க. அவங்களோட ஒரே பயம், பாஜக என்ன செய்யும் என்பதுதான். அதனால கர்நாடக தேர்தல் ரிசல்ட்டை ஆர்வமா பாத்துக்கிட்டு இருக்காங்க. பாஜக தோக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க” சிரித்தாள் ரகசியா.
“ஆமா, ஐஏஎஸ் அதிகாரி அமுதா மேல அமைச்சர் ஐ.பெரியசாமி கோபமா இருக்கறதா சொல்றாங்களே?”
“ஏற்கெனவே முக்கிய இலகாவை தனக்கு முதல்வர் தரலைங்கிற வருத்தம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு இருந்திருக்கு. அவரை சமாதானப்படுத்த ஊரகத் துறையை கொடுத்தாங்க. இந்த நேரத்துல ஐஏஎஸ் அதிகாரி அமுதா தன்னை மதிக்கறதில்லை, அவரை மாத்தணும்னு புகார் சொல்லிட்டு இருக்கார் ஐ.பெரியசாமி. பிரதமர் அலுவலகத்தில் இருந்த அமுதாவை தமிழக அரசுப் பணிக்கு கொண்டுவந்ததே முதல்வர்தான் பிரதமர் அலுவலகத்துல இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்துக்கு சில விஷயங்களை அமுதா செஞ்சு கொடுத்துட்டு வர்றார். இந்த நேரத்துல அவரை மாத்தச் சொல்லி ஐ.பெரியசாமி மல்லுக்கட்டறது முதல்வரை தர்மசங்கடத்துல ஆழ்த்தியிருக்கு.”
“முதல்வர் என்ன செய்யப் போறார்?”
“எப்பவும் போல அமைதியா கடந்து போகப் போகிறார்”
“அமைதியான முதல்வரா? திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்துல ஆளுநரை ஆவேசமா தாக்கி பேசியிருக்காரே? கவர்னர்கிட்டருந்து பதில் அறிக்கை வருமா?”
“இதுபத்தின விவரங்களையெல்லாம் ஆளுநர் சேகரிச்சுட்டு இருக்காராம். அதை டெல்லிக்கு அனுப்ப அவர் திட்டமிட்டு இருக்கார். அதேமாதிரி சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தில் ஆளுநர் சொல்வது தவறுன்னு டிஜிபி மறுப்பு அறிக்கை வெளியிட்டதையும் உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுபோயிருக்கார் ஆளுநர்.”
“தெலங்கானா ஆளுநர் தமிழிசை தமிழகத்துல அதிகமா சுத்திட்டு இருக்காரே?”
“தீவிர அரசியலுக்கு திரும்பவும் வரணும்கிறது அவரோட ஆசை. இந்த ஆசைக்கு சாதகமா டெல்லியும் தலையாட்டி இருக்கறதா சொல்றாங்க. அதனாலதான் நாடாளுமன்ற தேர்தலை மனசுல வச்சு தமிழ்நாட்ல ரவுண்ட் கட்டிட்டு இருக்கார் தமிழிசை. சரி, நிறைய கேள்வி கேக்காதிங்க. கர்நாடாக எலெக்ஷனை முடிச்சுட்டு ஃப்ரீயா பேசுறேன்” என்று தொலைபேசியை வைத்தாள் ரகசியா.